என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. வெள்ளத்துரை ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? பின்னர் ஏன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது? இடையில் நடந்தது என்ன?
வெள்ளைத்துரை: எஸ்.ஐ. முதல் ஏடிஎஸ்பி வரை
தமிழ்நாடு காவல்துறையில் ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்பட்டவர், எஸ். வெள்ளத்துரை. நேர்மையானவர் எனவும் பெயர்பெற்றவர். அதோடு, தனது பணிக்காலத்தில் பல ரவுடிகளின் அட்டகாசத்தையும் ஒடுக்கியவராகவும் அறியப்பட்டவர்.
கடந்த 2004ஆம் ஆண்டு சந்தன மரக்கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அந்த சிறப்பு அதிரடி படை குழுவில் எஸ். வெள்ளத்துரையும் முக்கிய இடம் பெற்றிருந்தார். அதே போல சென்னையில் பிரபல தாதா அயோத்திக்குப்பம் வீரமணி மெரினா கடற்கரை பகுதியில் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட போது, அந்த சிறப்பு படையிலும் வெள்ளத்துரை முக்கிய பங்கு வகித்தார்
கடந்த 2013ஆம் ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜையின் போது சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியில் காவல்துறை எஸ்.ஐ. ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் இருவர் வெள்ளதுரை டீமால் தான் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்தவர் வெள்ளதுரை. 1997ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியை தொடங்கினார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று ஏடிஎஸ்பியானார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை தடுப்பதற்கான சிறப்புப் படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார் வெள்ளதுரை. கடைசியாக திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார் வெள்ளதுரை.
வெள்ளத்துரை சஸ்பெண்ட் ஏன்?
வெள்ளத்துரை, 27 ஆண்டுகால காவல் பணியை தொடர்ந்து நேற்று பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில், ஒரு நாளுக்கு முன்னதாக நேற்று முன்தினம் அவரை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வெள்ளத்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஓய்வு பெற, டிஜிபி சங்கர் ஜுவால் பரிந்துரைத்த நிலையில், உள்துறை செயலாளர் அமுதா அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குமார் என்ற கொக்கி குமார் என்பவர் போலீஸ் காவலின் போது மர்மமாக மரணம் அடைந்தார். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். அந்த வழக்கு முடிவடையாத நிலையில் அதில் குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரை மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால், பணியிடை நீக்கம் உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் அதை ரத்து செய்த உத்தரவும் வெளியானது. ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டார்.
வெள்ளத்துரை மீதான மனித உரிமை ஆணையத்தில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாக, அவரது ஓய்வூதிய பலன்களில் இருந்து ஒரு வழக்கிற்கு 3 லட்சம் ரூபாய், மற்றொரு வழக்கிற்கு 2 லட்சம் ரூபாய் என 5 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்து பணி ஓய்வை அனுமதிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலையிட்ட முதல்வர், ரத்தான சஸ்பெண்ட்
வெள்ளைத்துரை சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் ஏன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்பதற்கான பின்னணி காரணம் வெளியாகியுள்ளது. ஏடிஎஸ்பி வெள்ளத்துரை விவகாரத்தை பொறுத்தவரை உள்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் தன்னிச்சையாக சஸ்பெண்ட் செய்ததாகவும், இந்த உத்தரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின் உள்துறையில் உள்ள அந்த அதிகாரியை கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அதிகாரியை செல்போனில் தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின், “ஏடிஎஸ்பி எஸ். வெள்ளத்துரை மீது ஏன் இவ்வளவு பெரிய நடவடிக்கை. என் கவனத்திற்கு வரமால் ஏன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று கடிந்துகொண்டதாகவும், இந்த செயல் அதிருப்தி அளிப்பதாக கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.