ஆட்டோ இம்யூன் பிரச்சினையான மையோசிடிஸினால் சமந்தா பாதிக்கப்பட்டது ஞாபகம் இருக்கலாம். இந்தப் பிரச்சினையால் சமந்தா ஏறக்குறைய ஒரு வருடம் சினிமாவில் நடிக்காமல் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.
’யசோதா’ படத்தின் டப்பிங்கின் போது கூட ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே பேசியது போன்ற புகைப்படத்தை சமந்தா வெளியிட அரண்டுப் போனது அவரது ரசிகர்கள் வட்டாரம்.
கை, கால், கழுத்து வலி, தசைப் பிடிப்பு கூடவே சருமப் பிரச்சினைகள் இருக்கவே ஹைதராபாத், அமெரிக்கா, கொரியா என பல இடங்களில் சிகிச்சைகளைப் பெற்றார் சமந்தா. ஆனாலும் அவருக்கு ஆட்டோஇம்யூன் பிரச்சினைகள் முழுவதுமாக குணமடையவில்லை.
இருந்தாலும், அவர் தான் முதலில் ஒப்புக்கொண்ட ‘சிட்டாட;’ வெப் சிரீஸின் ஷூட்டிங்கில் மட்டும் கலந்து கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த பாலிவுட் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அக்ஷய் குமாருடன் நடிக்கவிருந்த படத்திலும் சமந்தாவை மீண்டும் அழைக்கவில்லை.
இதனால்தான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சமந்தா தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதங்கள் ஆனாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.
இதற்கு காரணம் சமந்தா மீண்டும் சிசிச்சையில் இருக்கிறார் என்கிறார்கள். க்ரையோதெரபி, இன்ஃப்ராரெட் பாத் என எளிதில் சொல்ல முடியாத பெயர்களிலான சிகிச்சைகளை சமந்தா எடுத்திருக்கிறார். ஆனால் அவற்றுக்கான பலன் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் உடல்நிலையில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இதனால் சமந்தா இப்போது மீண்டும் மருத்து சிகிச்சைகளைத் தொடர ஆரம்பித்திருக்கிறாராம். இந்த முறை மாற்று சிகிச்சை எனப்படும் இந்திய பாரம்பரிய மருத்துவம், தொடு சிகிச்சை, அக்குபங்க்சர் போன்றவற்றில் சிகிச்சைகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறாராம்.
சிகிச்சைகளுக்கு பெரும் செலவு பிடிப்பதால், பெரிய கார்போரேட் விளம்பரங்களில் நடிக்கவும் சமந்தா ஆர்வம் காட்டுகிறாராம். இரண்டு நாட்கள் ஷூட்டிங் போனால் போதும், பெரும் தொகையை சம்பளமாக வாங்கிவிடலாம் என்பதால்தான் இந்த விளம்பரங்களில் நடிக்கும் முடிவாம்.
லோகேஷ் கனகராஜூக்கு அல்வா கொடுத்த லாரன்ஸ்
நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என அவதாரங்கள் எடுக்கும் ராகவா லாரன்ஸ் மீண்டும் தனது வெற்றி வரிசை படமான ‘காஞ்சனா’வை கையிலெடுத்து இருக்கிறார்.
அடுத்து ‘காஞ்சனா -4’ வெளிவர இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு காரணம் சுந்தர்.சி.யின் ‘அரண்மனை 4’ வெற்றிப் பெற்றதுதான் என்கிறார்கள். பெரும் வெற்றி பெற்ற படங்களின் வரிசை வியாபார ரீதியாக நல்ல விலைக்குப் போவதால் பலரும் இதே பாதையில் பயணிக்க கிளம்பிவிட்டார்கள். லாரன்ஸூம் இப்போது காஞ்சனா 4- வேலைகளில் இறங்கிவிட்டார்.
இது ஒருபக்கம் இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், அவரது நண்பரும் ‘ஆடை’ பட இயக்குநருமான ரத்னகுமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க திட்டமிட்ட படம் என்னவாயிற்று என்ற கேள்வி எழுந்திருக்க்கிறது.
விசாரித்தால் அந்தப் படம் நடப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்கிறார்கள். காரணம் ராகவா லாரன்ஸ்தானாம். ரத்ன குமார் சொன்ன கதையை லாரன்ஸ் ஓகே சொல்லியிருக்கிறார். இதனால் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பது என முடிவாகி இருக்கிறது.
அந்த நேரத்தில்தான் ’லியோ’ பட விழா நடந்தது. அவ்விழாவில் ரத்னகுமார், ’கழுக்குக்கு பசியெடுத்தால் இறங்கி வந்துதான் ஆகணும்’ என்று ரஜினியை மறைமுகமாக சாடியிருந்தார். இது ரஜினிக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்.
ரத்ன குமார் இதை வேண்டுமென்றே சொல்லவில்லை. யதேச்சையாக சொல்லப் போக அது சர்ச்சைக்கு உள்ளாகிவிட்டது என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
ரஜினியைப் பற்றி ரத்ன குமார் கமெண்ட் அடித்ததாக சர்ச்சைகள் கிளம்பவே, லாரன்ஸ் ஜகா வாங்கிவிட்டாராம். மேலும் ரத்ன குமார் சொன்ன கதையை முதலில் சரி சரி சூப்பர் என்று சொன்னவர், பிறகு மெல்ல மெல்ல பல மாற்றங்களைச் செய்ய சொன்னாராம்.
இப்படி மாற்றினால் கதையின் கரு அப்படியே மாறிவிடும். நாம் எதை சொல்ல போகிறோமோ அது கெட்டுவிடுமென ரத்ன குமார் கூறினாராம்.
இதை காரணமாக வைத்து அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு போகாமல் தள்ளிப் போட்டு கொண்டே இருந்த லாரன்ஸ், இப்போது தனது இயக்கத்தில் காஞ்சனா -4 ஐ எடுக்கப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார்.
லாரன்ஸ் கதை, திரைக்கதையில் அதிகம் தலையிடவே, லோகேஷூம் கொஞ்சம் தயங்கி இருக்கிறார். ஆனால் கடைசி வரை ஒகே ஒகே பாஸ் என்ற லாரன்ஸ் இறுதியில் லோகேஷூக்கு அல்வா கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.
ஒரு இயக்குநர் சொல்லும் கதை, திரைக்கதையில் லாரன்ஸ் தலையிடுவது இது முதல் முறையல்ல என்கிறார்கள். ‘சந்திரமுகி -2’ எடுத்த பி. வாசுவுக்கே லாரன்ஸ் அதிக தொந்தரவுகள் கொடுத்ததாகவும் இப்போது பேசிக்கொள்கிறார்கள். பல மாற்றங்களைச் செய்ய சொன்னவர், பின்னர் இசையமைப்பிலும் தலையிட்டாராம். இறுதியில் அவரே சில கீபோர்ட் ப்ளேயர்களை வைத்து இசையமைப்பிலும் குறுக்கிட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.