”நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப் பிரவியாக இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு விஷயத்தை நடத்துவதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நடந்துவரும் சூழலில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பலரும் பிரச்சாரக் கூட்டங்களில் மோடியை கடவுளின் அவதாரம் போல் சித்தரித்து பேசி வருகின்றனர். கடந்த திங்கள்கிழமையன்று புரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவை ஆதரித்து பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனப் பேரணிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சம்பித் பத்ரா, “புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் பக்தர்” என்று கூறினார்.
சம்பித் பித்ராவின் இந்த கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பூரி ஜெகன்நாதரை அவமதிக்கும் வகையில் சம்பித் பத்ரா பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கொந்தளித்தனர். அவருக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தான் வெளியிட்ட கருத்துக்கு சம்பித் பித்ரா மன்னிப்பு கேட்டார். “மோடி ஜெகன்நாதரின் பக்தர் என்று சொல்வதற்கு பதிலாக, நான் ஜெகன்நாதர் மோடியின் பக்தர் என்று சொல்லிவிட்டேன். அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் விளக்கம் அளித்தார். தனது செயலுக்கான பிராயச்சித்தமாக 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த சர்ச்சை ஓய்ந்திருக்கும் நிலையில், தான் கடவுளின் அவதாரம் என்ற தொனியில் நரேந்திர மோடி பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை. என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான். ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றது கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மோடியின் இந்த பேட்டி இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை பாஜகவினர்தான் மோடியை கடவுளின் அவதாரமாக காட்சிப்படுத்தி வந்தனர். இப்போது மோடியே, தான் கடவுளால் அனுப்பப்பட்ட அவதாரம் என்று கூறியுள்ளார். இதை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியுள்ளன.



