No menu items!

காந்தியை மக்களுக்குத் தெரியாதா? – மோடிக்கு குவியும் கண்டனங்கள்

காந்தியை மக்களுக்குத் தெரியாதா? – மோடிக்கு குவியும் கண்டனங்கள்

மகாத்மா காந்தியைப் பற்றி பிரதமர் மோடி அளித்த பேட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த பேட்டியில் ‘காந்தியைப் பற்றி திரைப்படம் வருவதற்கு முன்பு, உலகில் அவரை யாருக்கும் தெரியாது’ என்று மோடி கூறியிருந்தார். பிரதமர் மோடி சொல்வதைப் போல 1982இல் காந்தி திரைப்படம் வெளியான பிறகுதான் அவரை உலகில் உள்ளவர்கள் தெரிந்து கொண்டார்களா? உண்மை என்ன?

வரலாறு என்ன சொல்கிறது?

உலக புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் 1909இல் காந்தியைத் தெரிந்து வைத்திருந்தார். அவருடன் நட்பு கொண்டிருந்தார். அதனைப் பற்றி இருவருமே எழுதியுள்ளார்கள்.

வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோ சி மின் 1920இல் காந்தியை அறிந்து வைத்திருந்தார். அதை பதிவு செய்துள்ளார்.

அறிவியல் உலகின் தந்தை ஐன்ஸ்டீன் 1931இல் காந்தியைப் பற்றி எழுதியிருக்கிறார். காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உலகையே தன் நடிப்பால் கட்டிப்போட்ட சார்லி சாப்ளின் 1931இல் காந்தியைச் சந்தித்து பேட்டி எடுத்துள்ளார்.

நெல்சன் மண்டேலா காந்தியிடம் இருந்து தான் பாடம் கற்றுக்கொண்டதாக 1940களில் பேசியிருக்கிறார்.

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் லூயி ஃபிஷர் காந்தியைப் பற்றிய சுயசரிதையை எழுதி 1950இல் புத்தகமாக வெளியிட்டார்.

இது எல்லாம் காந்தியைப் பற்றி அட்டன்பாரோ எடுத்த திரைப்படம் 1982இல் வெளிவருவதற்கு முந்தைய சரித்திரங்கள்.

காந்தியைப் பற்றிய அட்டன்பாரோ படம் வெளிவருவதற்கு முன்பே காந்தியைப் பற்றி ஒரு ஆவணப்படத்தை ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று அடையாளப்படுத்தப்படும் ஏ.கே. செட்டியார் எடுத்திருந்தார். இதற்கான முயற்சியை ஏ.கே. செட்டியார் 1937இலேயே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தியைப் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரிப்பதற்காகக் காந்தி எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்தாரோ அந்த நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்தார் ஏ.கே. செட்டியார். அந்தந்த நாடுகளில் உள்ள செய்தி நிறுவனங்கள் படம் பிடித்து வைத்திருந்த ஃபிலிம் ரோல்களை சேகரித்தார்.

இப்படி காந்தி ஆவணப்படத்திற்காக ஏ.கே. செட்டியார் ஒரு லட்சம் மைல் பயணம் செய்தார். ஏனெனில், அந்தளவு அப்போதே உலகம் காந்தியை அறிந்திருந்தது.

உலகத்தை மூன்று முறை சுற்றிச் சுற்றி காந்தியைப் பற்றிய ஃபிலிம் ரோல்களை சேகரித்தார், ஏ.கே. செட்டியார். இதில் ரஷ்யாவுக்கு மட்டும் தான் செட்டியார் செல்லவில்லை. ஏனெனில், காந்தியும் ரஷ்யாவுக்குச் செல்லவில்லை. ஆனால், 1909இலேயே ரஷ்யர்கள் காந்தியை அறிந்திருந்தார்கள் என்பதற்கு லியோ டால்ஸ்டாய் எழுத்துகளே சாட்சி.

ஏ.கே. செட்டியார் ஆவணப்படம் 1940இல் வெளிவந்தது. இந்தப் படம்தான் காந்தியைப் பற்றி முதன்முதலாக வெளியே வந்தது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத் தான் அட்டன்பாரோ தனது ஹாலிவுட் படத்தைத் தயாரித்தார். காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டமாக மத்திய அரசு காந்திக்காக ஒரு இணையத்தளத்தை உருவாக்கியது. அதில் செட்டியார் எடுத்த ஆவணப்படம்தான் உள்ளது.

1982இல் அட்டன்பரோவின் காந்தி படம் வெளிவருவதற்கு 50 ஆண்டுகள் முன்பே காந்தி உலகளவில் பிரபலமாகியிருந்தார் என்பதற்கு ஏ.கே. செட்டியார் ஆவணப்படம் மட்டுமல்ல, உலக அளவில் மிகப்பிரபலமான அமெரிக்காவில் வெளியாகும் ‘டைம்’ வாரப் பத்திரிகையும் சாட்சி. டைம் இதழ் 1932இலேயே காந்தியை அட்டைப் படத்தில் போட்டுக் கட்டுரை எழுதியிருந்தது. அக்காலகட்டத்திலேயே உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் அவர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தனர்.

காந்தி 1948இல் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது உலகில் உள்ள 52 நாடுகள் அவருக்காகத் துக்கம் அனுசரித்தன. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூடி அஞ்சலி செலுத்தினர். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் கண்ணீர் மல்க அறிக்கை வெளியிட்டார்.

