2018ஆம் ஆண்டு…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மூன்று மாவட்டங்கள் முழுவதும் இணைய சேவைகள் இயங்கவில்லை. வங்கி பரிவர்த்தனைகள், பத்திரப் பதிவுகள் உட்பட இணையம் வழியாக நடக்க வேண்டிய அனைத்து வேலைகளும் ஸ்தம்பித்தன.
ஏன் இணைய சேவைகள் கிடைக்கவில்லை என்று தேடத் தொடங்கிய பின்னர்தான் அரசால் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன என்று விளக்கமளிக்கப்பட்டது.
இணையதளம் முடக்கம் என்றால் என்ன என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிந்துகொண்டது அதுதான் முதல்முறை. அந்த ஆண்டு உலகளவில் அதிகமுறை இணையதளம் முடக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. அன்று பிடித்த இடத்த இந்த ஆண்டு வரை இந்தியா தக்கவைத்து சாதனை படைத்துள்ளது.
ஆம், உலகம் முழுவதும் நடந்த ஆய்வின்படி இணையதள முடக்கம் அதிகம் ஏற்பட்ட நாடுகளில் தொடர்ந்து ஆறாவது வருடமாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவும் இணையதள முடக்கமும்
இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 116 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. சுமார் எட்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற மணிப்பூர் இனக் கலவரத்தின் போது அதிகப்படியாக 47 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்து ஜம்மு காஷ்மீரில் 17 முறையும், பிகாரில் 12 முறையும், ஹரியானாவில் 11 முறையும், மேற்கு வங்கத்தில் 6 முறையும், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் 5 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இந்தப் பட்டியலில் ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் 37 முறை இணைய முடக்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, ஈரானில் 34 முறையும் பாலஸ்தீனத்தில் 16 முறையும் உக்ரைனில் 8 முறையும் பாகிஸ்தானில் 7 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
இணைய முடக்கமும் பொருளாதார பாதிப்பும்
பொதுவாக ஒரு நாட்டில் திடீர் கிளர்ச்சிகள், கலவரங்கள், வன்முறைகள் ஏற்பட்டால் அது மேலும் வலுவடையாமல் இருக்கவும், மக்களுக்கு மத்தியில் அதைப் பற்றிய செய்திகள் பரவாமல் இருக்கவும் அந்தப் பகுதியில் இணையதள சேவை முடக்கப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்கள் மூலம் கருத்துகளும் செய்திகளும் வேகமாக உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுவதால் அவசர நிலை ஏற்படும் சமயங்களில் இணையதளம் முடக்கப்படுவதே அரசுகளின் முதல் நடவடிக்கையாக இருக்கிறது.
ஆனால், இன்று அனைத்துப் பணிகளும் இணையதளம் மூலமே நடைபெறும் நிலையில் இணையதளம் முடக்கத்தின் விளைவு, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘அரசாங்கத்தின் சாா்பாக எடுக்கப்படும் இணையதள முடக்க நடவடிக்கை, தகவல் பெறுவதில் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் இணையவழி தகவல் தொடா்பு அமைப்புகளையும் கடுமையாக சீா்குலைக்கும். மேலும், இணையதள முடக்கச் செயல்பாடுகள், காணொலி பகிா்வு, நேரடி ஒளிபரப்பு போன்ற ஊடகத்துறையினரின் பணியினையும் கடினமாக்குகிறது’ என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயா் ஆணையா் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2016 – 2021 ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த இணையதள முடக்கங்கள் உலக அளவில் 52 தோ்தல்களை பாதித்துள்ளன என்கிறது ஒரு ஆய்வறிக்கை. 2019ஆம் ஆண்டில் 14 ஆப்பிரிக்க நாடுகள் மட்டும் தோ்தல் காலங்களில் இணைய சேவையினை நிறுத்தியுள்ளன.
இணையதள முடக்கங்கள் பொருளாதார தாக்கங்களையும் ஏற்படுத்துவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனா். 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை மியான்மா் நாட்டில் நிகழ்ந்த இணையதள முடக்கத்தின் காரணமாக கிட்டத்தட்ட 22,118 கோடி ரூபாய் செலவானதாக உலக வங்கி கணக்கிட்டுள்ளது. இது இந்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றத்தை மாற்றியமைத்தது என்கிறது அந்த அறிக்கை.
இணையதள முடக்கம் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளிலும் எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகம், பெற்றோா் இடையே தகவல் தொடா்புகளைத் துண்டிப்பதுடன் கல்வி திட்டமிடல் பணிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அறிக்கை, இணையதள முடக்கத்தைத் தவிா்க்கவும் இணையதள பயன்பாட்டை அதிகரிக்கவும் தகவல் தொடா்பிற்கான தடைகளை அகற்றவும் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.