இந்திய வரலாறு, சமகால அரசியல் தொடர்பாக தொடர்ந்து எழுதி வருபவர், எழுத்தாளர் அரவிந்தன் கண்ணையன்., அமெரிக்காவில் வசிக்கும் தமிழர். உலக வரலாறு, அமெரிக்க அரசியல் தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். இளையராஜாவின் ‘காப்பிரைட்’ விவகாரம் தொடர்பாக அரவிந்தன் கண்ணையன் எழுதியுள்ள கட்டுரை இங்கே…
‘இந்தியச் சமூகம் அடிப்படையில் ஓர் அறிவுத் திருட்டுச் சமூகம். ‘அறிவு உரிமை’ என்றால் என்னவென்றே தெரியாத நீண்ட பாரம்பர்யமும் அறிவுக் களவை தார்மீக உரிமையாகவும் அதை ஒரு தர்மம் என்றும் பேசும் சமூகம் தான் இந்தியச் சமூகம். பண்டையக் காலம் தொட்டு இன்றைய பல்கலைக் கழக பேராசிரியர்கள் வரை இது தான் நிலை. ஐரோப்பிய, கிரேக்க -ரோமானிய, பின்னர் வந்த கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய சமூகங்களில் கலைப் படைப்புகளின் சிருஷ்டி கர்த்தாக்கள் தெளிவாகக் குறிக்கப்பட்டனர். மைக்கலேஞ்சலோவுக்கெல்லாம் சம காலத்திலேயே வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டன (15-ஆம் நூற்றாண்டிலேயே). வரலாறு எழுதப்படுகிறதென்றால் படைப்புகள் தெளிவாக படைப்பாளியுடன் தொடர்புபடுத்தப்பட்டதென்று பொருள். இம்மரபு இந்திய வழக்கில் அந்தளவு கிடையாது.
2003 வாக்கில் நான் பதிப்பாளர் McGraw Hill நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அப்போது அந்நிறுவனத்தின் தலையாயக் கவலை இந்தியாவின் முக்கியக் கல்லூரிகளில், ஐஐடி உட்பட, அந்நிறுவனத்தின் வெளியீடுகளை வெட்கமேயில்லாமல் சுதந்திரமாக பிரதி எடுக்கப்பட்டு மிக மலிவாக விற்கப்பட்டதே. இதனை இந்தியர்கள் ‘எங்களுக்கு இது தான் கட்டுபடியாகும்’ என்று தார்மீக நியாயம் கற்பித்து உளமாறச் செய்தனர். ஒன்றை உருவாக்க முடியாமல் அதனை களவாடுவதை நியாயப்படுத்தினர். சமூகத்தின் அறிவு முன்னேற்றத்தில் அறிவு உரிமையும் அது உருவாக்கும் வணிகமும் வகிக்கும் பங்கு இந்தியாவில் புரிந்துக்கொள்ளப்படவே இல்லை. ஒரு புத்தகத்தை பிரதி எடுக்கும் கடைக்கு எடுத்துச் சென்றால், ‘எத்தனை காபி வேண்டும்’ என்று தான் கேட்டார்களே ஒழிய, ‘பிரதி எடுக்க உரிமை இருக்கா’ என்று கேட்டதே இல்லை. இதன் நீட்சி தான் இன்றும் எழுத்தாளர்களிடமே கூச்சமே இல்லாமல் ‘பி.டி.எப் இருக்கா’ என்று கேட்க வைக்கிறது.
இந்த இடத்தில் தான் நாம் 90களின் கடைசியில் அமெரிக்காவில் தோன்றிய நாப்ஸ்டர் தளத்தை நினைவுக் கூற வேண்டும். அமெரிக்க இசை உலகை ஆட்டிப் பார்த்த களவுத் தளம் நாப்ஸ்டர். பெரும் வழக்குகளுக்குப் பின் அது முடக்கப்பட்டது. அக்காலச் சூழலில் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் இசை விற்பனை முறையை ஐ-டியூன்ஸ் மூலம் மொத்தமாக மாற்றி அமைத்தார். ஒரு ஆல்பம் சி.டி-யில் அத்தனைப் பாட்டும் ஒருவருக்குத் தேவைப்படாததாக இருக்கும் அதற்கு தீர்வு தனிப்பட்ட டிராக்குகளை வாங்கும் வசதி ஏற்படுத்துவதே என்றார். நாப்ஸ்டரால் மரண அடி வாங்கிய ரெக்கார்டிங் கம்பனிகள் மிகுந்த எரிச்சலுடன் ஸ்டீவ் ஜாப்ஸின் தீர்வுக்கு ஆதரவளித்தனர்.
