இசையை கற்றுக்கொள்வதற்காக அம்மா கொடுத்த 400 ரூபாயுடன் சென்னைக்கு வந்தேன் என்று இளையராஜா கூறியுள்ளார்.
இந்திய இசைக் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஸ்பிக் மேகே அமைப்பின் சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் நேற்று தொடங்கியது. திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக சென்னை ஐஐடியில் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கையெழுத்திட்டது.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:
இது ஒரு முக்கியமான நாள் என்னுடைய வாழ்க்கையில, ஒரு சின்ன பையன், அது நான் தான், கிராமத்தில் இருந்து இசையைக் கற்றுக் கொள்வதற்காக, என்னுடைய அம்மா எனக்கு 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார்கள். அப்போ இசை என்றால் என்னவென்று தெரியாது, வந்து இத்தனை நாள் ஆனபோதும், இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை.
நாம் எந்த வேலையைச் செய்தாலும், அதில் கவனமாக தாகத்தோடு செயவேண்டும். அப்படிச் செய்தால் அதில் சாதித்துவிடலாம். அனைவரும் நான் சாதித்துவிட்டேன் என்று சொல்கிறார்கள். ஆனால், நான் கிராமத்தில் இருந்து எப்படி கிளப்பினேனோ அப்படியேதான் இப்போதும் இருப்பதாக உணருகிறேன்.
மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ அப்படியே இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது. யாராவது நன்றாக இசையப்பதாக சொன்னால் நான்றாக சுவாசிக்கிறீர்கள் என சொல்வது போல் உள்ளது.
இசையை கற்றுக்கொள்வதற்காக வந்த நான், இன்றைக்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. இசை எனது மூச்சாக மாறிவிட்டது. சென்னை ஐஐடியில் இருந்து 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை.
தமிழ் மொழியானது ஆயிரம் ஆண்டு பழமையான வரலாற்றை கொண்ட மொழி. நாட்டில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 6 மொழிகள் செம்மொழிகளாக அந்தஸ்து பெற்றன. அதில் முதல் மொழியாக தமிழ்தான் செம்மொழியாக அந்தஸ்து பெற்றது.
அடுத்த 7 நாட்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் புது உலகுக்குள் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். இந்த அனுபவத்தை யாரும் மறக்கமாட்டீர்கள்.
இவ்வாறு இளையராஜா பேசினார்.