No menu items!

அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா பி அணி – டி20 உலகக் கோப்பை

அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா பி அணி – டி20 உலகக் கோப்பை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்பது வழக்கமான விஷயம். ஆனால் நேற்று டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரும்பாலும் இந்திய வீர்ர்களைக் கொண்ட அமெரிக்க அணியிடன் பாகிஸ்தான் தோற்றுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய அப்செட்டாக இது பார்க்கப்படுகிறது.

இப்போட்டியில் ஆடிய அமெரிக்க அணியை இந்தியாவின் பி டீம் என்று தாராளமாக சொல்லலாம். மோனக் படேல், நிதிஷ் குமார், ஹர்மீத் சிங், ஜஸ்பீத் சிங், சவுரப் நேட்ரவால்கர் என்று ஏராளமான இந்திய வீரர்கள் இந்த அமெரிக்க அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்த வீரர்கள் அனைவரும், இந்தியாவில் தங்களுக்கு கிரிக்கெட் எதிர்காலம் இல்லை என்பதால் அமெரிக்காவுக்கு சென்றவர்கள். அங்கே தங்களுக்கென்று ஒரு அணியை உருவாக்கி, இப்போது பாகிஸ்தானையும் தோற்கடித்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சூப்பர் ஓவர் மூலம் அமெரிக்காவுக்கு வெற்றியை பெற்றுத்தந்த சவுரப் நேட்ரவால்கர் மும்பையில் பிறந்தவர். சிறுவயதில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் சாதித்த சவுரப், மும்பைக்காக பல போட்டிகளில் சூர்யகுமார் யாதவுடன் சேர்ந்து ஆடியிருக்கிறார். 2010-ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார். அந்த அணியில் ஆடிய கே.எல்.ராகுல், ஜெயதேவ் உனன்கட், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு பிற்காலத்தில் இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் சவுரபுக்கு இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டிலும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் வெறுத்துப் போன சவுரப், அமெரிக்காவுக்கு படிக்கப் போயிருக்கிறார். அங்குள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெற்று, அங்கேயே வேலை பார்த்திருக்கிறார். அமெரிக்காவுக்கென்று தனி கிரிக்கெட் அணி தொடங்குவதைக் கேள்விப்பட்டதும், அவரது கிரிக்கெட் ஆர்வம் மீண்டும் தலையெடுத்துள்ளது. கஷ்டப்பட்டு அந்த அணியில் சேர்ந்திருக்கிறார். 2019-ம் ஆண்டுமுதல் அமெரிக்க அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வரும் சவுரப், நேற்றைய போட்டியில் சூப்பர் ஓவரில் அமெரிக்காவை ஜெயிக்க வைத்ததன் மூலம் அமெரிக்காவின் ஹீரோவாகி இருக்கிறார்.

மோனக் படேல்:

அமெரிக்கா – பாகிஸ்தான் இடையிலான நேற்றைய போட்டியில் அரை சதம் விளாசி, மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்ற மோனக் படேலின் வரலாறும் இப்படித்தான் இருந்திருக்கிறது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான மோனக் படேல் 19 வயதுக்கு உட்பட்ட குஜராத் அணிக்காக பல போட்டிகளில் ஆடி இருக்கிறார். ஆனால் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவில் உள்ள அரசியலால் அவரால் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. அதனால் அவரும் அமெரிக்கா பறந்துள்ளார்.

இளம் கிரிக்கெட் வீரர்களை தேடிக்கொண்டிருந்த அமெரிக்க அணி, விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான மோனக் படேலை இரு கைகளால் அள்ளி அணைத்தது. இப்போது அவர் அமெரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக மட்டுமின்றி கேப்டனாகவும் இருக்கிறார்.

ஹர்மீத் சிங்:

1992-ம் ஆண்டில் மும்பையில் பிறந்தவரான ஹர்மீத் சிங், சிறுவயதில் மும்பை மற்றும் திரிபுரா அணிக்காக பல போட்டிகளில் ஆடியவர். சுழற்பந்து வீச்சாளர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனான இவரும் இந்திய கிரிக்கெட்டின் செலக்‌ஷன் பாலிடிக்ஸால் பாதிக்கப்பட்டவர். இப்போது அமெரிக்க அணியின் முக்கிய வீர்ர்.

அமெரிக்க அணியின் மற்ற வீர்ர்களான ஜஸ்தீப் சிங், நிதிஷ் குமார் ஆகியோரின் கதையும் இப்படித்தான். இந்தியாவில் ஒதுக்கப்பட்ட அவர்கள், இப்போது அமெரிக்காவில் தங்கள் திறமைக்கு ஏற்ற இடம் கிடைத்து சாதித்து வருகிறார்கள்.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தானை வென்ற அமெரிக்க அணி, அடுத்ததாக 12-ம் தேதி இந்தியாவை எதிர்த்து ஆடப் போகிறது. இந்தியாவால் ஒதுக்கப்பட்ட இந்த இந்தியர்கள் அன்றைய போட்டியில் அதற்காக பழி வாங்குவார்களா என்று பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...