செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்பு திட்டத்தால் துபாயில் பெமழையும் வெள்ளமும் ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு துபாயில் பெருமழை பெய்து வருகிறது. பொதுவாக அதிக அளவில் மழை பெய்யாத துபாயில் ஒரே நாளில் 100 மில்லிமிட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதால், துபாயின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குழந்தைகள் உட்பட 18 பேர் இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமான சேவை முடங்கியுள்ளது. 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து மற்றும் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதைய பெருமழைக்கு ஐக்கியஅரபு அமீரகம் செயற்கை மழைக்காக மேக விதைப்பு காரணமாக இருக்கக்கூடும் என்ற சில தரப்புகள் கூறிவருகின்றன. இது செயற்கையாக தூண்டப்பட்ட மழை அல்ல என்றும் காலநிலை மாற்றத்தின் நீட்சியாக கனமழை பெய்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அந்நாடுகள் தங்கள் குடிநீர்த் தேவைக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்ட்த்தையே பெருமளவில் நம்பியுள்ளன.
குடிநீர் தேவைகளுக்கு பெருமளவில் கடல் நீரை நம்பி இருந்தாலும், நிலத்தடி நீரைத் தக்க வைக்க, இந்நாடுகள் அடிக்கடி ‘கிளவுட் சீடிங்’ (மேக விதைப்பு) முறைப்படி செயற்கை மழையைக் கொண்டுவருகின்றன. இந்த திட்டத்தின்படி, குறிப்பிட்ட ரசாயனப் பொருட்களை மேகத்தில் தூவுவதன் வாயிலாக மழையைப் பெறுகின்றன.
இந்த திட்டத்தின்படி ஐக்கிய அரபு எமரைட், சில தினங்களுக்கு முன் செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த செயற்கை மழைக்காக 7 விமானங்கள் மூலம் ரசாயனங்கள் தெளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரக அரசின் இந்த முயற்சிக்குப் பிறகு, கடந்த 16-ம் தேதி அப்பகுதியில் பெரும் புயல் வீசியது. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்டவற்றில் பெரும் மழை பெய்தது. ஆனால், யு.ஏ.இ.,யில் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 9.47 செ.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் மட்டும் 14.2 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. குறிப்பாக துபாய் விமான நிலையத்தை ஒட்டிய பகுதியில் அதிகனமழை பெய்தது.
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதாவதுதான் மழை பெய்யும் என்பதால், மழைநீரை வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகள் அதிகமாக இல்லை. இதனால் சாலைகளில் மழைநீர் அதிகமாக தேங்கியது. விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.