கமல் இப்போது ‘தக் லைஃப்’ படத்தின் க்ளைமாக்ஸூக்கு முந்தைய ஆக்ஷன் காட்சிகளின் ஷூட்டிங்கில் பரபரப்பாக இருக்கிறார். அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இவற்றை இப்போது பாண்டிச்சேரியின் விமானநிலையத்தில் ஷூட் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சண்டைக்காட்சியில், கமலுடன் சிம்பு, அசோக் செல்வனும் சேர்ந்து நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆக்ஷன் காட்சிக்காக சுமார் 150 ஜூனியர் ஆர்டிஸ்ட்களையும் வைத்து இயக்கி கொண்டிருக்கிறார் மணிரத்னம். அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த ஷூட்டிங் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்து கமல், பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் அவருக்கு படம் முழுவதும் வருகிற கதாபாத்திரம் இல்லையாம். சிறப்புத்தோற்றத்தில் மட்டுமே நடிக்கிறார்.
இந்த செய்தியை கேள்விப்பட்டதும், கமல் நடிக்கும் காட்சிகள் வெறும் 2 நிமிடங்கள்தான் என்றும் சிலர் 5 நிமிடங்கள் மட்டும்தான் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆனால் உண்மையில், இந்தப் படத்தில் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏறக்குறைய 12 நிமிடங்கள் மட்டும்தான் இடம்பெற இருக்கிறதாம். மேலும் இவரது கதாபாத்திரத்தை வைத்துதான் கல்கி 2898 ஏடி படம் முடிவடைகிறதாம், அதாவது அதன் இரண்டாவது பாகத்திற்கான ஆரம்பமாக கமல் இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அடுத்து கமல் நடித்த படங்களில், ’இந்தியன் 2’ இசைதான் தூள்கிளப்புகிறதாம். அனிருத் இசையில் தாத்தா பாடல் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனாலும் இசை தளங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.
பிரபல இசைத்தளமான ஸ்பாட்டிஃபை-யில் 9,44,802 ஸ்ட்ரீம்களை பெற்றிருக்கிறது. 2024-ல் வெளியாகி இருக்கும் தென்னிந்தியப் படங்களின் அதிக ஸ்ட்ரீம்களைப் பெற்ற படம் என்ற பெருமையை ’இந்தியன் 2’ பெற்றிருக்கிறது. அதே இந்தியாவில் ஐ-ட்யூன்ஸ் தளத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் 2024-ல் முதலிடத்தைப் பிடித்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. யூட்யூப்பில் பாரா பாடல் சுமார் 5.8 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்கிறது.
இதனால் கமல் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறாராம்.
ஜான்வி நடிகையாவது ஸ்ரீதேவிக்கு பிடிக்கவில்லை
தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் கவர்ச்சி கன்னியாக கோடிக்கணக்கான முன்னாள் வாலிபர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் ஸ்ரீதேவி. இவரது நடிப்பும், அழகும், கவர்ச்சியும் உச்சத்திற்கு அழைத்து சென்றன.
ஆனால் இவரது வாரிசுகளான ஜான்வி கபூர், குஷி கபூர் இருவருக்கும் அம்மாவைப் போல் நடிகையாக வேண்டுமென்ற கனவு அவர்களது சின்ன வயதிலிருந்தே இருக்கிறது. ஆனால் ஸ்ரீதேவி உயிருடன் இருந்தவரையிலும், தனது வாரிசுகளை நடிகையாக களமிறக்கி விடுவதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.
ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளருமான போனி கபூரும் கூட தனது மகள்களை வைத்து ஒரு படம் கூட தயாரிக்கவில்லை. ஹிந்தி சினிமாவில் முன்னுக்கு வர போராடிக்கொண்டிருக்கும் ஜான்வி கபூரை தான் தயாரித்த தமிழ்ப் படங்களிலும் கூட நடிக்க வைக்க போனி கபூர் ஒரு முறை கூட முயற்சிக்கவில்லை.
