இந்தியாவில் 56.4 சதவீத நோய்களுக்கு மக்களின் உணவுப் பழக்கம்தான் காரணம் என்று தடாலடியாக அறிவித்திருக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். இந்த நிலையை சரிசெய்ய இந்தியர்களுக்கு ஏற்ற புதிய டயட் வழிகாட்டு நெறிமுறையையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய டயட் வழிகாட்டு நெறிமுறைகள்படி சாப்பிட்டால், இந்தியர்களுக்கு நோய் தாக்கும் பாதிப்பு குறையும் என்று அந்த அமைப்பு சொல்கிறது. மாறிவரும் கால நிலை, உணவுப் பழக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர்களுக்கான இந்த உணவு வழிகாட்டி முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஒருவர் தினமும் 2 ஆயிரம் கலோரிகள் அளவுக்கு உணவு எடுத்துக்கொள்ளலாம். நாளொன்றுக்கு 400 கிராம் காய்கறிகள், 250 கிராம் தானியங்கள், 100 கிராம் பழங்கள், 85 கிராம் அளவுக்கு முட்டை மற்றும் கறி வகைகள் (சைவம் சாப்பிடுபவராக இருந்தால் அதே அளவுக்கு பருப்பு வகைகள்), 35 கிராம் பாதாம் உள்ளிட்ட நட்ஸ் வகைகள், 27 கிராம் கொழுப்பு மற்றும்ண்ணை வகைகளை கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சி கழகம் வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் ஒருவர் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு இந்த குறிப்பிட்ட அளவை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சொல்கிறது.
தானியங்களை குறையுங்கள்:
இந்தியர்கள் இப்போது 70 சதவீதம் அளவுக்கு தானியங்களை சாப்பிடுவதாக சொல்லும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அதை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. முட்டை, கறி போன்ற உணவுகளின் அளவு, தினசரி நாம் உட்கொள்ளும் உணவுகளின் பங்கில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.
5 கிராம் உப்பு, 25 கிராம் சர்க்கரை போதும்:
உப்பு மற்றும் சர்க்கரையின் அளவில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது மருத்துவ கவுன்சில். குழந்தைகளுக்கு 2 வயது வரை கொஞ்சம்கூட சர்க்கரையை கொடுக்க வேண்டாம் என்று கூறும் இந்த அமைப்பு, குழந்தைகள் அளவுக்கு மீறி இனிப்பு சாப்பிட்டால் பற்களின் நலனுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறது. வயது வந்த நபர்கள்கூட நாளொன்றுக்கு 25 கிராம் சர்க்கரைக்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது என்றும் இந்த அமைப்பு எச்சரிக்கிறது.
அதேபோல் இந்தியர்கள் பொதுவாக 3 முதல் 10 கிராம் வரை பயன்படுத்துவதாக கூறியுள்ள இந்த அமைப்பு உப்பின் பயன்பாட்டையும் குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் பரிந்துரைப்படி நாளொன்றுக்கு 5 கிராமுக்கு மேல் உப்பை பயன்படுத்துவது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.
உணவுப் பொருட்களை சுகாதாரமான கடைகளில் வாங்கவேண்டும், காய்கறிகளை சிறிது நேரம் நீரில் ஊறவைத்த பின் பயன்படுத்த வேண்டும் என்பதுபோன்ற ஆலோசனைகளையும் அந்த அமைப்பு வழங்கியுள்ளது.