உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸ் நகரில் போலே பாபா என்ற சாமியாரின் சொற்பொழிவைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த நிலையில், அங்கு ஏற்பட்ட நெரிசலில் 116 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலே பாபாவாக மாறிய சூரஜ் பால் சிங்
உத்தரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் பிறந்தவர் போலே பாபா. விவசாய தம்பதியான நன்னே லால் – கட்டோரி தேவிதான் அவரது பெற்றோர். போலே பாபாவுக்கு பெற்றோர் வைத்த பெயர் சூரஜ் பால் சிங். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர். 1990-ல் தனது 26-வது வயதில் வேலையை ராஜினாமா செய்த சூரஜ் பால் சிங், தனது பெயரை நாராயண் சாகர் ஹரி என்று மாற்றிக்கோண்டு ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது கிராமத்திலேயே ஆசிரமம் ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.
நாராயண் சாகருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. காவல் துறையை விட்டு வெளியேறி ஆன்மீகத்தில் ஈடுபட்ட இவரை போலே பாபா என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் தனது கிராமத்தில் உள்ளவர்களிடையே மட்டும் புகழ்பெற்ற போலே பாபாவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. இன்று இவருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். பொதுவாக சாமியார்கள் காவி உடைதான் அணிவார்கள். ஆனால் போலே பாபா வெள்ளை நிற உடைகளைத்தான் விரும்பி அணிவார். தனக்கு வரும் நன்கொடைகளை பக்தர்களுக்காக செலவழிப்பதாக கூறும் போலே பாபாவுக்கு, சமூக வலைதளங்கள் எதிலும் கணக்கு இல்லை.
ஹாத்ரஸில் நடந்தது என்ன?:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் ஆன்மிக சொற்பொழிவு நடத்துவது போலே பாபாவின் வழக்கம். அந்த வகையில் நேற்று (ஜூலை 2) ஹாத்ரஸ் நகரில் அவரது சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு அனுமதி கோரும்போது சுமார் 80,000 பேர் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று போலே பாபா தரப்பில் கூரப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் நிகழ்ச்சியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் போலே பாபா மேடைக்கு செல்ல தனிப் பாதை அமைக்கப்பட்டிருந்தது. வழிபாடும், சொற்பொழிவும் முடிந்தபிறகு, நிகழ்ச்சி நடந்த இடத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. ‘போலே பாபா’ தனது வாகனத்தை நோக்கிச் சென்றபோது, அதிக கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 116 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவம்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலே பாபாவின் பாத மண்ணை சேகரிக்க மக்களிடையே ஏற்பட்ட போட்டியே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்களும், பக்தர்களும் கூறுகின்றனர்.
போலீஸார் தேடல்
தனக்காக கூடிய பக்தர்கள் நெரிசலில் சிக்கியதை அறிந்த பிறகும் போலே பாபா சொகுசு வாகனத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளார். இந்த சம்பவத்தில் பலர் இறந்ததை கேள்விப்பட்ட அவர் மனைவிவியுடன் தலைமறைவாகி உள்ளார். தன் செல்போனையும் அணைத்து வைத்துள்ளார். இந்நிகழ்ச்சி தொடர்பாக வழக்கு பதிவு செய்த உபி போலீஸார் போலே பாபாவையும், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களையும் தேடி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வைரமுத்து கவிதை
சத்ரஸ் சம்பவம் தொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கவிதை
ஆன்மிகச்
சொற்பொழிவாளரின்
காலடி மண்ணைக்
கவரவேண்டும் என்றுதான்
ஒருவர் காலடியில் ஒருவர்
செத்திருக்கிறார்கள்
இருதயக்கூடு
நொறுங்குகிறது
மது போதைக்கும்
மத போதைக்கும் உள்ளது
பூவுக்கும் புஷ்பத்துக்கும்
உள்ள வேறுபாடுதான்
கல்வி பொருளாதாரம்
பகுத்தறிவு என்ற மூன்றிலும்
மேம்படாத தேசம்
இப்படித்தான்
தவணை முறையில்
இறந்துகொண்டிருக்கும்
‘இருப்பவர்கள் கண்களை
இறப்பவர்கள் திறக்கிறார்கள்’
என்றோர் முதுமொழி உண்டு
இறந்தவர்கள்
இருப்பவர்களுக்குப்
பாடமாகிறார்கள்
படிப்போமா?