No menu items!

வெப்ப அலையில் தமிழ்நாடு – என்ன காரணம்? எப்படி சமாளிப்பது?

வெப்ப அலையில் தமிழ்நாடு – என்ன காரணம்? எப்படி சமாளிப்பது?


தமிழ்நாட்டில் நாள்தோறும் வெயிலின் தாக்கம் புதுப்புது உச்சத்தை தொட்டு வருகிறது. 15 இடங்களில் நேற்று வெப்பம் 100 டிகிரியை கடந்த நிலையில், உதகையில் புதிய உச்சமாக 85 டிகிரி பாரன்ஹீட்டிற்கு வெப்பம் பதிவாகி உள்ளது. வருடம்தோறும் அதிகரித்துவரும் இந்த வெப்பத்துக்கு காரணம் என்ன? இதை எப்படி சமாளிப்பது?

வெப்ப அலைக்கு என்ன காரணம்?

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என தெற்காசிய நாடுகள் முழுக்கவுமே வெப்ப அலையின் தீவிரத்தன்மை அதிகரித்துதான் வருகிறது. இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதத்தின் சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலை 43°5 C. இது, இயல்பை விட அதிகம். கடந்த 12 ஆண்டுகளுக்கு டெல்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.

இதன் தாக்கம்தான் தமிழ்நாட்டிலும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் ஏறுமுகமாக உள்ளது. எப்போதும் குளுகுளுவென இருக்கும் உதகையிலும், இப்போது சூரியனின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. உதகையில் புதிய உச்சமாக நேற்று முன்தினம் 85 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே1 முதல் மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இப்படி வெப்ப அலை வீசும் சூழல் கணிசமாக அதிகரித்திருப்பதற்கு காலநிலை மாற்றமே காரணம் என ‘வாவ் தமிழா’ யூடியூப் சேனலுக்கு பேசிய, அண்ணா பல்கலைக்கழகம் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடம் மேலாண்மை துறை பேராசிரியர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

வெப்ப அலை என்றால் என்ன?  

சமவெளிப் பகுதியில், குறைந்தது இரு நாட்களுக்கு  40°C அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 30°C அல்லது அதற்கு மேலாகவும், கடலோர பகுதிகளில் 37°C அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும் போது வெப்பஅலை நிகழ்வு ஏற்பட்டதாக கருதப்படும். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 8 வெப்ப  அலைகள் ஏற்பட்டுள்ளன.

வெப்ப அலைகள் பொதுவாக காற்றில் சிக்கிக்கொண்ட வெப்பத்தின் (Trapped Air) விளைவாகும். காற்றில் உள்ள வெப்பம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போகாமல் ஒரே இடத்தில் தங்கும்போது வெப்ப அலைகள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடைகாலம் நீடிக்கிறது. அப்போது, வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பம் 45- 50°c வரை உயர்கிறது. இந்த காலங்களில் மேற்கத்திய இடையூறுகள் (Western Disturbance) காரணமாக வடமாநிலங்கல் குறுகிய கால மழைப் பொழிவை பெறுவது வழக்கம் (Pre Monsoon Showers). இதனால், வடமேற்கு மற்றும் வடமாநிலங்களில்  வெப்பம் குறைந்து காணப்படும். ஆனால், சமீபத்திய காலங்களில் இந்த மேற்கத்திய இடையூறுகள் வலுவிழந்து காணப்படுகிறது. இந்தாண்டு, மார்ச் மாதம் வடமாநிலங்களில் மிகவும் வறட்சியான வானிலை காணப்பட்டது. வடமாநிலங்களில் நிலவும் இந்த எதிர் -சூறாவளி (Anti- Cyclone) வெப்ப அலையின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது.