ஐன்ஸ்டீன், ‘உலக அரசியல் சரித்திரத்தில், காந்தியடிகள் ஒரு சிறந்த புருஷர். வருங்காலத்தில் இப்படி ஒரு மனிதர் நம்முடன் வாழ்ந்தார் என்பதை வரும் தலைமுறை நம்ப மறுப்பார்கள்’ என்று அஞ்சலி குறிப்பில் எழுதினார்.

‘அளவுக்கு மீறி நல்லவனாக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது’ என்றார் பெர்னார்ட் ஷா.

இலண்டனில் உள்ள பிபிசி நிறுவனம் காந்தியின் இறுதி யாத்திரையை ஒளிபரப்பு செய்தது. அந்நாட்டுப் பிரதமர் அட்லி அஞ்சலி செய்தியை வெளியிட்டார்.

காந்தி பற்றி ஆராய்ச்சி செய்து புத்தகங்களை எழுதியிருக்கும் இந்திய வரலாற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா சொல்கிறார்: “இந்திய விடுதலைக்காகப் போராடுவதற்கு முன்பே, 1900களிலேயே காந்தி தெற்கு  ஆப்ரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் ஆப்ரிக்க கறுப்பர்களுக்காக போராடினார். அங்கேதான் அவரது போராட்டம் தொடங்கியது. அப்போதே உலக நாடுகள் அவரை தெரிந்து வைத்திருந்தனர்.

தெற்கு ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற பிறகே அவர் இந்தியாவுக்கு 1919இல் திரும்பினார். அதன்பின்னர் அவர் நடத்திய உப்பு சத்தியாகிரகம் போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது. இந்தப் போராட்டத்தைக் கண்டு வியந்துதான் 1932இல் ‘டைம்’ பத்திரிகை அவரைப் பற்றி அட்டைப்பட கட்டுரை எழுதியது.

அடுத்து அவர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தார். இங்கிலாந்து அரசாட்சியை எதிர்த்ததால் அவரை ஐரோப்பா கண்டம் முழுவதும் தெரிந்தது. ஆகவே அவர் ஐரோப்பா கண்டத்தில் தலைவராக மாறினார்.

தொடர்ந்து காந்தி இந்தியாவில் செய்த அரசியல் மாற்றத்தால், ஜப்பான், ஆப்கானிஸ்தான் போன்ற ஆசியக் கண்டமே அவரை அறிந்து வைத்திருந்தது. அவர் ஆசியக் கண்டத்தில் தலைவராகவும் வலம் வந்தார். அன்றைக்கு மூன்று கண்டங்கள் அறிந்து வைத்திருந்த ஒரே தலைவர் காந்திதான்.”

எட்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற காந்தி

காந்தி உலகளவில் பிரபலமான பின்னர்தான் இந்தியாவும் யுனைடெட் கிங்டமும் (UK) இணைந்து ஆங்கிலத்தில் காந்தி பற்றிய திரைப்படத்தை தயாரித்தது. இந்தப் படம் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.

ஜான் பிரிலே எழுதிய திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட ‘காந்தி’ படத்தை கொழும்பியா பிக்சர்ஸ் வெளியிட்டது. படத்தை இயக்கியது புகழ்பெற்ற இயக்குனர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. படத்தில் அச்சு அசலாக காந்தியாகவே வாழ்ந்திருந்தார் நடிகர்  பென் கிங்ஸ்லி.

’காந்த்’ திரைப்படம் எட்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றது. வசூலிலும் உலக சாதனை புரிந்தது.

ஆஸ்கர் விருது விழாவில்  சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘காந்தி’ படத்துக்கு அறிவிக்கப்பட்ட போது ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல்  இசைக்கப்பட்டது.

விருதை பெற்ற பின்னர் அட்டன்பரோ கூறியதை எவரும் மறக்க முடியாது. “அன்பு நண்பர்களே, உண்மையில் இந்த விருதுகள் எனக்கோ, பென் கிங்ஸ்லிக்கோ அல்லது தொழில்நுட்பத்திற்காக வென்றவர்களுக்கோ அல்ல. இந்த விருதுகள் மூலமாக மகாத்மா காந்திக்கும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்ற அவருடைய குறிக்கோளுக்கும் நாம் அனைவரும் மரியாதை செலுத்துகிறோம்” என்று கூறினார்.

அந்தளவு காந்தியின் அகிம்சை கொள்கையை அதற்கு முன்பே உலகம் அறிந்திருந்தது. எழுத்தாளர் சொக்கன் சொல்கிறார்: “பெங்களூரில் காந்தி பவன் என்று ஓர் இடம் இருக்கிறது. அங்கு ஒரு நூலகம் இருக்கிறது. ஒரு நடுத்தர அளவு அறை முழுக்கக் காந்தியைப் பற்றிய புத்தகங்கள்தான். அங்கு இருக்கும் காந்தி புத்தகங்கள் அவ்வளவு என்றால், இல்லாத புத்தகங்கள் இன்னும் பேரளவு. காந்தி அளவுக்கு அறியப்பட்ட, எழுதப்பட்ட, பின்பற்றப்பட்ட, இன்றைக்கும் தொடர்ந்து பல கோணங்களில் விவாதிக்கப்படுகிற இன்னோர் இந்தியர் கிடையாது. அது இந்தியாவின் பெருமைமட்டுமில்லை, உலகின் நல்லூழ்.’

கடந்த சில நாட்களாகவே பிரதமர் மோடியின் பேச்சுகள் எல்லாம் சர்ச்சையாகி வருகின்றன. அதில் காந்தி பற்றிய பேச்சு உச்சம் தொட்டு வைரலாகியுள்ளது. எதிர்கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் சாமானியர்களும் சமூக வலைதளங்களில் மோடிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சரி, மோடிக்கு என்ன ஆச்சு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...