இந்திய சினிமா 2023-ல் தேறியதா இல்லையா என்பது குறித்த ஆய்வை எர்ன்ஸ்ட் & யங் என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. கோவிட்டின் போது திரையரங்குகளுக்கு வந்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கணிசமாக குறைந்தது. இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
2023-ல் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை சொல்லி கொள்ளுமளவிற்கு அதிகரித்து இருக்கிறது. இதுதான் இந்திய சினிமாவிற்கு நம்பிக்கை அளிக்கும் ஒரே விஷயமாக இருக்கிறது.
அடுத்து வேறென்ன அம்சங்கள் இந்திய சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
கடந்த ஆண்டில் மட்டும் 1,796 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 11% அதிகமாகும். 2022-ல் 1,623 திரைப்படங்கள் மட்டும் வெளியாகின. இதில் தென்னிந்திய திரையுலகம் மட்டும் 1,047 திரைப்படங்களை பங்களிப்பாக வெளியிட்டு இருக்கின்றன. அதாவது 58% புதிய படங்கள் தென்னிந்திய திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இந்திய அளவில் படங்கள் திரையிடப்படும் திரைகள் அதாவது திரையரங்குகளின் எண்ணிக்கையும் 4% அதிகரித்து 9,742 திரைகளாக அதிகரித்து இருக்கின்றன. இவற்றில் 4,573 திரைகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. அதாவது மொத்த திரைகளின் எண்ணிக்கையில் இது 47% ஆகும். மீதமுள்ள திரைகள் இந்தியாவின் இதரப் பகுதிகளைச் சேர்ந்தவை.
திரைப்படங்கள், திரைகள் என பார்க்கையில் அடுத்து டிக்கெட்கள். இந்த விஷயத்தில் மட்டும் 2023-ல் இந்திய சினிமாவிற்கு சறுக்கல். 2022-ல் 944 மில்லியன் டிக்கெட்கள் விற்பனை ஆன நிலையில், 2024-ல் 900 மில்லியனாக குறைந்திருக்கிறது. 5% டிக்கெட் விற்பனை சரிந்திருப்பது, சினிமா என்பது இந்தியர்களுக்கு ஓரு ஆடம்பரமான சமாச்சாரமாகவே இருந்து வருவதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
அடுத்து வசூல். உள்நாட்டு திரையரங்கு வசூல் ஏறக்குறைய 12,000 கோடிகளை முதல் முறையாக தாண்டியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதிக விலை வைத்து விற்கப்பட்ட டிக்கெட்கள். இதனால் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய சினிமாக்களில் மட்டும் இருந்து அதிகம் வசூலாகி இருக்கிறது. ஒட்டுமொத்த வசூலில் தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டும் 5,200 கோடி வசூல் செய்திருக்கின்றன. இந்திய அளவில் இது 43% ஆகும்.
உள்நாட்டு திரையரங்குகளில் மட்டுமில்லாமல், வெளிநாட்டு திரையரங்குகளிலும் இந்திய திரைப்படங்கள் வெளியாவது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. 2023-ல் மட்டும் 339 இந்திய திரைப்படங்கள், உலகளவில் 38 நாடுகளில் வெளியாகி இருக்கின்றன. அதாவது வெளிநாட்டு திரையிடல்களை இது குறிக்கிறது. 2022-ல் 33 நாடுகளில் மட்டுமே நம்முடைய இந்திய திரப்படங்கள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் உலகளவில் இந்திய சினிமா தனது சந்தையை விரிவுப்படுத்தி வருவது தெளிவாகி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டு திரையரங்கு உரிமையானது, கணிசமாக அதிகரித்து இதுவரை இல்லாத வகையாக 19% அதிகமாகி இருக்கிறது. இதன் மூலம் சுமார் 1900 கோடி வசூல் ஆகியிருக்கிறது.