சினிமா, இசைத் துறைகளின் ஆகப் பெரும் சவால் களவு தான். இசையுலகில் களவை பெருமளவு மட்டுபடுத்தியதோடு இசைக் கலைஞர்களுக்கு தொடர் வருமானத்தை அளிக்கும் அமுதசுரபியாக ஐ-டியூன்ஸ் உருவெடுத்தது.
அக்டோபர் 2011-இல் நான் எழுதிய பிளாக் ஒன்றில் மேற்சொன்ன தொழில்நுட்ப புரட்சி எப்படி ரஹ்மானுக்கு உதவியதென்று சுட்டிக் காட்டி எழுதி இருக்கிறேன். 80-களில் தஞ்சையிலேயே காஸெட் ரெக்கார்டிங் கடைகள் உண்டு. அப்பா ஒரு கடையில் ரெகுலராக, ‘சிவாஜி ஹிட்ஸ்’, ‘நிலவுப் பாடல்கள்’ என்றெல்லாம் தொகுத்து – பிளேலிஸ்ட் என்ற வார்த்தை தோன்றாத காலமது – வாங்கி வருவார். அம்மாதிரி காஸெட் பதிவுகளுக்கு எம்.எஸ்.வி.யோ, ராஜாவோ ஒரு பைசா பெற முடியாத காலம். இம்மாதிரி மலிவுப் பரவலாக்கமும் டீக்கடைகளும் அவர்களின் பிரபலத்துக்கு உதவியதையும் மறுக்க முடியாது. ஐ-டியூன்ஸ் வந்த பிறகு அந்த விற்பனையையும் கணக்கில் எடுத்து ரஹ்மான் சோனி போன்ற நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தார். இதெல்லாம் ராஜாவுக்கு அமையவில்லை என்பதே உண்மை.
உலக மருந்து நிறுவனங்களின் காப்புரிமையை காப்பாற்றினால் சராசரி இந்தியனுக்கு மலிவு விலையில் மருந்து கொடுப்பது இயலாதென்று அறிந்து இந்திய மருந்து தயாரிப்புக்கு கிட்டத்தட்ட களவை நியாயப்படுத்தும் வகையான சட்டங்களே இருந்த காலமுண்டு. இது குறித்து அமெரிக்க, ஐரோப்பிய மருந்து கம்பெனிகள் தங்கள் அரசுகள் மூலமும் உலக வர்த்தக அமைப்புகள் மூலமும் அழுத்தங்கள் கொடுத்த காலத்தில் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் ‘பிரண்ட்லைன்’ பத்திரிகையில் மேற்கத்திய நிறுவனங்களின் லாப நோக்கை சாடி அறிவு என்பது இலவசமாக விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று உபதேசித்தார். அக்கட்டுரை வெளியான வலைப்பக்கத்தில் கீழே பிரண்ட்லைன் நிறுவனம், ‘இக்கட்டுரையை அனுமதி இன்றி பிரதி எடுக்கவோ விநியோகிக்கவோ கூடாது’ என்று எச்சரித்தது. அதாவது கிருஷ்ண ஐயர் எந்த முதலீடுமில்லாமல் எழுதிய கருத்தியல் கட்டுரையை இலவசமாக விநியோகிக்கக் கூடாது. ஆனால், பல நூறு கோடி முதலீட்டில் உருவாகும் மருந்துகளை அந்நிறுவனத்தினர் இலவச அறிவு விநியோகம் செய்ய வேண்டும். நல்ல நியாயம்.
அறிவு முதலீட்டை வைத்து ஒரு படைப்பாளி சம்பாதிப்பதென்பது, உழைத்து சம்பாதித்து பணக்காரர்கள் ஆகும் மரபே சமீபத்திய மரபாகக் கொண்ட இந்தியாவில் பேராசையாகப் பார்க்கப் படுவது ஆச்சர்யமே இல்லை. அமெரிக்காவின் சிறப்புப் பற்றி அயன் ராண்ட், ‘இந்த நாடு தான் ‘To make money’ என்பதற்கு அர்த்தமளித்தது’ என்றார்.
