நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ளன. பிரச்சாரங்களை முடித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு இப்போது ஓய்வெடுக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் ஓய்வெடுக்க சென்றிருக்கிறார்கள். இந்த சூழலில் ஒவ்வொரு தலைவரும் இந்த தேர்தலுக்காக எந்த அளவுக்கு கடுமையாக உழைத்துள்ளார்கள் என்ற தரவுகள் வெளியாகி உள்ளன.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை மிகக் கடுமையாக உழைத்த தலைவராக பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தை பெறுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் முடியும் நாள் வரையிலான 76 நாட்களில் அவர் மொத்தம் 206 பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இதில் அவர் பங்கேற்ற பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்கள் அடங்குகின்றன. இந்த 76 நாட்களில் 3 நாட்கள் அவர் அதிகபட்சமாக தலா 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் 31 கூட்டங்கள்:
இந்த முறை பிரதமர் மோடி அதிக அளவில் பிரச்சாரம் செய்தது உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான். அம்மாநிலத்தில் மொத்தம் 31 பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்துக்கு அடுத்ததாக பிஹாரில் 20 பிரச்சார கூட்டங்களிலும், மகாராஷ்டிராவில் 19 பிரச்சார கூட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். மேற்கு வங்கத்தில் ஒரு ரோட் ஷோ உள்ளிட்ட 18 நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்றுள்ளார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட இந்தியாவில் நடத்தாத பிரதமர் என்ற பெயர் மோடிக்கு உண்டு. அந்த அளவுக்கு அவர் செய்தி நிறுவனங்களிடம் இருந்து தள்ளியே இருந்தார். ஆனால் இந்த முறை தேர்தலை முன்னிட்டு அவர் 80 செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். தான் சாதாரண மனிதர் அல்ல… அவதாரம் என்றும், காந்தி பற்றிய படம் வெளியாகும் வரை அவரை பலருக்கு தெரியாது என்றும் இந்த பேட்டிகளின்போது மோடி சொன்னது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நரேந்திர மோடிக்கு அடுத்த்தாக உள்துறை அமைச்சர் அமித் ஷா 188 பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
ராகுலை முந்திய பிரியங்கா:
பாஜக தலைவர்கள் அதிக இடங்களில் பிரச்சாரம் செய்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அந்த அளவுக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்யவில்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான ராகுல் காந்தி, இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக 107 பிரச்சாரக் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அவரது சகோதரியான பிரியங்கா காந்தி 108 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தேர்தலுக்காக மொத்தம் 16 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
ராகுல் காந்தியைவிட ஒரு இடத்தில் கூடுதலாக பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தி, 100-க்கும் மேற்பட்ட பேட்டிகளையும் கொடுத்துள்ளார். அந்த வகையில் பிரச்சாரத்தில் ராகுல் காந்தியை பிரியங்கா காந்தி முந்தியுள்ளார்.