இதனால் தனது அப்பா, அம்மா ஆதரவு இல்லாமல் முன்னுக்கு வர போராடிக்கொண்டிருக்கும் ஜான்வி, சமூக ஊடகங்களில் கவர்ச்சிப் படங்களையும், ரீல்களையும் வெளியிட்டு எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டுமென தவித்து கொண்டிருக்கிறார். நடிகையாக வேண்டுமென ஆசைப்பட்ட ஜான்வி கபூருக்கு ஏன் அவரது அப்பா, அம்மா ஆதரவு கிடைக்கவில்லை.
இதற்கான காரணம் இப்போதுதான் தெரியவந்திருக்கிறது.
’நான் எப்பெல்லாம் சூப்பரா டிரெஸ் பண்ணிட்டு கண்னாடி முன்னாடி ஒரு நடிகை மாதிரி நிற்பேனோ அப்பெல்லாம் என்னோட அம்மா, நீ ஒரு டாக்டரா வரணும்னுதான் சொல்வாங்க. நான் நடிகை ஆகுறதுல அம்மாவுக்கு விருப்பம் இருந்ததே இல்ல.’’ என்று பட்டென்று உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்.
ஆனாலும் தனது பிடிவாதம் காரணமாகவே இப்போது நடிகையாகி இருக்கிறார் ஜான்வி கபூர் என்பதால்தான் அவரது தந்தை போனி கபூரும் ஜான்வியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் தலையிடுவது இல்லையாம்.
ஜாதி வெறிக்கு பலியாகுமா தெலுங்கு சினிமா?
தெலுங்கு பேசும் ஆந்திராவில் சந்திரபாபு மற்றும் பவன் கல்யாணின் வெற்றியைத் தூக்கிப்பிடித்து கொண்டாடுகிறது தெலுங்கு சினிமா உலகம். ஆனால் கடந்த முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜகன்மோகன் ரெட்டிக்கு இது போன்ற பாராட்டுகளை தெலுங்கு சினிமா முன்வைக்கவில்லை.
இந்த முறை சந்திர பாபு நாயுடு ஜெயித்ததுமே, தொடர்ந்து பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெலுங்கு சினிமா உலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம், தெலுங்கு சினிமாவின் வியாபாரம் முழுவதையும் ஆட்டிப்படைப்பவர்கள் கம்மா மற்றும் கப்பு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதாவது தெலுங்கு சினிமாவில் ஆதிக்க செலுத்துபவர்களில் 90% பேர் சந்திரபாபு நாயுவின் கட்சி ஆதரவாளர்கள்தானாம்.
இதனால்தான் இதுவரையில் இல்லாத வகையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் இந்த தேர்தலில் #ஜெய்டிடிபி என சமூக ஊடகங்களில் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக ஒரு ஹேஷ்டேக்கை பயன்படுத்தியது. ஒரு சங்கம் ஒரு கட்சிக்கு ஆதரவாக களமிறங்கியதை அதில் உறுப்பினர்களாக இருக்கும் பல தயாரிப்பாளர்கள் கொண்டாட்டமாக பார்த்திருக்கிறார்கள்.
இதற்கு காரணம் முன்பு முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு சினிமா உலகிற்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. தெலுங்கு சினிமா புள்ளிகளை அவர் உற்சாகத்துடன் வரவேற்றதும் இல்லை. ஆனால் திரையரங்கு டிக்கெட் விலை உயர்வு, சினிமா நிகழ்ச்சிகளுக்கான ஒப்புதலில் தாமதம் அல்லது மறுப்பு என கடுமையாக நடந்து கொண்டதால், தற்போது தங்களது சமூகத்தை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வரானதும் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
சந்திரபாபுவின் வெற்றிக்கு பவன் கல்யாணின் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். இதனால், பவன் கல்யாண் போட்டியிட்ட பித்தாபுரம் தொகுதியில் அவரது வெற்றி உறுதியானதும், மிஸ்டர். பச்சன் என்னும் தெலுங்குப் படத்தின் ஷீட்டிங்கை அப்படியே கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு, வெடி வெடித்து கொண்டாடி இருக்கிறார்கள்.