ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல், எல்லோரும் தேர்தலில் நின்று ஜெயிக்கலாம் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம். ஆனால் இப்போது அந்த அடிப்படையே ஆட்டம் கண்டு வருகிறது. ஒருவர் தேர்தலில் நிற்பதற்கு பணம் மிக அத்தியாவசிய தேவை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு உதாரணமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சொல்லலாம். இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக ஆகியவை நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்று association of democratic reforms (ADR) என்ற அமைப்பு நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் 945 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.
இந்த 3 கட்சிகளில் அதிமுக பணக்காரர்களுக்கும் காண்டிராக்டர்களுக்கும்தான் சீட் என்பதில் கொஞ்சம் வெளிப்படையாகவே இருந்திருக்கிறது. பொதுவாக தேர்தல் செலவுக்காக கட்சி கொடுக்கும் பனத்தை சில வேட்பாளர்கள் செலவழிக்காமல் பதுக்குவதால் இம்முறை சொந்த பணத்தை செலவழிப்பவர்களுக்கே சீட் என்று அக்கட்சி தலைமை முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
அதன்படி அதிமுகவின் சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 34 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்கள் 1 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளைக் கொண்டிருப்பவர்களாக உள்ளனர். அக்கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 37.53 கோடியாக உள்ளது.
திமுகவின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் இந்த தேர்தலில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 21 பேர் 1 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்திருக்கிறார்கள். திமுக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 31.22 கோடி ரூபாயாக இருக்கிறது.
திராவிட கட்சிகள்தான் இப்படி என்று தேசிய கட்சியான பாஜகவைப் பார்த்தால், அங்கு நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. பாஜகவின் தாமரை சின்னத்தில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் ஒருவர் மட்டுமே 1 கோடிக்கும் குறைவான சொத்துகளை வைத்துள்ளார். திராவிட கட்சிகளை விட பாஜக வேட்பாளர்களின் சொத்து மதிப்பும் அதிகமாக இருக்கிறது. அவர்களின் சராசரி சொத்து மதிப்பு 38.93 கோடி ரூபாய்.
மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 24.18 கோடி ரூபாய். அரசியல் கட்சிகளில் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டுமே குறைந்த அளவிலான கோடீஸ்வர்ர்களை களத்தில் நிறுத்தியுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்களில் 38 சதவீதம் பேர் மட்டுமே 1 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்துள்ளனர். ஆக பெரும்பாலான அரச்சியல் கட்சிகள் தேர்தலில் பணத்தை செலவு செய்யக்கூடிய வேட்பாளர்களை மட்டுமே நிறுத்துவது என்ற கொள்கையில் ஒற்றுமையாக இருந்துள்ளனர்.
அரசியல் கட்சிகளின் நிலைதான் இப்படியென்றால், சுயேச்சை வேட்பாளர்களும் பணக்கார்ர்களாகத்தான் இருக்கிறார்கள். மொத்தமுள்ள 606 சுயேச்சை வேட்பாளர்களில் 62 பேர் கோடீஸ்வரர்கள். இதில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பாலமுருகன் என்ற வேட்பாளர்தான் பணக்கார சுயேச்சை வேட்பாளர். இவரது சொத்து மதிப்பு 13.15 கோடி ரூபாய். இந்த சுயேச்சை வேட்பாளர்களில் மிக்க் குறைவாக 10 பேர் மட்டுமே 1,000 ரூபாய்க்கு கீழ் சொத்து வைத்திருப்பவர்கள்.