இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு இந்திய அரசு ஒரு மாத கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஜெனரல் பாண்டே மே 31 அன்று ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த நீட்டிப்பின் மூலம் அவர் ஜூன் 30-ம் தேதி வரை ராணுவ தளபதியாக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், வழக்கத்துக்கு மாறான, மிகவும் அசாதாரணமான இந்த நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
ராணுவத் தளபதி பதவி நீட்டிப்பு ஏன்?
இந்திய ராணுவ வரலாற்றில் ராணுவ தளபதி ஒருவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். முதலாவது முன்னாள் பீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா இராணுவத் தளபதியாக இருந்தபோது ஆறு மாத கால நீடிப்பு பெற்றார். இரண்டாவது ஜெனரல் ஜி ஜி பேவூர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டார். மூன்றாவதாக இப்போதைய மோடி அரசால் அதுவும் தேர்தல் முடிவுகள் வருவதற்கு சில தினங்கள் முன்பாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பொதுவாக ராணுவ தளபதி 62 வயது வரை அல்லது மூன்று ஆண்டுகள், எது முந்தையதோ அதுவரை பணியாற்றுவார். அதன்படி இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மே 31 அன்று ஓய்வு பெற இருந்தார்.
வழக்கமாக, இதுபோல் ராணுவத் தளபதி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அதற்கு சில நாட்களுக்கு முன்பு சீனியாரிட்டி அடிப்படையில் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் துணைத் தளபதி, ராணுவ தளபதியாக நியமிக்கப்படுவார். அந்த வகையில் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி அந்த இடத்தில் இருந்தார்.
இந்நிலையில்தான், உபேந்திர திவேதி தளபதியாக நியமிக்கப்படாமல், ஒரு மாதம் ராணுவத் தளபதிக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ராணுவத் தலைமைத் தளபதியை பணி மூப்புக்கு பதிலாக தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது என்றும் ஊகங்கள் பரவலாக உள்ளன.
அதேநேரம், தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் ராணுவத்தில் வழக்கமாக நடக்கும் அதிகார பரிமாற்றம் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ‘ஜூன் 4இல் தேர்தல் முடிவுகள் வரும்போது, பாஜக பெரும்பான்மை இடங்களை பெறாவிட்டால், ஆட்சி மாற்றம் இயல்பாக நடக்காமல், அமெரிக்காவில் ட்ரம்ப் செய்ததுபோல், குழப்பங்கள் விளைவிக்கப்படலாம். அதற்கான முன்னோட்டம் போல் ராணுவ தளபதி பதவி நீட்டிப்பு உள்ளது’ என்று பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.