No menu items!

ஆர்.எம்.வீரப்பன் – காற்றில் கரைந்த எம்ஜிஆரின் நிழல்

ஆர்.எம்.வீரப்பன் – காற்றில் கரைந்த எம்ஜிஆரின் நிழல்

தமிழக முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் உடலநலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன். ஒரு சாதாரண குடும்பத்தில் ஏழு குழந்தைகளில் கடைசியாக பிறந்த ஆர்.எம்.வீரப்பன், சிறுவயதிலேயே நாடகம் மற்றும் நடிப்பில் ஈர்க்கப்பட்டார். தந்தையின் மறைவுக்கு பிறகு குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையால் 9-ம் வகுப்பு வரையே இவரால் படிக்க முடிந்தது. அதன்பிறகு தனது மைத்துனர் கடைக்கு வேலைக்கு அனுப்பப்பட்டார்.

அண்ணா, பெரியாரின் உதவியாளர்

திராவிடர் கழகத்தில் பற்று கொண்டிருந்த ஆர்.எம்.வீரப்பன், ஒரு கட்டத்தில் அறிஞர் அண்ணாவுக்கு உதவியாளராக இருந்தார். அப்போது ஈரோட்டில் தன்னுடன் இருந்து பணியாற்ற நேர்மையான ஒரு உதவியாளர் பெரியாருக்கு தேவைப்பட்டார். இதைக் கேள்விப்பட்ட அறிஞர் அண்ணா, தனது உதவியாளரான ஆர்.எம்.வீரப்பனை பெரியாரிடம் உதவியாளராக பணியாற்ற அனுப்பினார். அந்த அளவுக்கு அவர் அண்ணாவுக்கு நம்பிக்கையானவராக இருந்தார்.

எம்ஜிஆரின் நிழல்:

1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆரை ஆர்.எம்.வீரப்பன் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு இருவருக்கும் இடையே ஆழமான நட்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்ற ஆர்.எம்.வீரப்பன்,  எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தார். பின்னர் சத்யா மூவிஸ் நிறுவனத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆரை வைத்து பல படங்களை எடுத்தார். எம்ஜிஆர் மட்டுமின்றி ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை வைத்தும் சத்யா மூவிஸ் சார்பில் அவர் பல படங்களை எடுத்துள்ளார். 

அதிமுகவின் முக்கிய தலைவர்:

திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டபோது, அவரது ரசிகர்களை ஒன்றிணைப்பதில் ஆர்.எம்.வீரப்பனின் பங்கு மிகபெ பெரியது. அதிமுக உருவாக முக்கிய காரணமாக கருதப்படும் தலைவர்களில்   ஆர்.எம்.வீரப்பனும் ஒருவர். தனது நிழலாகவும், மனசாட்சியாகவும் ஆர்.எம்.வீரப்பனை எம்ஜிஆர் கருதினார். , 1977-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு முதல் முறையாக தேர்வானார். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சசராகவும் இருந்தார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அவரது மனைவி ஜானகி தமிழக முதல்வர் ஆனதில் ஆர்.எம்.வீரப்பனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக மீண்டும் ஒன்றாக, ஆர்.எம்.வீரப்பனும் ஜெயல்லிதா தலைமையை ஏற்றார். அவரது தலைமையில் அமைச்சராகவும் பணியாற்றினார். ஆனால் ரஜினியை வைத்து பாட்சா படம் எடுத்தபோது ஏற்பட்ட பிரச்சினையால், அதிமுகவில் இருந்து வெளியேறிய ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவரது கட்சி திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்.எம். வீரப்பன் தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக வயது மூப்பின் காரணமாக ஆர்.வீரப்பனின் உடல் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று மதியம் அவர் காலமானார்.

மறைந்த ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 அடக்கம் செய்யும் இடத்தை தேர்ந்தெடுத்தார்

ஆர்.எம்.வீரப்பன் புதுக்கோட்டை – அறந்தாங்கி பிரதான சாலையில் வல்லத்திரா கோட்டை கிராமத்தில் தனது தாயார் தெய்வானை அம்மாளின் அஸ்தியை வைத்து ஒரு நினைவு மண்டபம் எழுப்பியுள்ளார். ஒரு ஏக்கர் அளவு கொண்ட அந்த பகுதிக்கு அன்னை தெய்வானை அம்மாள் நினைவு மண்டப வளாகம் என்று பெயரிட்டார். அங்கே ‘இராம.வீரப்பன் அறிவகம்’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர். நூலகம் ஒன்றையும் அவர் அமைத்துள்ளார். 

’’என் தாயாரின் நினைவிடத்திற்கு அருகிலேயே என் நினைவிடமும் அமைய வேண்டும் என்ற விருப்பத்தில் அதற்கான இடத்தை ஒதுக்கி, என் குடும்பத்தாரிடமும் என் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறேன்’’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.எம்.வீரப்பன் சொல்லி இருக்கிறார். அவர் விருப்பப்படி அந்த இட்த்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...