பாலிவுட் திரைப்படங்களில் வியாபாரத்திற்காக கவர்ச்சியையும் சண்டைக் காட்சிகளையும் கலந்து கட்டி எடுத்த காலம் மாறிப் போய் விட்டது. இப்போது மற்ற மொழிகளில் சொல்லத் தயங்கும் விஷயங்களை அதிரடியாக சொல்லி வியக்க வைக்கிறார்கள்.
அப்படி. சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மஹாராஜ். 1832ல் குஜராத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வைத்து சௌரப் ஷா என்பவர் எழுதிய மஹாராஜா என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
ஒரு வைணவக்குடும்பத்தில் கர்சன் தாஸ் பிறக்கிறார். வளரும்போதே துடுக்கான கேள்விகளைக் கேட்டு பெரியவர்களை வியக்க வைக்கிறார். வளர வளர அவனது சிந்தனையும் பார்வையும் யாருக்கும் தோன்றாத பல சீர்திருத்தக் கேள்விகளை எழுப்புகிறது. உறவினர்கள் திகைத்துப் போகிறார்கள். பெண் அடிமைத்தனத்தையும், மூட பழக்கங்களையும் எதிர்த்து கேள்வி கேட்டு வளர்கிறார் கர்சன. குஜராத்திலிருந்து புறப்பட்டு பாம்பே வந்து அத்தை வீட்டில் கர்சனின் இளமை பருவம் கழிகிறது.
அங்கு வைணவ குலத்தின் ஆன்மீக பெரியவரான ஜெ.ஜெ. என்பவரின் கண் அசைவுக்குத்தான் மக்கள் காத்திருக்கிறார்கள். மக்களின் அன்றாட வாழ்க்கையை தீர்மானிக்கும் பெரும் சக்தியாக ஜெ.ஜெ. இருக்கிறார். அவரை கிருஷ்ணனின் கடைசி சந்ததியாக மக்கள் தரிசிக்கிறார்கள். ஆனால் இது எல்லாம் கர்சன் அங்கு வந்து குடியேறிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்குகிறது.
ஹவேலி என்று அழைக்கப்படும் வைணவ மடத்திற்குள் யதுநாத் மஹராஜ் செய்யும் அக்கிரமங்களை கண்டுபிடித்து குரல் கொடுக்கிறான் கர்சன. குறிப்பாக பாத சேவை என்ற பெயரில் இளம் பெண்களை ஆன்மீகத்தின் பெயரில் மயக்கி கற்பழிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஜெ.ஜெ. இந்த அக்கிரம்த்தைக் வெளிக்கொண்டு வந்து மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார். கர்சன். இதனால் வீட்டிலும், சமூகத்திலும் பெரிய எதிர்ப்பை சந்திக்கிறார் கர்சன் தாஸ். ஜெ.ஜெ. கர்சனை ஒழித்துக் கட்ட பல்வேறு வழிகளில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் ஆன்மீகத்தின் பெயரில் நடக்கும் அநீதியை மெல்ல மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.
இதையெல்லாம் கர்சன் தாஸ் என்கிற தனி மனிதன் எப்படி எதிர்கொண்டு மக்களை மீட்கிறார் என்பதை அட்டகாசமான திரைக்கதையில் அமர்க்களமாக சொல்லியிருக்கிறா இயக்குனர் மல்ஹொத்ரா பி.சித்தார்த்.
படம் நெடுகிலும் கூர்மையான வசனங்களால் கைதட்டல் பெறுகிறார்கள் திரைக்கதையில் பங்கெடுத்திருக்கிறார் சினேகா தேசாய், நாயகனாக ஜுனைத்கான் கர்சன் தாஸ் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது நிஜமாக வாழ்ந்த ஒரு பாத்திரம் என்பதை மீறி அவரையே நம் மனதில் கர்சன் தாஸாக நினைக்கத் தோன்றுகிறது. படத்தில் முக்கிய பாத்திரமான ஜெ.ஜெ. என்கிற யதுநாத் மஹராஜ் பாத்திரத்தில் ஜெய்தீப் அஹல்வாட் மிரட்டல் நடிப்பில் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.
கம்பீர தோற்றமும் ஒப்பனையும் அவரை கடவுளாக நினைக்க வைக்கிறது. இடியே விழுந்தாலும் மெதுவாக புன்னகைக்கும் அந்த உணர்வுக்குப் பின்னால் மக்களின் புரையோடிக்கிடக்கும் அறியாமையின் அடர்த்தி தெரிகிறது.
சரி எது தவறு எது என்று தெரிய மதம் தேவையில்லை. ஒருத்தருக்கு புத்தி இருந்தால் போதும்
போன்ற வசனங்கள் பல இடங்களில் ஈட்டியாய் இறங்குகிறது. விடுதலை பெறுவதற்கு முன்பே நடக்கும் கதை என்பதால் அந்த காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்ல நிறைய உழைத்திருக்கிறார்கள். ஹவேலி என்ற அந்த அரண்மனையும், கோவிலும் நம் கண் முன் நிற்கிறது. பிரிட்டிஷ் நீதி மன்ற விசாரணை நடத்தும் காட்சி விறுவிறுப்பான இடம்.
தாதாபாய் நௌரோஜி போன்ற பாத்திரங்களை கண்ணியமாக காட்டியிருப்பது சிறப்பு. பிரச்சாரம் என்கிற பாதிப்பு இல்லாமல் வேகமாக நகர்வதே படத்தின் பலம்.
திரைப்படம் முடிந்த பிறகு நிஜமான கர்சன் தாஸ் வாழ்ந்த இடமும் அவரது புகைப்படமும் காட்டும் போது கண் கலங்குகிறது. மக்களின் மூடத்தனத்தை ஒழிக்க எத்தனை எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறார்.
கமர்சியல் திரைப்படங்களுக்கு மத்தியில் சமூக பொறுப்புடன் வந்திருக்கிறது மஹாராஜ்.