இந்திய கிரிக்கெட் அணிக்கு 2021-ம் ஆண்டில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் ராகுல் திராவிட். கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகே அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால் டி20 உலகக் கோப்பை தொடர் முடியும் வரை அவரது பதவிக் காலத்தை பிசிசிஐ நீட்டித்திருந்தது. அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை முடியும்போது ராகுல் திராவிட்டின் பதவிக்காலமும் முடியவுள்ளதால், புதிய பயிற்சியாளரை தேடிக்கொண்டு இருக்கிறது பிசிசிஐ.
பிசிசிஐயை பொறுத்தவரை ராகுல் திராவிட்டே மீண்டும் பயிற்சியாளராக தொடர்வதை விரும்புகிறது. ஆனால் ராகுல் திராவிட்டுக்கு அதில் விருப்பமில்லை. பயிற்சியாளராக இருந்தால் நிறைய சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அதிலிருந்து விலகி இருக்கவே அவர் விரும்புகிறார். இந்த முடிவை பிசிசிஐயிடமும் அவர் தெரிவித்த்தாக கூறப்படுகிறது.
பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் திராவிட்டுக்கு அடுத்த நபராக விவிஎஸ் லக்ஷ்மணின் பெயர் பிசிசிஐயின் லிஸ்டில் இருக்கிறது. லக்ஷ்மண் இப்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் பொறுப்பாளராக இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் ராகுல் திராவிட் இல்லாத போட்டிகளில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பொறுப்பாளர் பதவையை விட்டு இந்திய அணியின் பயிற்சியாளராக வர லக்ஷ்மணுக்கும் விருப்பம் இல்லை.
பயிற்சியாளர் பதவிக்கு தகுதியுள்ள 2 இந்தியர்கள் அதை வேண்டாம் என்று ஒதுக்கிய நிலையில், இப்போது வெளிநாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீர்ர் ஒருவரை பயிற்சியாளராக நியமித்தால் என்ன என்று பிசிசிஐ யோசிக்கிறது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் பிளம்மிங்கிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அவரும் அதற்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஜஸ்டின் லாங்கர், இந்தியாவின் பயிற்சியாளராக விரும்புவதாக வெளிப்படையாக கூறினாலும், அவரை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்பவில்லை.
அவர்கள் மனதில் இப்போதைக்கு இருக்கும் நபர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலிய அணிக்கு பாண்டிங் கேப்டனாக இருந்த காலத்தில், அந்த அணி பல கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் அவரை பயிற்சியாளராக நியமித்தால் இந்திய அணி கோப்பைகளை வெல்லும் என்று பிசிசிஐ எதிர்பார்க்கிறது. மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக அவர் இருப்பதால் இந்திய கிரிக்கெட் சூழ்நிலையை நன்கு அறிந்தவராகவும் அவர் இருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தை நியமித்தால் என்ன என்ற எண்ணம் தேர்வுக் குழுவுக்கு இருக்கிறது. அப்படி நடந்தால் ஏற்கெனவே டெல்லி அணியின் கேப்டனாகவும் பயிற்சியாளராகவும் இருக்கும் ரிஷப் பந்த்துக்கும், ரிக்கி பாண்டிங்கிற்கும் நல்ல புரிதல் இருக்கும் என்று பிசிசிஐ நினைக்கிறது. அதனால் இப்பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ நிர்வாகமே அவரை கேட்டுக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.