ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரம் ‘கூலி’ திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தனது இசையில் உருவான ‘வா வா பக்கம் வா’ பாடல் தன்னிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காப்புரிமை தொடர்பான இளையராஜா வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உண்மையில் காப்புரிமை சட்டம் சொல்வது என்ன?
லோகேஷ் கனகராஜ் மீது ராஜா புகார்
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வருகிறது ‘கூலி’ திரைப்படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியானது. இதில் இளையராஜாவின் இசையில் உருவான ‘வா வா பக்கம் வா’ பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டீசரில் தனது முறையான அனுமதி வாங்காமல் தன்னுடைய பாடலான ‘வா வா பக்கம் வா’ பாடலை பயன்படுத்தி இருப்பதாக கூறி இளையராஜா தரப்பிலிருந்து கூலி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸில், ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில் ‘தங்க மகன்’ படத்திற்காக இளையராஜா இசையமைத்த ‘வா வா பக்கம் வா’ பாடலை மறு உருவாக்கம் செய்துள்ளதாகவும். இந்தப் பாடல் மற்றும் இசையின் முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையான எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது காப்புரிமைச் சட்டம் 1957இன் படி குற்றம் என நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூலி திரைப்படத்தின் டீசரில் இடம் பெற்றுள்ள ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டுமென இளையராஜா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது அல்லது டீசரிலிருந்து அந்த இசையை நீக்கி விட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காப்புரிமை சட்டம் என்ன சொல்கிறது?
1957 காப்புரிமை சட்டம் என்பது தனி நபர் ஒருவரின் படைப்பு அல்லது கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மீதான அவரது உரிமையை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதனை பதிப்புரிமைச் சட்டம் என்றும் அழைக்கின்றனர். இந்த சட்டத்தின் படி இலக்கியம், இசை, நாடகம், கலை படைப்புகள், திரைப்படங்கள், இசைப்பதிவுகள் ஆகியவற்றின் மூல படைப்புகள் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது.
அதாவது ஒரு படைப்பை உண்மையாக உருவாக்கியவருக்கு அதன் மீது இருக்கும் உரிமை என்பது பாதுகாக்கப்படுகிறது. எனவே, படைப்பாளியின் அனுமதியை பெறாமல் அவரது படைப்பை யாரும் பயன்படுத்த முடியாது. மீறுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, இழப்பீடு மற்றும் தண்டனை பெற செய்யலாம்.
ஒரு கலை படைப்புகளின் ஆசிரியர், இசையை உருவாக்கிய இசையமைப்பாளர், புகைப்படக்காரர்கள் என்பன உள்ளிட்ட படைப்பாளிகளின் உரிமைகள் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
ஒரு மூலப்படைப்பு உருவாக்கப்பட்ட உடனேயே அதற்கான பதிப்புரிமை வந்து விடுகிறது. இருப்பினும் படைப்புகளை பதிவு செய்து கொள்வதற்கான நடைமுறைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்குகிறது. இது தொடர்பாக பதிப்புரிமை பதிவாளருக்கு உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
பொதுவாக பதிப்புரிமை என்பது 60 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இலக்கியம், நாடகம், இசை மற்றும் கலைபடைப்புகள் ஆகியவற்றுக்கான பதிப்புரிமை அவற்றின் ஆசிரியரின் வாழ்நாள் முழுவதும் மற்றும் அவர் இறந்த பின்பு 60 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
அந்த வகையில் இளையராஜாவின் படைப்புகளுக்கான உரிமை என்பது அவரது வாழ்நாள் முழுவதும் இருக்கிறது. ஒருவேளை இளையராஜாவின் படைப்பை ஆராய்ச்சி, நீதிமன்ற நடைமுறைகள், விமர்சனம், இலவசமாக நடத்தப்படும் தொழில்முறையற்ற நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்த வேண்டும் எனில் அவரது அனுமதி தேவையில்லை. ஆனால், அதனை மறு உருவாக்கம் செய்வது என்பன போன்ற செயல்களில் கண்டிப்பாக அனுமதி பெறுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.