ஒரு திருமணம் என்றால், அதை எத்தனை நாட்கள் நடத்துவார்கள்?… அதிகபட்சம் 4 நாட்களுக்கு நடத்துவார்களா?… ஆனால் அம்பானி வீட்டு கல்யாணம் மாதக்கணக்கில் நடக்கிறது.
ஜூலை 12-ம் தேதி திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம்தான் அந்த திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகளை கோலாகலமாக ஆசை தீர நடத்தினார்கள். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் விஐபிக்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் அப்படி ஒரு விழாவை நடத்தியும் ஆசை தீரவில்லை முகேஷ் அம்பானிக்கு.
இப்போது இரண்டாவது கட்டமாக திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இன்று தொடங்கும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கப்பலில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று 800 பேருக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் அனைவரும் இன்று இத்தாலியில் நிற்கும் சொகுசுக் கப்பலில் ஏறிக்கொள்கிறார்கள். இன்று தொடங்கும் இந்த கப்பல் பயணம், ஜூன் 1-ம் தேதி முடியும் என்று கூறப்படுகிறது. இந்த 4 நாட்களும் அந்த சொகுசுக் கப்பல் இத்தாலியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் செல்கிறது. இந்த கப்பலானது சுமார் 2365 நாட்டிகல்மைல் அதாவது 4380 கிலோமீட்டர் தூரம் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது
அம்பானியின் நெருங்கிய நண்பர்களான மகேந்திர சிங் தோனி, ஷாரூக் கான், ஆமிர் கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். 800 விருந்தினர்களுடன், அவர்களை கவனிக்க 600 பணியாளர்களும் இந்த கப்பலில் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர்கள், ஆடம்பர படுக்கை அறைகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த கப்பலில் 4 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
மே 29
கப்பலில் இன்று நடக்கும் மதிய உணவுடன் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. இந்த மதிய உணவுக்கு classic cruise என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மதிய விருந்தைத் தொடர்ந்து மாலையில் ‘Starry Night’ என்ற நிகழ்ச்சி கப்பலில் நடக்கவுள்ளது இதில் கலந்துகொள்ளும் அனைவரும் மேற்கத்திய பாணியில் ஃபார்மல் உடை அணியவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மே 30
நாளை நடைபெறவுள்ள விருந்து நிகழ்ச்சிகளுக்கு ரோமன் ஹாலிடே என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் சிக் டூரிஸ்ட் பாணியில் உடைகளை அணியவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு கிரெகோ – ரோமன் பாணியில் விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் ரோமானியர்களின் பாரம்பரிய முறைப்படி உடை அணியவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மே 31
நிகழ்ச்சியின் மூன்றாம் நாளான மே 31-ம் தேதி, ‘V turns one under the Sun’ என்ற தலைப்பில் விருந்து நிகழ்சிகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம் திருமண நிகழ்ச்சியுடன் சேர்த்து, முகேஷ் அம்பானியின் பேரக் குழந்தையான வேதாவின் முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. மாலையில் ‘Pardon My French.’ என்ற பெயரில் மற்றொரு விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
ஜூன் 1
விருந்து நிகழ்ச்சியின் கடைசி நாளான ஜூன் 1-ம் தேதி, La Dolce Vita என்ற பெயரில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.