பாலிவுட்டில் சரவெடி போல் ஒருத்தரை விடாமல் தனது சர்ச்சைக்குரிய கருத்துகளால் போட்டுத்தாக்கும் கங்கனா ரனவத்துக்கு, இப்போது பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருக்கும் லேட்டஸ்ட அரசியல்வாதிக்கு கன்னத்தில் விழுந்த ‘பளார்’ சம்பவம்தான் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இiமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, பாராளுமன்ற உறுப்பினராகி இருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்துக்கு அரசியல் கள ஆரம்பமே பகீர் ரகமாகி இருக்கிறது.
சண்டிஹர் விமான நிலையத்தில் நடந்தது என்ன?
கடந்த வியாழன் அன்று, தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி புறப்பட்ட கங்கனா, சண்டிஹர் விமான நிலையத்திற்கு தனக்கே உரிய கெத்துடன் வந்தார். வழக்கம் போல் பாதுகாப்பு குறித்த பரிசோதனைக்கும் பெண்களுக்கான பகுதியில் உள்ளே நுழைந்தார். பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு கங்கனா இரண்டாவது கேபின் வழியாகச் சென்றார். அப்போது அங்கே பாதுகாப்பு பரிசோதனையில் ஈடுபட்ட மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பெண் காவலர் குல்விந்தர் கெளர், கங்கனா ரனவத் எதிர்பாராத தருணத்தில் அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார். ஒரு விநாடி, அரண்டுப் போனார் கங்கனா ரனவத்.
’ஏன் இப்படி செய்தீர்கள்’ என்று கேட்ட கங்கனாவிடம், தான் விவசாயிகள் இயக்கத்தை ஆதரிப்பதாக அந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் குல்விந்தர் கெளர் பதிலளித்து இருக்கிறார்.
கங்கனாவின் கன்னத்தில் விழுந்த ’பளார்’ சம்பவத்தின் பின்னணி
2020-21-ம் ஆண்டுகளில், பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்ததிற்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டனர். டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது, கங்கனா தனது காட்டமான கருத்தை முன் வைத்து இருந்தார். சமூக ஊடகம் ஒன்றில், போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்த கங்கனா, ’100 ரூபாய்க்காக விவசாயிகள் போராட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்’ என்று கிண்டலாக பதிவிட்டு இருந்தார். கங்கனாவின் இந்த கிண்டல் நிறைந்த பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பவே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்பது போல குறிப்பிடும் வகையிலும் பதிவிட்டு இருந்தார். இதுவும் சர்ச்சையக் கிளப்பவே, அந்த பதிவையும் நீக்கிவிட்டார்.
இதனுடைய தொடர்ச்சியாகதான், நடந்து முடிந்த தேர்தல் பரப்புரைக்காக சண்டிஹர் சென்ற கங்கனாவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவமும் நடந்தது.
இந்த சம்பவத்திற்குதான் ’என் அம்மா அங்கே உட்கார்ந்தபடியே அப்போது எதிர்ப்பு தெரிவித்தார்’ என்றும் குல்விந்தர் கெளர் உரக்கச் சொல்லியிருக்கிறார்.
யார் இந்த குல்விந்தர் கெளர்?
செல்வாக்கு உள்ள பிரபல நடிகை, தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் என்று தெரிந்தும், பணியில் இருக்கும் போது மிகத் தைரியத்துடன் கங்கனாவின் கன்னத்தில் அறைய வேண்டுமென்றால் ஒரு அசட்டுத் துணிச்சல் அல்லது தீராத கோபம் என ஏதாவது ஒன்று இருக்கவேண்டும். அதற்கு ஒரு காரணமும் இருக்கவேண்டும். தனது அம்மா கலந்து கொண்ட போராட்டத்தை வெறும் 100 ரூபாய்க்காக கலந்து கொண்ட ஒரு நிகழ்வு என்று கங்கனா கருத்து கூறியதால், உண்டான ஆத்திரத்தால் கங்கனாவை குல்விந்தர் கெளர் அறைந்திருக்கலாம் என்று காரணம் கூறப்படுகிறது.
இந்த குல்விந்தர் கெளர், 15 -16 ஆண்டுகளாக சிஐஎஸ்எஃப்-ல் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக, சண்டிஹர் விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார், அவர் பெயர் ஷேர் சிங். இவர் அனைத்திந்திய கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியுடன் நெருக்கமான தொடர்புடையவர்.
இப்போது குல்விந்தர் கெளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
கங்கனா ரனவத்தின் பின்னணி
பாரபட்சம் பார்க்காமல், எதையும் யோசிக்காமல் பட்டென்று கமெண்ட் அடிப்பதில் கங்கனா ரனவத் ஒரு ராணி. சின்ன வயதில் மருத்துவர் ஆகவேண்டுமென கனவு கண்டார். ஆனால் நுழைவுத் தேர்வு முடிவுகள் அவரை மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய விடவில்லை.
சரி இனி சினிமாவிலாவது மருத்துவராக நடிக்க முடியுமென நினைத்தாரோ என்னவோ, நடிகையாகும் ஆசையில் 15 வயதில் சினிமா கனவுகளுடன் வீட்டை விட்டு கிளம்பினார். வேறு வழியில்லாமல் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது பெற்றோரும் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு கிளப்பினார்கள்.
பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, 2004-ல் ‘ஐ லவ் யூ பாஸ்’ என்ற படம் மூலம் பாலிவுட்டில் துணை நடிகையாக அவதாரம் எடுத்தார் கங்கனா. அடுத்து ’கேங்ஸ்டர் : ஏ லவ் ஸ்டோரி’ பட த்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘ஃபேஷன்’, ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பாய்’, ‘தனு வெட்ஸ் மானு’, ‘குயின்’ போன்ற படங்கள் கங்கனாவை பாலிவுட்டில் பிரபலமாக்கின.
கங்கனாவின் அசத்தலான நடிப்பிற்கு 4 தேசிய விருதுகள் கிடைத்தன. கூடவே இன்னும் பல விருதுகள் அவரது வீட்டு அலமாரியை அலங்கரித்தன. நடிகையாக இருந்தவர் திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பல்வேறு அவதாரங்களை எடுத்தார்.
இவரது கருத்துகளில் வலதுசாரி சிந்தனைகள் அதிகமிருக்கும். சினிமா புள்ளிகளை கிள்ளிப் பார்க்கும் கமெண்ட்களை தெறிக்கவிட்டவர், பிறகு அரசியல் ரீதியாகவும் தனது கருத்துகளைப் பகிர ஆரம்பித்தார். சமூக ஊடகமான இன்ஸ்டாக்ராமில் இவர் பதிவிடும் கருத்துகள்தான் இவரை பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளிடையே கவனத்தை ஈர்த்தன. 2021-ல் பாரதிய ஜனதா அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது கொடுத்து அழகுப்பார்த்தது. இன்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் உலாவருகிறார்.
கங்கனா ரனவத்தை குல்விந்தர் கெளரி தாக்கியது சரியா தவறா என்ற கருத்துகள் விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றன. ஆனால் ‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால் பஞ்சாப்பில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை எப்படி சமாளிப்பது என்று கவலையாக இருக்கிறது’ என்ற இவரது கூறியதுதான் இப்போது தேவையில்லாத பிரச்சினைக்கு வழிவகுக்க பாதை அமைத்து கொடுத்திருக்கிறது.