No menu items!

ரேபரேலிக்கு மாறிய ராகுல் காந்தி – என்ன காரணம்?

ரேபரேலிக்கு மாறிய ராகுல் காந்தி – என்ன காரணம்?

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் பிரியங்கா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது. இதில் திடீர் திருப்பமாக ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமேதியில் இருந்து ராகுல் காந்தி ஏன் ரேபரேலிக்கு மாறினார்? பிரியங்கா காந்தி ஏன் போட்டியிடவில்லை?

நேரு குடும்ப தொகுதிகளான அமேதியும் ரேபரேலியும்

உத்தரபிரதேசத்தின் அமேதியும் ரேபரேலியும் நேரு குடும்பத்தின் தொகுதிகளாக கருதப்படுகின்றன.

ரேபரேலியில் இருந்துதான் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி 1952, 1957ஆம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ரேபரேலியில் 1967இல் போட்டியிட்ட இந்திரா காந்தி மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 1971ஆம் ஆண்டில் ரேபரேலியில் இந்திராகாந்தி வெற்றி பெற்றார். ஆனால், அவசர நிலைக்கு பிறகு 1977 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 1980 தேர்தலில் இதே ரேபரேலி தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்றார் இந்திரா காந்தி. அதே சமயம் இந்த தேர்தலில் ஆந்திராவின் மேடக் தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

2004 முதல் 2024 வரை கிட்டத்தட்ட 20 வருடங்களாக சோனியா காந்தியே ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். 2 சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளதால், ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லை.

அமேதி தொகுதியைப் பொறுத்தவரைக்கும் 1980இல் இருந்துதான் நேரு குடும்பத்தின் அரசியல் பயணம் தொடங்கியது. சஞ்சய் காந்தி இங்கிருந்துதான் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு பிறகு 1981ஆம் ஆண்டு இதே தொகுதியில் இருந்து மக்களவைக்கு சென்றார் ராஜிவ் காந்தி. அதற்கு பின் அவர் இறக்கும் வரை இதே தொகுதியில் தொடர் வெற்றிகளை பெற்று மக்களவை உறுப்பினராக நீடித்து வந்தார் அவர்.

1991 முதல் 1999 ஆம் ஆண்டு வரை அமேதி தொகுதியில் நேரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் போட்டியிடவில்லை.

சோனியா காந்தி, 1999ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் இருந்துதான் அரசியலுக்கு வந்தார். அதன்பின்னர் 2004 மக்களவைத் தேர்தலில், அமேதியில் ராகுல்காந்தி போட்டியிட, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சோனியா காந்தி.

2004ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அமேதி தொகுதியில் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்று வந்த ராகுல் காந்தியை, 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இராணியிடம் தொகுதியை பறிகொடுத்தார். ஆனாலும், கேரளாவின் வயநாடு தொகுதியில் கிடைத்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

2019ஆம் ஆண்டைத் தவிர, 1977 மற்றும் 1998ஆம் ஆண்டுகளிலும் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு முறையும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமேதியில் இருந்து ராகுல் ஏன் ரேப்ரேலி மாறினார்?

இந்த முறையும் வயநாடு தொகுதியிலும் ராகுல்காந்தி போட்டியிட்டாலும் அமேதி தொகுதியிலும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ராகுல் போட்டியிடுவது இதுவே முதல் முறை.

ரேபரேலி தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக தரப்பில் தினேஷ் பிரதாப் சிங்போட்டியிடுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் இவர் சோனியா காந்தியை எதிர்த்து களமிறங்கிய வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

ராகுல் காந்தி ரேபரேலிக்கு மாறிவிட்டதால், அவர் வழக்கமாக போட்டியிடும் அமேதி தொகுதியில் இந்த முறை கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. அவருக்கு எதிராக பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். கடந்த முறை அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்து ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா போட்டியில்லை, ஏன்?

இந்த முறை உத்தரபிரதேசத்தில் அமேதி அல்லது ரேபரேலி இரண்டில் ஒரு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல் அந்த ஊகங்களை பொய்யாக்கியுள்ளது.

அமேதி தொகுதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிடுவது குறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்தை பகிர்ந்திருந்த பிரியங்கா காந்தி, “எங்களது குடும்பத்திற்கும் கிஷோரி லால் சர்மாவுக்கும் பல ஆண்டுகளாகவே உறவு நீடித்து வருகிறது. அவர் எப்போதும் அமேதி, ரேபரேலி மக்களுக்கு சேவை செய்வதில் முழு மனதுடன் ஈடுபட்டுள்ளார். சமூக சேவையின் மீது அவருக்குள்ள ஆர்வமே அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. காங்கிரஸ் கட்சியால் அமேதி வேட்பாளராக கிஷோரி லால் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கிஷோரி லால் ஜியின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் அவருக்கு இந்தத் தேர்தலில் வெற்றியைத் தேடித்தரும்” என்று கூறியுள்ளார்.

பிரியங்கா குறிப்பிடுவது போல் கிஷோரி லால் சர்மா, நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவராகவே கருதப்படுகிறார். இவர் ராஜீவ் காந்திக்கு மிக நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. பஞ்சாபை சேர்ந்த இவர், 1983ஆம் ஆண்டு காங்கிரஸ் ஊழியராக இந்த தொகுதிக்கு வந்தார்.

ராஜீவ் காந்தி இறப்புக்கு பிறகு, கிஷோரி லால் சர்மா தொடர்ந்து அமேதி தொகுதியில் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக 1990களில் நேரு குடும்பம் இந்த தொகுதியில் இருந்து விலகியிருந்த காலகட்டத்தில் இவர் மிகத் தீவிரமாக பணியாற்றியுள்ளார்.

கிஷோரி லால் சர்மா ரேபரேலி தொகுதியில் சோனியாவின் பிரதிநிதியாகவும் அறியப்படுகிறார். 1999ஆம் ஆண்டு அமேதியில் சோனியா காந்தி போட்டியிட்ட முதல் தேர்தலில் கிஷோரி லால் சர்மா முக்கியமான பாத்திரம் வகித்ததாக கூறப்படுகிறது.

இன்று காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், தன்னைப்போன்ற ஒரு சிறு தொழிலாளிக்கு தங்களுடைய குடும்ப தொகுதியின் பொறுப்பையே வழங்கும் கார்கே, ராகுல், சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு நன்றி என்று கூறியுள்ளார் கிஷோரி லால் சர்மா.

மேலும், ‘இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னால் முடிந்த சிறப்பான பணியை செய்வேன். 1983ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் ஊழியராக இங்கு வந்தேன். ராஜீவ் காந்திதான் என்னை அழைத்து வந்தார். அன்றிலிருந்து இங்குதான் பணியாற்றி வருகிறேன்.

சோனியா ஜியை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட செய்தோம். 1981ஆம் ஆண்டை தவிர மற்ற அனைத்து சூழல்களிலும் ராஜீவ்ஜியோடு இணைந்து பணியாற்றியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, இப்போது ராகுல் காந்தி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டாரா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, “இல்லை, அவர் ஒட்டுமொத்த நாட்டிற்குமான போட்டியில் களம் கண்டுள்ளார்” என்று கிஷோரி லால் சர்மா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...