No menu items!

புத்தகம் படிப்போம் 25: மரங்களின் இரகசிய வாழ்வு

புத்தகம் படிப்போம் 25: மரங்களின் இரகசிய வாழ்வு

எம்.டி. முத்துக்குமாரசாமி

என் வீட்டு முன் முற்றத்தில் சிறிய பாத்தி ஒன்றில் பாரிஜாதமும் செம்பருத்தியும் குலுங்க அவைகளூடாக வில்வம் இப்போதுதான் வேர் பிடித்துக்கொண்டிருக்கிறது; மகிழ மரத்தின் தண்டு பருத்து அதன் கிளைகளும் இலைகளும் முன் மதிலில் வீற்றிருக்கும் வலஞ்சுழி கற்பக விநாயகருக்கு குடை கவிழ்த்துகின்றன. இந்தத் தாவரங்களும் மரங்களும் அவைகளுக்குள் ஏதோ பேசிக்கொள்ளும் என்று நான் அவ்வப்போது கற்பிதம் கொள்வது என் பிரேமைகளுள் ஒன்று. மகிழமும் முருங்கையும் கிளை பரப்பி மின்கம்பியைத் தொடும்போதெல்லாம் கார்ப்பரேஷன்காரர்களோ வீட்டம்மணியோ அவற்றை தாட்சண்யமில்லாமல் வெட்டுவதை, ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம வாடவேண்டும் வெட்டியபோதெல்லாம் வெட்டப்பட வேண்டும்’ என்று சொல்லிக்கொள்வேன்; சொல் செயலாகவோ மனோரூப உணர்ச்சியாகவோ அதற்கு மேல் துளிர்க்காது.

பீட்டர் வோஹ்ல்பெனின் ‘மரங்களின் இரகசிய வாழ்க்கை’ நூலை வாசித்தபோது, மரங்களுக்கு ஒரு சமூக வாழ்வு இருக்கிறது என்பது தெரியவந்தபோது, நான் மரங்கள் அவைகளுக்குள் பேசிக்கொள்ளும் என்று நினைத்தது பிரேமையல்ல என்ற ஆசுவாசத்தை அடைந்தேன்.

வோஹ்ல்பெனின் இந்த புத்தகம் மரங்களின் மேலும் காடுகளின் மேலும் ஒரு கவித்துவ மதிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. வோஹ்ல்பெனின் நூல் அறிவியல் சார்ந்தது; ஆனால், அவருடைய உரைநடை குழந்தையின் வியப்புணர்வினால் உத்வேகம் பெறுவது. அவர் மரங்கள் மரம் போல நிற்காமல் தங்கள் சுற்றுச் சூழலுடன் உயிர் ததும்ப பங்கேற்கின்றன என்பதை பெரும் உவகையோடு விவரிக்கிறார்.

தாய் புங்கமரம் தன் குழந்தைத் தளிர்களை எப்படி ‘பாலூட்டி, சீராட்டி’ உரிய புரதச் சத்தும் சர்க்கரையும் கொடுத்து வளர்க்கிறது என்று வோஹ்ல்பென் விவரிப்பதை வாசிக்கும் அனுபவம் அலாதியானது. மரங்கள் வலி உணர்பவை, நோய்வாய்ப்படுபவை, மனச்சோர்வடைபவை, துக்கத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துபவை. மனிதர்களைப் போலவே சமூக ஜீவிகள் என்கிறார் வோஹ்ல்பென்.

இந்த நூலின் மையக் கருத்து மரங்கள் தங்களுக்குள் சிக்கலான உறவைக் கொண்டிருக்கும் சமூகஜீவிகள் என்பதுதான். வோஹ்ல்பென், ஏராளமான அறிவியல் தரவுகளோடு மரங்கள் தங்களின் வேர்களின் மூலம் நிலத்தடி உறவுகளை எப்படி உருவாக்குகின்றன, காளான்கள் அந்த நிலத்தடி உறவுகளில் வகிக்கும் முக்கிய பங்கு என்ன, வேருறவுகளின் மூலமாக மரங்கள் எப்படி தங்கள் வாழ்வாதாரங்களைப் பகிர்ந்துகொள்கின்றன என்றெல்லாம் விவரிக்கிறார்.

