No menu items!

டிடிவியா? தங்கத் தமிழ்ச்செல்வனா? – குரு vs சிஷ்யன் – தேனி தொகுதி யுத்தம்

டிடிவியா? தங்கத் தமிழ்ச்செல்வனா? – குரு vs சிஷ்யன் – தேனி தொகுதி யுத்தம்

பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது தேனி. அவருக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் நிற்பதால் குரு சிஷ்யனுக்கு இடையிலான போட்டிக் களமாக தேனி மாறியிருக்கிறது.

தேனி மக்களவை தொகுதி கம்பம், போடிநாயகனூர், பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த தொகுதியில் முக்குலத்தோர் சுமார் 27 சதவீதமும், ஆதிதிராவிடர்கள் 20 சதவீதமும், கவுண்டர் 8 சதவீதமும், நாயுடு 8 சதவீதமும், பிள்ளைமார் 7 சதவீதமும், செட்டியார் 6 சதவீதமும், நாடார் 4 சதவீதமும், முஸ்லிம் 4 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 2 சதவீதமும், இதர சமுதாயத்தினர் சுமார் 14 சதவீதமும் உள்ளனர்.

தொகுதியின் முக்கிய பிரச்சினைகள்:

விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட இத்தொகுதி மக்களுக்கு முல்லைப் பெரியாறு பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. தீர்ப்பு வந்து 10 ஆண்டுகள் முழுமைபெறவுள்ள நிலையில் இன்னும் பேபி அணையை பலப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆண்டிப்பட்டி பகுதிகளில் வறட்சியை போக்குவதற்கு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலேயே மாவூற்றுவேலப்பர் கோவில் அருகில் திப்பரேவு அணை கட்டுவதற்கும், மூலவைகையில் அணை கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டது. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மக்களின் கனவு திட்டமான இந்த அணைகள் கட்டும் திட்டம் இன்றளவிலும் கைகூடவில்லை..

தொகுதியின் வரலாறு:

இத்தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கலின் எண்ணிக்கை 16,12,503. கடந்த 1980-ம் ஆண்டுமுதல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக 8 முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முரையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றபோதும் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அதனாலேயே அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாக தேனி தொகுதி பார்க்கப்படுகிறது.

தேனி நாடாளுமன்ற திகுதியில் இந்த தேர்தலில் திமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும், அதிமுக சார்பில் நாராயணயசாமியும், பாஜக. கூட்டணியில் அமமுக வேட்பாளராக டிடிவி. தினகரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் மதனும் களத்தில் உள்ளனர். சுயேச்சைகள் உட்பட 25 பேர் போட்டியிடுகின்றனர்.

குரு சிஷ்யன் யுத்தம்

டிடிவி தினகரன், கடந்த 1999-ல் பெரியகுளம் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு அடுத்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் தினகரன் எம்பியாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு நெருக்கமான சிஷ்யனாக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். தினகரன் அமமுகவை தொடங்கியபோது அவருடன் இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அதன் பிறகு அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். இப்போது தினகரனுக்கு எதிராக திமுக வேட்பாளராக அவர் தேனியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

பழைய நம்பிக்கையில் தினகரன்:

தேனி தொகுதியில் எம்பியாக இருந்தபோது ஊர் மக்களுடன் ஏற்பட்ட பரிச்சயம் இந்த தேர்தலில் தனக்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் தினகரன் பிரச்சாரம் செய்து வருகிறார். அத்துடன் மோடி அலையும் தனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறார்.

“கடந்த 15 ஆண்டுகளாக வனவாசம் சென்றது போல நான் தேனி மாவட்டத்தை விட்டு சென்றாலும் மீண்டும் உங்களை நோக்கி வந்திருக்கிறேன். இந்த முறை எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று கூறி மக்களிடையே இவர் பிரச்சாரம் செய்து வருகிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்களும், முக்குலத்தோர் பிரிவினரும் தனது வெற்றிக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். முன்பு எம்பியாக இருந்தபோது அடிக்கடி தொகுதிக்கு வந்தவர் என்ற நற்பெயர் தேனி மக்களிடையே தினகரனுக்கு இருக்கிறது. பல இடங்களில் உள்லூர் பிரமுகர்களை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு அவர்களுடன் தினகரன் நெருக்கமாக இருக்கிறார். இது வாக்குகளாக மாறினால் தினகரன் கரை சேரலாம்.

விடாமல் போராடும் தங்க தமிழ்ச்செல்வன்:

திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 2009-ல் அதிமுக, 2019-ல் அமமுக என இருமுறை களம் கண்டு தோல்வியை சந்தித்துள்ளார். ஆனாலும் தங்க தமிழ்செல்வனுக்கு தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளது. திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்திருப்பதும், மகளிர் உரிமைத் தொகையாக அரசு வழங்கிவரும் 1,000 ரூபாயும் தனக்கு வாக்குகளை பெற்றுத் தரும் என்று அவர் நம்புகிறார். அவருக்கு ஆதரவாக திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் பம்பரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

மூன்றாவது இடத்தில் அதிமுக:

திமுக – அமமுக இடையிலான மோதலில் இத்தொகுதியில் அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமிக்கு ஆதரவாக தொகுதி முழுக்க எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டாலும் இன்னும் கட்சிக்குள் முழு எழுச்சி ஏற்படவில்லை.

இப்போதைக்கு குக்கரின் விசில் சத்தம் தொகுதியில் அதிகமாக கேட்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...