No menu items!

இந்த ஐந்து பேர்தான் முக்கியம் – டி20 உலக கோப்பை

இந்த ஐந்து பேர்தான் முக்கியம் – டி20 உலக கோப்பை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நாளை தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் நாம் கவனிக்க வேண்டிய 5 வீர்ர்களைப் பற்றி பார்ப்போம்.

விராட் கோலி:

தோனிக்கு பிறகு ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்படும் வீர்ர் விராட் கோலி. இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அவருக்கு கடைசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராக இருக்கும் என்று கருதப்படுகிறது. தன் கடைசி உலகக் கோப்பையில் எப்படியும் சாம்பியன்ஷிப் அடிக்க வேண்டும் என்ற லட்சிய வெறியுடன் கோலி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய கோலி, 741 ரன்களை விளாசி, அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்ச் கேப்பை வென்றார். அதனாலேயே டி20 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக கோலியை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அணி நிர்வாகமும் அதை செய்யும் மூடில் இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரரோ அல்லது நம்பர் 3 பேட்ஸ்மேனோ, விராட் கோலியின் பேட்டில் இருந்து பந்து பறப்பதைப் பொறுத்தே இந்தியாவின் கோப்பை கனவு நிறைவேறும் வாய்ப்பு இருக்கிறது.

ஜஸ்பிரித் பும்ரா:

கோலிக்கு அடுத்து இந்த உலகக் கோப்பையில் இந்தியா அதிகம் நம்பியிருக்கும் வீரர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் முதன்முதலாக டி20 போட்டிகளில் ஆடத் தொடங்கியது 2016-ம் ஆண்டில்தான். அறிமுகமான அந்த ஆண்டுமுதல் இன்றுவரை டி20 போட்டிகளின் கதாநாயகனாக இருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா. 62 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, அதில் 74 விக்கெட்களை எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பையை பொறுத்தவரை 12 போட்டிகளில் ஆடி 20 விக்கெட்களை எடுத்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை விக்கெட்களை வீழ்த்துவதைவிட ரன்களை கட்டுப்படுத்துவதுதான் முக்கியம். அந்த விதத்திலும் சிறப்பாக பங்களித்துள்ளார் பும்ரா. ஒரு ஓவருக்கு சராசரியாக 6.48 ரன்களையே அவர் விட்டுக்கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியபோதிலும், ஜஸ்பிரித் பும்ரா மட்டும் ரசிகர்களை ஏமாற்றாமல் 13 போட்டிகளில் 20 விக்கெட்களை எடுத்தார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி இல்லாத சூழலில் முழுக்க முழுக்க பும்ராவையே இந்திய அணி நம்பியிருக்கிறது. பும்ராவின் யார்க்கர்கள் இந்திய அணியை கரை சேர்க்குமா என்று பார்ப்போம்.

டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா):

டிராவிஸ் ஹெட்டைப் பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிதாக விளக்கத் தேவையில்லை. ஐபிஎல் தொடரில் தன் அதிரடி பேட்டிங் மூலம் ஏற்கெனவே அவர் தன்னை நிரூபித்துள்ளார். ஐபிஎல்லில் கலக்கிய அதே வேகத்தில் இப்போது அமெரிக்காவுக்கு பறந்திருக்கிறார் டிராவிஸ் ஹெட். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிக்கான உலக்க் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் டிராவிஸ் ஹெட். இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா வெல்ல வாய்ப்பு இருந்தது. ஆஸ்திரேலியா 47 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது.

அப்போது இந்தியாவுக்கும் உலகக் கோப்பைக்கும் நடுவில் தடையாக இருந்தவர் டிராவிஸ் ஹெட். 120 பந்துகளில் 137 ரன்களைக் குவித்த டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியா பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். இப்போது டி20 கோப்பையை வெல்லவும் ஆஸ்திரேலிய அணி ஹெட்டையே நம்பியுள்ளது.

கோரி ஆண்டர்சன் (அமெரிக்கா):

இந்த டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக களம் இறங்குகிறது அமெரிக்கா. ஆனால் முதல் முறையாக கலந்துகொள்ளும் அணிதானே, அதை எளிதில் வென்றுவிடலாம் என்று யாரும் ஒதுக்கித் தள்ள முடியாது. அதற்கு காரணம் கோரி ஆண்டர்சன்.

நியூசிலாந்து அணிக்காக ஒரு காலகட்டத்தில் சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த ஆல்ரவுண்டர்தான் கோரி ஆண்டர்சன். நியூஸிலாந்து அணிக்காக ஆடியபோது ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை (14) அடித்த வீர்ர் என்ற சாதனையை படைத்தவர் ஆண்டர்சன். சர்வதேச கிரிக்கெட் அனுபவத்தைக் கொண்ட அவர் இப்போது அமெரிக்க அணிக்காக ஆடுகிறார். சமீபத்தில் நடந்த டி20 தொடரில் வலுவான வங்கதேச அணியை 2-1 என அமெரிக்கா தோற்கடித்ததில் ஆண்டர்சன்னுக்கு அதிக பங்கு உள்ளது. அதனால் அவர் மீது கவனம் செலுத்துவது எதிரணிகளுக்கு நல்லது.

ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்):

டி20 கிரிக்கெட் போட்டியின் ஸ்பெஷலிஸ்ட் என்று ரஷித் கானை சொல்லலாம். 85 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 138 விக்கெட்களை வீழ்த்திய ரஷித் கான் ஒரு ஓவருக்கு 6.07 என்ற அளவில்தான் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அத்தனை எளிதில் பேட்ஸ்மேன்களுக்கு ரன்களை விட்டுக் கொடுக்காத ரஷித் கான், தான் பேட்டிங் செய்யும்போது மட்டும் அதிரடி காட்டுவார்.

128.75 என்ற ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ள ரஷித் கான், சிறந்த பினிஷரும்கூட. இப்படி இரு துறைகளிலும் சிறந்து விளங்கும் அவர், இம்முறை ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். அதனால் இன்னும் சிறப்பான ஆட்ட்த்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...