பொதுவாக, சூரிய வெப்பம் காரணமாக, கடல் மேற்பரப்பில் உள்ள காற்று சூடாகி விரிவடைந்து மேலே செல்கிறது. மேலே, செல்லும் காற்று நீராவியாக மாறி மழைதரும் முகில்களை உருவாக்கிறது. இந்த நிகழ்வே சூறாவளி (சைக்ளோன் –  சூழல் வடிவத்தில் குவியும் காற்று) என்றழைக்கப்படுகிறது.

மாறாக, எதிர் -சூறாவளியின் போது, வழிபண்டலத்தில் உள்ள காற்று  கீழ்நோக்கி பூமி மேற்பரப்பை அடைகிறது. தாழ்வு காற்றை அழுத்துவதன் மூலம் வெப்பப்படுத்துகிறது. கீழ்நோக்கி வருகின்ற போது, அமுக்கம் (Compression) காரணமாக காற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது. பூமியின் மேற்பரப்பை அடைந்த வெப்பக்காற்று எங்கும் செல்லமுடியாமல் அங்கேயே தங்கி விடுகின்றன.

இந்த உள்ளூர் வானிலைத் தன்மையுடன் சேர்ந்து, பசிபிக் பெருங்கடலின் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் எல்நினோ (ELNino) போன்ற உலகளாவிய வானிலை நிகழ்வு வெப்ப அலையின் தீவிரத்தை அதிகரிக்கின்றன. 

வெப்ப அலை என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

உடலியல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை வெப்ப அலை ஏற்படுத்துகிறது. 1992 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில், வெப்ப அலைக்கு கிட்டத்தட்ட 25000 பேர் பலியானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், குறிப்பாக ஏப்ரல்/மே 2015 வெப்ப அலை இந்தியாவின் பல்வேறு இடங்களில் 2000க்கும் மேலானவர்களை கொன்றது குறிப்பிடத்தக்கது.

சமாளிப்பது எப்படி?

இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் அருணாசலம், ‘கோடைக்காலத்தில் பெரும்பான்மையான நோய்கள் சூரியக் கதிரின் வெப்ப பாதிப்பினால் ஏற்படுகின்றது. சன் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் கடுமையான வெய்யில் காரணத்தால் சிலருக்கு ஏற்படுவதுண்டு. மேலும் உடற்சோர்வு, அதிக வியர்வையால் ஏற்படும் வியர்க்குரு என்று கோடை காலத்தில் நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இவை வராமல் தடுக்க, கடும் கோடைக்காலத்தை சமாளிக்க முதலில் நம் உடலின் தட்பவெட்ப நிலை அதிக மாறுதலுக்கு உள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, உடலில் எப்போதும் போதுமான நீர்ச்சத்து இருக்க வேண்டும். இதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

நம் சருமத்தின்  அடியில் ‘எக்ரைன்’ எனும் வியர்வைச் சுரப்பி இருக்கிறது. இந்த சுரப்பிகள்  தூண்டப்படும்போது உடலில் இருந்து வியர்வை வெளியேறும். நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு  அவை அமிலமாகிறது. சில கிருமிகள் இந்த வியர்வையுடன் சேர்ந்து, தோலின் மேல்புறத்தில் பூஞ்சைக் காளானை (ஃபங்கஸ்) உருவாக்கும்.

வியர்வை சருமத்தை நன்றாகக் கழுவி, ஈரத் துணியில் துடைத்தால் வியர்க்குரு வராது. வியர்வையை சுத்தமாக கழுவவில்லை எனில், உடல் இடுக்குகளில் மடிப்புகளில் காளான் நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்க, கோடை காலத்தில் தினமும் காலை மாலை இருவேளை குளிப்பது அவசியம்.

சுத்தமாக துவைக்கப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டும். வெய்யில் காலத்தில் காட்டன் உடைகள் அணிவது நல்லது. இவை, அதிகப்படியான வியர்வையை உறிஞ்சிவிடும்.

மேலும், வெயிலில் செல்லும்போது தொப்பி, குடை எடுத்துச்செல்வது பாதுகாப்பானது” என்கிறார் டாக்டர் அருணாசலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...