திரையரங்குகளை நம்பாமல் சில படங்கள் சூழ்நிலைகளின் காரணமாக, ஒடிடி / டிஜிட்டல் தளங்களில் வெளியாவதும் இப்போது தொடர்கதையாகி இருக்கிறது. 2023-ல் ஒடிடி அல்லது டிஜிட்டல் வெளியான படங்கள் மொத்தம் 57 மட்டுமே. ஆனால் 2022-ம் ஆண்டில் 105 படங்கள் நேரடியாக ஒடிடி / டிஜிட்டல் தளங்களில் வெளியாகின. மேலும் திரையரங்குகளில் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே ஒடிடி / டிஜிட்டல் தளங்கள் திரைப்படங்களை வாங்கும் நிலை இன்னும் இறுக்கமாகி இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, வெளியான 1,796 புதிய படங்களில் 400 படங்கள் மட்டுமே ஒடிடி / டிஜிட்டல் தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளன. அதாவது 2023-ல் வெளியான மொத்த படங்களில் வெறும் 22% படங்கள் மட்டுமே ஒடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. மீதமுள்ள 1,396 படங்களின் தயாரிப்பாளர்கள் ஏதாவது ஒடிடி தளம் தங்களது பட ஒடிடி உரிமையை வாங்கமாட்டார்களா என வருத்தத்துடன் காத்திருக்கிறார்கள்.
பத்து வருடங்களுக்கு முன்பு கொடி கட்டிப்பறந்த தொலைக்காட்சி உரிமம், இப்போது கேள்விக்குறியாகி வருகிறது. இதற்கு காரணம் தொலைக்காட்சி உரிமையை வாங்கி ஒளிப்பரப்பும் சேனல்களுக்கு ரேட்டிங் பெரிதாக கிடைப்பதில்லை. அதே போல் வருமானம் பார்ப்பதும் பெரும்பாடாக மாறியிருக்கிறது.
இந்த வரிசையில் அடுத்து வருவது இசை. 2023-ல் இசைத்துறை சொல்லிக்கொள்ளுமளவிற்கு வளர்ச்சிக்கண்டிருக்கிறது. 10% வளர்ச்சியை எட்டியிருப்பதால், 2,400 கோடி ரூபாய் இசைத்துறையில் புழங்கியிருக்கிறது.
இந்த தரவுகளின் அடிப்படையில் இந்திய சினிமா துறையின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் எனவும், 2026-ம் ஆண்டில் மொத்த சராசரி வருவாய் சுமார் 27,400 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இதெல்லாம், மிக தரமான படைப்பு, புதுமை, செளகரியமான டிக்கெட் விலை, அவசியமான, நவீன கட்டமைப்பு மற்றும் விநியோகம் ஆகிய அம்சங்களைப் பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அம்சங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்து கொண்டு, இந்திய சினிமா அடுத்த இரண்டு ஆண்டுகளில் எந்த மாதிரியான வளர்ச்சி எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்
கோடிகளில் | வருட ரீதியாக மதிப்பு | வருட ரீதியாக மதிப்பு | வருட ரீதியாக மதிப்பு | வருட ரீதியாக மதிப்பு | 2023-ல் வளர்ச்சி | கணிப்பு | கணிப்பு |
2020 | 2021 | 2022 | 2023 | 2024 | 2025 | ||
உள்நாட்டு திரையரங்கு வசூல் | 2,500 | 3,900 | 10,500 | 12,000 | 14% | 12,600 | 14,600 |
வெளிநாட்டு திரையரங்கு வசூல் | 300 | 600 | 1,600 | 1,900 | 19% | 2,000 | 2,300 |
சேட்டிலைட் உரிமை | 700 | 700 | 1,400 | 1,500 | 7% | 1,500 | 1,600 |
டிஜிட்டல்/ஒடிடி உரிமை | 3,500 | 4,000 | 3,300 | 3,500 | 6% | 3,700 | 4,200 |
இசை | 1,500 | 1,900 | 2,200 | 2,400 | 9% | 2,800 | 3,700 |
சினிமாவில் விளம்பரம் | 200 | 100 | 500 | 800 | 60% | 850 | 1,000 |
மொத்தம் | 8,700 | 11,200 | 19,500 | 22,100 | 13% | 23,450 | 27,400 |
நல்ல கதையம்சம், புதுமையான திரைக்கதை, குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கும் வகையில் மலிவான டிக்கெட் விலை, இடைவேளை ருசிக்க பாக்கெட்டை பதம் பார்க்க கேண்டீன் விலை, பார்க்கிங் கொள்ளை இல்லாத கட்டணம் என எல்லாமும் சரியாக அமைந்தால், இந்திய சினிமா இன்னும் பெரும் வளர்ச்சியை எட்டும்.
இதை செய்வார்களா என்பதை மட்டும் யாராலும் கணிக்கமுடியவில்லை.
Credits – FICCI, ERNST & YOUNG