No menu items!

நீட் கொஸ்டின் பேப்பர் லீக்: ராஜஸ்தானில் 11 பேர் முதலிடம்!

நீட் கொஸ்டின் பேப்பர் லீக்: ராஜஸ்தானில் 11 பேர் முதலிடம்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இந்தியா முழுவதும் பரபரப்பாக இருந்த ஜூன் 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. நீட் முடிவு ஜூன் 15இல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவு வெளியான நாளில் திடீரென அறிவித்ததும், இந்த ஆண்டு நீட் தேர்வில் 67 பேர் நாடு முழுவதும் முதலிடம் பெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும், நீட் தேர்வு எழுதியவர்களில் சில மாணவர்களுக்கு சாத்தியமற்ற மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதும், வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் 11 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளதும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இவை எல்லாம் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வும் தொடரும் சர்ச்சையும்

இளநிலை மருத்துவ பட்டப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5ம் தேதி நடந்தது. இத்தேர்வை 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்கான முடிவுகள் ஜூன் இரண்டாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென முன்கூட்டியே நேற்று முன்தினம் (ஜூன் 4) நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பரபரப்புக்கு இடையே நீட் தேர்வு முடிவுகளும் வெளியானது. நீட் தேர்வு முடிவுகளின்படி, 13.16 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு மருத்துவ கல்வியில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

இதனிடையே, இந்த ஆண்டு நீட் வினாத்தாள் ராஜஸ்தானில் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை என்.டி.ஏ. மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதன்பின்னர் இந்த விவாகரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்தான், நீட் வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 11 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

அடுத்தடுத்த வரிசை எண்கள் உடைய ராஜஸ்தான், அரியானா, டெல்லியை சேர்ந்த 6 பேர் நீட் தேர்வில் 720/720 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் அம்பலமாகி உள்ளது. தேர்வு முடிவுகளை ஆராய்ந்ததில் 2307010 என்ற வரிசையில் தொடங்கும் பதிவு எண்களை கொண்ட 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்படி அடுத்தடுத்த வரிசை எண்கள் உடைய 6 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்துள்ளது எப்படி என மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த குழப்பங்கள் ஒரு பக்கம் இருக்க, இந்த ஆண்டு நீட் தேர்வில் சிலர் 719, 718 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. நீட் தேர்வு விதிமுறைகள்படி, ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண் உட்பட 5 மதிப்பெண் கழித்து 715 மதிப்பெண்கள்தான் கிடைக்கும். ஆனால், இரண்டாம் இடத்தில் உள்ள மாணவர்கள் 715 மதிப்பெண்களுக்கு பதில் 719, 718 என பெற்றுள்ளதால் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையான நிலையில், மதிப்பெண் குளறுபடிகளை சரி செய்த பிறகே மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சாத்தியமற்ற மதிப்பெண்கள் தொடர்பாக எதிர்பாராத விதமாக நேரம் விரயமானால் கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. மேலும், இயற்பியல் பாட கேள்வி பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய கேள்விக்கு எந்த பதில் அளித்திருந்தாலும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்றும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இப்படி கருணை மதிப்பெண் வழங்கியதால் 44 மாணவர்கள் பெற்றிருந்த 715 மதிப்பெண்கள் 720 ஆக உயர்ந்துள்ளது. இப்படி கருணை மதிப்பெண் பெற்றவர்களில் 44 பேர் முதலிடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தேர்வு முகமையின் இந்த விளக்கத்தை மாணவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

நீட் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்கவில்லை என ஏற்கெனவே சர்ச்சை இருந்துவருகிறது. இதனாலே, தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகளில் நிகழ்ந்துள்ள இந்த குழப்பங்கள், நீட் தேர்வு தொடர்பான சந்தேகத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனை

இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த மாணவி ஜெயதி பூர்வஜா, 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் நீட் நுழைவுத்தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே 100 சதவீத மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து, மாணவி ஜெயதி பூர்வஜா, ‘சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. எனவே, அதை இலக்காக வைத்து தொடர்ந்து படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்றேன். நீட் நுழைவுத் தேர்வுக்காக வேறு எந்த சிறப்பு பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளவில்லை. பள்ளியில் நடத்திய சிறப்பு பயிற்சியில் மட்டுமே கலந்துகொண்டேன். பிஎன்சிஆர்டி பாடத்திட்டங்களை முழுமையாக படித்தாலே நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். தேசிய அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்தில், சிறந்த மருத்துவராக வரவேண்டும் என்பது என்னுடைய லட்சியம்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் ராமநாதபுரம் கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீராம் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீராம் கூறும்போது, ‘‘நீட் தேர்வில் சாதனை படைப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. நீட் தேர்வில் 700க்கு மேல் பெற வேண்டும் என எனது தாய் ஊக்கம் அளித்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீட் தேர்வு விடை குறிப்பு வெளியிட்டதும் எனது பள்ளி ஆசிரியர்கள் 720 பெறுவேன் என உறுதியளித்தனர். தற்போது தேர்வில் முழு மதிப்பெண்களை பெற்றதும் மகிழ்ச்சி அடைந்தேன். எப்போதும் குழுவாக சேர்ந்து படிப்போம். மாணவர்கள் நாம் அடைய வேண்டியதை நினைத்து விரும்பி படித்தால் எதிலும் சாதிக்கலாம். யாருடைய வற்புறுத்தலுக்காகவும் படிக்காமல், பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். மருத்துவம் படித்த பின் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்பதே ஆசை’’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...