மத்திய இணை அமைச்சராக நேற்று பதவியேற்ற 12 மணிநேரத்துக்குள் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று நடிகர் சுரேஷ் கோபி கூறியதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ எனவும் கூறியுள்ளார். என்ன நடந்தது? சுரேஷ்கோபி சமாதானப்படுத்தப்பட்டாரா அல்லது அவர் கூறியுள்ளது போல் தவறான தகவல் பரப்பட்டதா?
சுரேஷ் கோபி என்ன சொன்னார்?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் முதல் முறையாக ஒரு தொகுதியை வென்றிருக்கிறது பாஜக. அக்கட்சி சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டது. டெல்லியில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் இன்று காலையில், தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி பிரதமர் மோடிக்கு சுரேஷ் கோபி அதிர்ச்சி கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் கோபி, “பாஜக தலைமையிடம் நான் அமைச்சர் பதவி எதையும் கேட்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்றுதான் சொல்லி வந்தேன். ஆனால், எனக்கு அவர்கள் மத்திய அமைச்சர் பதவியை வழங்கியுள்ளனர். கூடிய விரைவில் என்னை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
என்னைப் பற்றி கட்சித் தலைமைக்கு நன்றாக தெரியும். மத்திய அமைச்சராக இருந்தால் சினிமா படங்களில் நடிப்பது கஷ்டம். ஆனால், என்னால் படங்களில் நடிக்காமல் இருக்க முடியாது. அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொன்னாலும், ஒரு எம்பி என்ற முறையில் திருச்சூர் மக்களுக்காக நான் சிறப்பாக செயல்படுவேன்” என்று கூறியதாக செய்திகள் வெளியானது.
சுரேஷ் கோபி நடிக்கும் 4 படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒரு படம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. சுரேஷ் கோபி மத்திய அமைச்சரானதால் அப்படங்கள் பாதியில் நிற்கும் சூழல் ஏற்பட்ட நிலையில் அவர் அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறியதாக சுரேஷ் கோபியின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் சுரேஷ் கோபி கேபினட் அமைச்சராக தன்னை நியமிப்பார்கள் என்று எதிர்பார்த்த்தாகவும், அப்படி செய்யாமல் துணை அமைச்சராக நியமித்ததால் ஏற்பட்ட வெறுப்பில்தான் அமைச்சர் பதவியை விட்டு விலக விரும்புவதாக பேட்டி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகப்போவதாக தான் சொன்னதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று அவர் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், ”பிரதமர் மோடியின் தலைமையிலான அமைச்சர் குழுவில் இருந்து நான் விலகப் போவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் தவறானது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” எனவும் சுரேஷ் கோபி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்மையில் என்ன நடந்தது?
முன்னதாக, சுரேஷ் கோபி அமைச்சராக நீடிக்க விரும்பவில்லை என்ற தகவல் வெளியானதும், இதுகுறித்து கேரளா பாஜக மூத்த தலைவர் ஒருவர், “சுரேஷ் கோபி எடுத்ததாக கூறப்பட்ட முடிவு மோடியின் அமைச்சரவையை மட்டுமின்றி, கேரளாவில் பாஜகவின் வளர்ச்சியையும் மோசமாக பாதிக்கும். மத்திய அமைச்சரவை பதவிக்காக சுரேஷ் கோபி அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக மற்ற பாஜக தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள். சுரேஷ் கோபியின் விருப்பம் குறித்து பாஜக தலைமையால் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சுரேஷ் கோபி அவரது திரைப்பட கமிட்மெண்ட்களை முடிக்க காலக்கெடுவையும் மத்திய தலைமை பரிந்துரைக்கும்” என்று தங்களிடம் கூறியதாக ஈடிவி பாரத் ஊடகம் செய்தி வெளியிட்டது.
மேலும், ‘கோபியின் இந்த முடிவுக்கு பின்னால் வெவ்வேறு காரணங்கள் இருப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் கூறினார். அதாவது, கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் ஜார்ஜ் குரியனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருப்பதை சுரேஷ் கோபி விரும்பவில்லை என அவரது வட்டாரத்தில் கூறுகின்றனர்.
சுரேஷ் கோபி திருச்சூரில் எல்.டி.எஃப் மற்றும் யூ.டி.எஃப் வேட்பாளர்களை எதிர்த்துப் போராடி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனக்கும் அமைச்சர் பதவி, ஜார்ஜ் குரியனுக்கும் அமைச்சர் பதவியா என்ற ஈகோ சுரேஷ் கோபிக்கு இருப்பதாக உள்ளூர் வட்டாரங்கள் சொல்கின்றன’ என்றும் ஈடிவி பாரத் தெரிவித்தது.
முன்னதாக, டெல்லியில் பதவியேற்பு விழா நடப்பதற்கு முன்பு சுரேஷ் கோபி யாருக்கும் தகவல் சொல்லாமல் திருவனந்தபுரத்துக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், யாரோ அவரை சமாதானப்படுத்த, விழாவின் அழைப்பை ஏற்று, கடைசி சில மணி நேரத்திற்கு முன்பே மீண்டும் விமானம் மூலம் டெல்லி சென்றார். இதனால் விழாவிற்கு முன்பு பிரதமர் மோடி நடத்திய தேநீர் விருந்தில் சுரேஷ் கோபி கலந்துகொள்ள முடியவில்லை. பதவியேற்பதற்காக நேரடியாக ராஷ்டிரபதி பவனுக்குதான் சுரேஷ்கோபி சென்றார்.
கேரளாவில் அதிரடியான நபர் என்ற இமேஜ் சுரேஷ் கோபிக்கு இருக்கிறது. அரசியலையும் அந்த இமேஜ் உடனே தொடங்கியுள்ளார் சுரேஷ் கோபி.