ஆபீஸ் டிவியில் நாடாளுமன்ற விவாதங்களை பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தாள் ரகசியா.
“எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, நாடாளுமன்றத்தில் பேசின முதல் உரையிலேயே ராகுல் காந்தி வெளுத்து வாங்கியிருக்காரு பார்த்தீங்களா?”
“அது மட்டுமா… எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடங்கள் கிடைச்சதால, நாடாளுமன்ற விவாதமும் ராத்திரி வரை நடந்திருக்கே. ஜனநாயகத்துக்கு இது நல்லதுதானே?”
“ஜனநாயகத்துக்கு நல்லதோ இல்லையோ, இது தங்களுக்கு நல்லதில்லைன்னு பாஜக நினைக்குது. கடந்த 10 ஆண்டுகளா மோடியை மட்டும் ஆதரிச்சுட்டு இருந்த வடநாட்டு மீடியாக்கள், இப்ப ராகுல் காந்திக்கும் அதே வேகத்துல முக்கியத்துவம் கொடுக்கறதை அவங்களால தாங்கிக்க முடியலை. மீடியாக்களை திரும்பவும் தங்களோட வழிக்கு கொண்டுவர்றது எப்படின்னு அவங்க யோசிக்கத் தொடங்கி இருக்காங்க.”
“ராகுல் காந்தியோட பேச்சு மீடியால பரவறதை தடுக்க, அந்த உரையோட 11 பகுதிகளை அவைக் குறிப்புல இருந்து நீக்கி இருக்காங்களே?”
“ஆனா அவை குறிப்பில இருந்து நீக்கறதுக்கு முன்னாலயே அதெல்லாம் வெளிய பரவிடுச்சே. தேவையான அளவுக்கு இந்த அரசை அது டேமேஜ் பண்ணிடுச்சேன்னு பிரதமரும், அமித் ஷாவும் கவலைப்படறாங்க. ராகுல் காந்தியோட பேச்சை பாஜக உறுப்பினர்கள் எதிர்த்த அளவுக்கு கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கலைங்கிற வருத்தமும் அவங்களுக்கு இருக்கு.”
“கூட்டணி கட்சிகளைப் பத்தி பேசினதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கணும்னு ஒரு கோரிக்கையை நிதிஷ் குமாரோட கட்சி முன்வச்சிருக்கே?”
“ஆமாம். நிதிஷ் குமாரோட ஐக்கிய ஜனதா தளம் கட்சி செயற்குழு கூட்டத்தில் பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து தரணும்கிற கோரிக்கையை எழுப்பி இருக்காங்க. இதைப் பார்த்த காங்கிரஸ் கட்சி, இந்த கோரிக்கைக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தர நிதிஷ் குமாருக்கு தில் இருக்கான்னு அவருக்கு கொம்பு சீவி விட்டிருக்காங்க. ஏற்கெனவே தாங்கள் கேட்ட இலாகாவைத் தரலைன்னு கோபத்துல இருக்கிற நிதிஷ் குமாரை, இந்த பிரச்சினையை வச்சு வெளிய கொண்டுவர்றது காங்கிரஸ் கட்சியோட ப்ளான். இதை எப்படி சமாளிக்கறதுன்னு பாஜக தலைவர்கள் தலையை பிச்சுக்கறாங்க.”
“பேசாம பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்திட வேண்டியதுதானே?”
“அப்படி கொடுத்தா சந்திரபாபு நாயுடு சும்மா இருப்பாரா? அவரும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நிக்க மாட்டாரா? அதனால இதை வேற விதமா எப்படி டீல் பண்றதுன்னு பிரதமர் யோசிச்சுட்டு இருக்கார்.”
“எந்த வருஷமும் இல்லாம வெங்கய்யா நாயுடு பிறந்த நாளுக்கு இந்த முறை பிரதமர் பெரிய வாழ்த்துக் கடிதமெல்லாம் எழுதி இருக்காரே?”