நண்பர் ஒருவர் என்னிடம் ராஜா காப்புரிமைக் குறித்து கருத்துக் கேட்டார். ஒரு அயன் ராண்ட் வாசகனாக மட்டுமல்ல அயன் ராண்டின் முதலாளித்துவ கருத்தியலை ஏற்பவனாக என் கருத்து மிகச் சுருக்கமாகம் ‘சட்டபடி ராஜா எந்தளவு தன் அறிவு மூலதனத்தை வைத்து சம்பாரிக்க இயலுமோ அந்தளவு தாராளமாக சம்பாதிக்க வேண்டும்’ என்பதுதான். ராஜா தன் உரிமையில் எள் முனையளவைக் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது. காப்புரிமை மூலம் ராஜா தயாரிப்பாளருக்கு உதவுவார் என்பது போன்ற சால்ஜாப்புகள் தேவையில்லை. ஒரு பாடலில் இசையமைப்பாளரைத் தாண்டி யாருக்கெல்லாம் உரிமை இருக்கிறது, எந்தளவு உரிமை இருக்கிறதென்பதெல்லாம் நீதிமன்றம் நிபுணர்களின் உதவிக் கொண்டு தீர்மானிக்க வேண்டியது அது பற்றி எனக்கு வேறு கருத்தில்லை.
ராஜா தன் காப்புரிமைக்காக நிதிமன்றம் சென்றதை பேராசை என்று மீம் எழுதும் அற்பர்கள் யாரும் தங்கள் வாழ்வில் குறைந்த பட்சம் அடுத்தவர் காசுக்கு ஆசைப்படாமலாவது வாழ்கிறார்களா? பேராசை தவறே இல்லை. ஆசைப்படு என்று தான் ஆசான் பாரதி சொல்லித் தருகிறான். ‘Greed, for lack of better word, is good. Greed works’ என்று வால் ஸ்டிரீட் படத்தின் புகழ் பெற்ற வசனம் சொல்வது உண்மை, அவ்வாக்கியத்தில் முக்கியமான operative words, ‘for lack of better word’. பேராசை தான் உலகின் ஆதார விசை. அதைத் தான் அயன் ராண்டின் நாயகன் ஹாங்க் ரியர்டன் சொல்லுவான்.
அமெரிக்க பாடகரான ரே சார்லஸின் வாழ்க்கை வரலாறு படமான ‘Ray’ இசைக் காப்புரிமை வணிகம் பற்றி ஒரு காட்சி விளக்கம் தரும். ரே சார்லஸை தெருவில் இருந்து கண்டெடுத்து, உருவாக்கி, அவரால் பணம் சம்பாதித்து, அவருக்கும் செல்வம் பெருக வழிச் செய்த அட்லாண்டிக் நிறுவனத்திடமிருந்து இன்னொரு நிறுவனத்துக்குத் தாவும் ரே வைக்கும் நிபந்தனை, தன் ஆல்பம் ரெக்கார்டுகளின் மாஸ்டர் தன்னுடையதென்பதே. அப்போது பிராங்க் சினாட்டிராவுக்கு தான் அம்மாதிரி உரிமை இருந்தது.
அமெரிக்காவில் இசைக் காப்புரிமைத் தொடர்பாக பல வழக்குகள் நடந்துள்ளன. அவ்வழக்குகளை நோக்கும் போது இதிலுள்ள சட்ட சிக்கல்கள் எத்தகையவை என்று புரியும். ராஜா மிக மிக முக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கைத் தொடுத்துள்ளார். இவ்வழக்கு ராஜா தொடுத்ததாலேயே இந்தளவு கவனம் பெறுகிறது. ஒரு முதலாளீத்துவ சமூகத்தின் நுகர்வோனாக ராஜா இவ்வழக்கில் வெற்றி பெற வேண்டுமென்பதே என் அவா. இதற்காக ராஜா தர்ம காரியங்களில் செலவிட வேண்டுமென்றெல்லாம் கேட்பது அற்பத்தனம். ராஜா கேட்பது தன் அறிவு உழைப்பிற்கான உரிமையையும் அதற்கான விலையையும். அறிவுத் திருட்டை வெட்கமே இல்லாமல் பிறப்புரிமையாக கருதும் சமூகத்தில் ராஜா முக்கிய வழக்குத் தொடுத்துள்ளார். ராஜா மீது இவ்விவகாரத்தில் வீசப்படும் கனைகளைப் பார்க்கும் போது, ‘ராஜா, ‘பாரீசுக்குப் போ’ என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆம். அவர் எள் முனை அளவைக் கூட விட்டுத்தர அவசியம் இல்லை. தயவு செய்து அவரை பாரீசுக்கு போகச் சொல்லி விடாதீர்கள்., நம்முடனேதான் இருக்க வேண்டும்…..நன்றி உங்கள் கருத்துக்கு…..