அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் ’விக்கி லீக்ஸ்’ (WikiLeaks) நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜூலியன் அசாஞ்சே விடுதலைக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டது எப்படி? இனி ஜூலியன் அசாஞ்சே என்ன செய்ய இருக்கிறார்?
அமெரிக்காவை ஆட்டம்காண வைத்த அசாஞ்சே
ஆப்கானிஸ்தான், ஈராக் போர்களின்போது அமெரிக்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள், ஊழல் தொடர்பான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை கடந்த 2010ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டது. இது அமெரிக்க ராணுவ வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு மீறல்கள் ஆகும். அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு அரசு சுமத்தியது. இதன் காரணமாக அதன் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சேவை குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.
அமெரிக்கா இவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே, இவர் பிரிட்டன் நாட்டில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். ஜூலியன் அசாஞ்சே சில ஆண்டுகள் அங்கேயே இருந்து வந்தார். இருப்பினும், கடந்த 2019இல் அவருக்கு அளித்துவந்த அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது.
இதையடுத்து அப்போதே பிரிட்டன் போலீசார் அவரை கைதுசெய்தனர். அதன் பிறகு அவர் தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த, இங்கிலாந்து அரசு கடந்த 2022ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இருப்பினும், ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு அங்கே மரண தண்டனை விதிக்கப்படாது என்பதை அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும் என்று ஜூலியன் அசாஞ்சே தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்கள் தொடர்பாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக பல ஆண்டுகளாக அமெரிக்கா வாதாடியது.
அசாஞ்சே விடுதலை ஏன்?
தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதால் ஜூலியன் அசாஞ்சேவுக்கு குறைவான தண்டனையை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, லண்டன் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள பெல்மார்ஷ் சிறையிலிருந்து அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டார்.
இந்த தகவலை விக்கி லீக்ஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது. நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டு, அதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, அவர் விடுதலையாகி பிரிட்டனிலிருந்து வெளியேறியதாக, விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விக்கி லீக்ஸ் எக்ஸ் பக்கத்தில், “ஜூலியன் அசாஞ்சே விடுதலையானார். பெல்மார்ஷ் சிறையின் சிறிய அறையில் 1901 நாட்கள் சிறையில் கழித்த பின்னர், திங்கட்கிழமை பெல்மார்ஷ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்” எனப் பதிவிட்டுள்ளது.
“அவர் மதியத்தில் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டு அங்கிருந்து பிரிட்டனுக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா திரும்புவார்,” எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோவில், விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் காரில் செல்லும் அசாஞ்சே நீல நிற சட்டை, ஜீன்ஸ் அணிந்துள்ளார்.
அசாஞ்சேவுக்கு தற்போது 52 வயதாகிறது. அவர் இன்று (26-06-24) அமெரிக்காவில் ஆஜராக இருக்கிறார். அங்கே அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக ஜூலியனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே ஜூலியன், பிரிட்டனில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்ட நிலையில், அது கழிக்கப்படும் என்றும், எனவே, அவர் இனிமேல் சிறையில் இருக்கத் தேவையில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அவர் விரைவில் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உள்ளார்.
ஜூலியனின் இந்த விடுதலையை அவர்கள் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். அசாஞ்ச்-இன் ஆதரவாளர்களுக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் நன்றி தெரிவித்துள்ள அவருடைய மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே, “இது நனவாக பல ஆண்டுகளாக அணி திரண்டவர்களுக்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.