காட்டினால் சூழப்பட்ட மரமே வலுவானது என்று எழுதும் வோஹ்ல்பென், காடுகளின் விசுவாசியும் கூட. காடு தன்னைத்தானே எப்படி மரங்களின் உயிர்வாழ் இச்சையால் புதுப்பித்துக்கொள்கிறது, தன் ஜீவித எல்லைகளைத் தொடர்ந்து தாண்டுவதற்கு முயற்சிக்கிறது, தனக்கென்று ஒரு கூட்டுப் பிரக்ஞையை உருவாக்கிக்கொள்கிறது என்றும் வோஹ்ல்பென் விரிவாக எழுதுகிறார்.

மரம், செடி, கொடிகளுக்கு உணர்ச்சியுண்டு என்பது வள்ளலார் சொல்லி நமக்குத் தெரிய்மென்றாலும், அது கவித்துவ உண்மை மட்டுமல்ல அது அறிவியல் உண்மையும் கூட என இந்த நூல் வழி அறியும்போது திகைப்பு நம்மைச் சூழ்வதைத் தவிர்க்க முடியாது.

இதில் மிக முக்கியமாக எழுந்துவரும் தத்துவார்த்தம் என்னவென்றால், மனிதனும் மனிதப் பிரக்ஞையும் மட்டுமே இப்பிரபஞ்சத்தின் உச்சமான பிரக்ஞா நிகழ்வாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்பதுதான். மரஞ்செடிகொடிகளும் அவற்றின் நிலத்தடி சமூகப் பிணைப்புகளும் இன்னொரு பிரக்ஞையின் வடிவமாக வேறொரு ஜீவித தளத்தின் புத்திசாலித்தனத்தோடும் அதற்கான உயர் அறிவோடும் இயங்கிக் கொண்டிருக்கலாம். இப்புவியின் தாவர சங்கமத்துள் மனிதன் ஒரு அலகே தவிர அதன் எஜமானன் அல்ல.

காடுகள், தனித்த மரங்கள் ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை மட்டும் வோஹ்ல்பெனின் நூல் வழங்கவில்லை; நாம் நம் தாவர சங்கமச் செயல்களை கவனமற்று செய்ய இயலாது என்பதையும் சொல்கிறது.

அறிவுத்தேடலின் முக்கியத்துவம், இயற்கை உலகின் அறியப்படாத இரகசியங்கள், நாம் நனவுடனும் நனவற்றும் செய்யும் செயல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் என பலவற்றைப் பற்றியும் வோஹ்ல்பெனின் இந்த புத்தகம் மறைமுகமாகப் பேசுகிறது.

மரங்களால் எண்களை எண்ண முடியும், கற்றுக்கொள்ள முடியும், நினைவில் வைத்திருக்க முடியும், அவை எல்லோருக்கும் பொதுவான அபாயங்கள் வரும்போது விசித்திர வாசனைகளைப் பரப்புவதன் மூலம் ஒன்றுக்கொன்று எச்சரித்துக்கொள்ள முடியும் என வோஹ்ல்பென் எழுதிச் செல்லும்போது மரங்களும் காடுகளும் நம் அகத்தில் புதியதாய் ஜீவிதம் கொள்கின்றன.

வனங்களுக்குள் நாம் செல்லும்போது நாம் உணர்வது காட்டியல்பை அல்ல, வீடு திரும்புதலை என வோஹ்ல்பென் சொல்வது எனக்குத் தோரோ ஏற்கனவே சொன்னதுதான் என்றாலும் மீண்டும் வாசிக்க நன்றாகத்தான் இருக்கிறது.

The Hidden Life of Trees: What They Feel, How They Communicate Discoveries from a Secret World 1 (The Mysteries of Nature) – Peter Wohlle0ben (Author), Tim Flannery (Foreword)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...