“ஓட்டல்ல சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காத. வீட்டுச் சாப்பாடுதான் உடம்புக்கு நல்லது” என்று பெரியவர்கள் அட்வைஸ் பண்ணிக் கேட்டிருப்போம். ஆனால் இப்போது வீட்டுச் சாப்பாடும் சேஃப்டி இல்லை என்று சொல்லியிருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம். வீட்டுச் சாப்பாடும் விஷமாகி வருகிறது என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய டயட் குறித்து சில நாட்களுக்கு முன் ஒரு வழிகாட்டு நெறிமுறையை வழங்கி இருந்தது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். அப்போது அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி இப்போது வெளியாகி உள்ளது. மாறிவரும் உணவுப் பழக்கத்தால் ஓட்டல் சாப்பாடு மட்டுமின்றி வீட்டுச் சாப்பாடும் விஷமாகி வருவதாக அதிர்ச்சித் தகவலை சொல்கிறது அந்த அறிக்கை.
அளவுக்கு அதிகமாக உப்பு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்சிக் கழகம் கூறுகிறது. இப்படி அதிகளவு உப்பு மற்றும் சர்க்கையை பயன்படுத்துவதால் டைப் 2 வகை நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. அதிக அளவு உப்பு மற்றும் சர்க்கரையை உணவில் சேர்ப்பதுடன், அதை அதிக நேரம் எண்ணெயில் போட்டு பொரிப்பது உடலில் கொழுப்பு சேர காரணமாகிவிடும் என்று அந்த அமைப்பு எச்சரிக்கிறது.
உப்பு:
பொதுவாக ஒரு நபர் நாளொன்றுக்கு 5 கிராம் உப்பைத்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி அதைப் பயன்படுத்தினால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் உப்பை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் ஆண்கள் சராசரியாக 8.9 கிராம் அளவு உப்பையும், பெண்கள் சராசரியாக 7.1 கிராம் உணவையும் பயன்படுத்துகிறார்கள். சமையலில் இந்த அளவு உப்பை பயன்படுத்துவதால் அவர்களின் உடல்நிலை கெட்டுப் போக அதிக வாய்ப்புகள் உள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் எச்சரித்துள்ளது.
சர்க்கரை:
அதேபோல சர்க்கரையை அதிக அளவில் பயன்படுத்துவதும் ஆபத்தாக முடியும் என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். நாளொன்றுக்கு ஒருவர் 25 முதல் 30 கிராம் வரையிலான சர்க்கரையைத்தான் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் ஒருவர் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஸ்பூன் சர்க்கரையை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் உங்கள் எதிர்ப்பு சக்தி குறைந்து, சீக்கிரமே முதுமையடைந்து விடக்கூடிஒய வாய்ப்புகள் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழ்ழகம் எச்சரிக்கிறது.
தேநீர் மற்றும் காபி:
இந்தியர்களிடம் உள்ள மற்றொரு பழக்கம் தேநீர் மற்றும் காபியை அதிகமாக குடிப்பது. சராசரியாக ஒரு நபர் நாளொன்றுக்கு 300 மில்லி லிட்டருக்கு மேல் காபி அல்லது தேநீர் குடிப்பது ஆரோக்கியமானது அல்ல என்கிறது மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். அதுவும் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்போ அல்லது பின்போ, அவற்றை கண்டிப்பாக குடிக்க்க்கூடாது என்பது அவர்களின் நிபந்தனை மீறி குடித்தால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள். ஆனால் நம்மில் பலருக்கு அடிக்கடி டீ அல்லது காபியைக் குடித்தால்தான் வேலையே ஓடுகிறது.
அதுபோல் அதிக எண்ணெயை ஊற்றி வீட்டில் சமைக்கப்பட்ட உணவும் கெடுதலைத்தான் தரும் என்கிறது அந்த அமைப்பு.
இப்படியாக வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவதாக இருந்தாலும், அளவுக்கு மீறி சாப்பிடுவதால் அவை விஷமாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரிக்கிறது.