No menu items!

சிறுவன் பலி – குற்றாலம் அருவி கைமாறுகிறது!

சிறுவன் பலி – குற்றாலம் அருவி கைமாறுகிறது!

தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடையை குளிர்விக்கும் விதமாக பெய்துவரும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்க குற்றாலம் சோகத்தில் மூழ்கியுள்ளது. பழைய அருவியில் திடீரென வெள்ளம் வந்ததில் குளிக்க சென்ற 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளான். இந்த நிலையில், குற்றால அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் கனமழையால் ஆர்ப்பரித்த அருவிகள்

தமிழ்நாடு முழுவதுமே கடந்த சில மாதங்களாக முன் எப்போதும் இல்லாத அளவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் நல்ல மழை காரணமாக குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. கோடைவெயிலின் தாக்கத்தில் தவித்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் உற்சாக குளியல் போட்டனர். இந்த நிலையில் தான், நேற்று மதியம் 1 மணியளவில் பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் மற்றும் வியாபாரிகள், குளித்து கொண்டிருந்தவர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் அங்கு உற்சாகமாக குளித்த சுற்றுலா பயணிகள் அனைவரும் பதறியடித்தவாறு படிக்கட்டுகள் வழியாக இறங்கி அருவிக்கரைக்கு வெளியே ஓடி வந்தனர்.

இதனிடையே, அருவியில் கரைபுரண்ட வெள்ளம் படிக்கட்டுகளின் வழியாக பாய்ந்தோடியது. இதில், அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் வேகமாக வெளியே ஓடி வந்தபோது, அவர்களில் நெல்லை ஸ்ரீராம்நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் அஸ்வினை (வயது 17) காணாததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளத்தில் சிக்கி மாயமான அஸ்வினை உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர். இதுகுறித்து குற்றாலம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் சுமார் 30 பேர் அருவிப்பகுதி மற்றும் அருவி தண்ணீர் செல்லும் பகுதியில் அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருவி பகுதியில் இருந்து சுமார் 500 அடி தூரத்தில் ஒரு பாறையின் அருகில் அஸ்வின் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

குற்றால அருவிக்கு குளிக்க சென்ற போது தண்ணீரில் அடித்து செல்லபட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குற்றாலம் அருவிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

இந்த நிலையில், குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை விரைவில் வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் குற்றால அருவிகள் கொண்டு வரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

குற்றாலத்தில் பழைய அருவி, பிரதான அருவி, ஐந்தருவி என மூன்று அருவிகள் உள்ளன. இதில், ஐந்தருவி ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏனைய இரண்டு அருவிகளும் பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது. இந்த நிலையில், பழைய மற்றும் பிரதான அருவிளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளுக்குள் இருப்பதால் குற்றால அருவிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வனத்துறை சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் ஐந்தருவி மட்டும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையே இந்த ஐந்தருவியின் நிர்வாகத்தினை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அஸ்வின் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் ஐந்தருவியை ஒப்படைத்தது போலவே, மெயின் அருவி, பழைய அருவி இரண்டுமே வனத்துறையின் கட்டுப்பாட்டில் விட முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனத்துறையின் கட்டுப்பாடில் இருப்பதால் மேலும் ஐந்தருவிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. தண்ணீர் அதிகம் விழுந்தால் உடனே வனத்துறையினர் நிறுத்திவிடுவார்கள். தற்போது இந்த அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மெயின் அருவியில் பழைய அருவியிலும் இல்லை. எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் வந்தால் வரும் காலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது. இன்னும் ஓரிரு நாளில் இதற்கான நிர்வாக பணிகள் முடிந்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...