“இதே வெங்கய்ய நாயுடு, தன்னை ஜனாதிபதி தேர்தல்ல நிறுத்தச் சொல்லி பிரதமர்கிட்ட கேட்டப்ப, அதை அவர் நிராகரிச்சார். அப்ப வெங்கய்ய நாயுடுவோட தயவு பிரதமருக்கு தேவையில்லாம இருந்தது. ஆனா இப்ப அவரோட தயவு பிரதமருக்கு தேவைப்படுது. அதுதான் காரணம். ஆந்திரால சந்திரபாபு நாயுடுவோட பாஜக கூட்டணி அமைக்க முக்கிய காரணமா இருந்தவர் வெங்கய்ய நாயுடு. அந்த கட்சியை தாஜா பண்ணி வைக்க வெங்கய்ய நாயுடுவோட தயவு பிரதமருக்கு தேவைப்படுது. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. பிரதமருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையில சில முட்டல் மோதல்கள் இருக்கு. இப்போதைக்கு ரெண்டு தரப்புக்கும் நடுவுல வெங்கய்ய நாயுடுதான் பாலமா இருக்கார். அதனாலதான் பிரதமர் அவருக்கு பிறந்த நாள்ல பெரிய அளவுல பாராட்டு பத்திரம் வாசிச்சிருக்கார். ஆனா இதனால வெங்கய்ய நாயுடு பழசையெல்லாம் மறந்துடுவாரான்னு தெரியல.”
“அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பலகலைக்கழகத்துல படிக்கப் போற விஷயம் எந்த அளவுல இருக்கு?”
“அதுக்கு கட்சி மேலிடத்தோட இன்னும் அனுமதி கிடைக்கலைன்னு சொல்றாங்க.”
“அப்படியா? நாலு மாச கோர்ஸ்னுலாம் நியூஸ் வந்தது?”
“ஆமாம். அந்த நியூஸ் அப்படியேதான் இருக்கு. ஆனா அவர் போறதுக்கு மேலிடம் இன்னும் உறுதியா ஒகே சொல்லலனு கமலாலயத்துல பேசிக்கிறாங்க”
“என்னாச்சு?”
”நாடாளுமன்ற தேர்தல்ல பணப்பட்டுவாடா முறையா இல்லை. அதனாலதான் தேர்தல்ல தோத்தோம்னு பாஜகவோட தமிழ்நாட்டு தலைவர்கள் சிலர் மேலிடத்துக்கு புகார் அனுப்பி இருக்காங்க. கட்சி அனுப்பின பணத்தை தமிழகத்துல இருக்கற முக்கிய தலைவர்கள் எடுத்துட்டு கோடீஸ்வரர்கள் ஆனதாவும் அந்த புகார்ல அவங்க சொல்லி இருக்காங்க. இந்த சூழல்ல அவர் எதுக்கு இங்கிலாந்து போகணும்கிற கேள்வியைக் கேட்டிருக்காங்க. இதுல கட்சி மேலிடம் கொஞ்சம் குழம்பிப் போய் இருக்காம். ஏற்கெனவே மாவட்ட அளவில் தோல்விக்கான ஆய்வு நடத்துவேன்னு சொன்ன அண்ணாமலையும் அமைதியாகிட்டார். அண்ணாமலை எதிர்ப்பு அணி இப்போதைக்கு வலுவாக இருக்கு”
“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பத்தி ஏதும் நியூஸ் இருக்கா?”
“விக்கிரவாண்டி தொகுதியில் கிட்டத்தட்ட மொத்த அமைச்சரவையும் முகாமிட்டிருக்கு. ஒரு தெருவுக்கு இரண்டு அமைச்சர்கள்ங்கிற அளவுல செயல்பட்டு வாக்காளர்களை கவனிக்கறாங்க. இன்னொரு பக்கம் அதிமுக, தேமுதிக வாக்குகளை குறி வைச்சு பாமக பிரச்சாரம் செஞ்சுட்டு இருக்கு. அவங்களும் பணத்தை அள்ளி விடறாங்க. மொத்த்த்துல விக்கிரவாண்டி மக்களுக்கு ராஜ யோகம்தான். நமக்குதான் எந்த யோகமும் இல்லை” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.