No menu items!

தமிழிசையா? தமிழச்சியா? – தென் சென்னை யார் பக்கம்?

தமிழிசையா? தமிழச்சியா? – தென் சென்னை யார் பக்கம்?

சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக பரபரப்பாக இருப்பது தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிதான். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தனது பதவியை ராஜினாமா செய்து தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் இப்போதைய எம்பியான தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக சார்பில் ஜெயவர்த்தனும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

தொகுதியின் வரலாறு:

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. முன்னாள் மத்திய அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, முன்னாள் முதல்வர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் என பல விஐபிக்கள் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை ருசித்திருக்கிறார்கள்.

இத்தொகுதியில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

ஒரு பக்கம் பழமைவாய்ந்த கோயில்கள், இன்னொரு பக்கம் ஐடி நிறுவனங்கள் என்று பழமையும், புதுமையும் சங்கமிக்கும் ஒரு தொகுதியாக தென் சென்னை இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிகம் படித்தவர்கள் நிறைய இருக்கும் தொகுதியாகவும் தென் சென்னை பார்க்கப்படுகிறது.

மொத்த வாக்காளர்கள்:

தென்சென்னை தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 20,07,816. இதில் ஆண் வாக்காளர்களின் என்ணிக்கை 9,93,590, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10,13,772. மூன்றாம் பாலினத்தவர் 454.

இத்தொகுதியில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், திமுக சார்பில் ஜெயவர்த்தனனும் களம் கண்டனர். தமிழச்சி தங்கபாண்டியன் 5,64,872 வாக்குகளையும், ஜெயவர்த்தன் 3,02,649 வாக்குகளையும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ரங்கராஜன் 1,35,465 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி 50,222 வாக்குகளையும், அ.ம.மு.க 29,522 வாக்குகளையும் பெற்றன. நோட்டாவுக்கு 16,891 வாக்குகள் கிடைத்தன.

நம்பிக்கையுடன் தமிழச்சி

கடந்த முறை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுக வேட்பாளர் தமிழச்சி, அப்போது 1 லட்சத்துக்கும் மேல் வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி இருப்பதால், எளிதில் வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் களம் இறங்குகிறார். தென் சென்னையில் கடந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவும், பாஜகவும் இப்போது 2 அணிகளாக களத்தில் நிற்பது தனக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார்.

மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை, மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச சவாரி கொடுத்தது போன்ற திமுக அரசின் சாதனைகளை மையப்படுத்தி அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களிடையே அவருக்கு நல்ல ஆதரவு இருப்பதை காண முடிகிறது.

விடாமல் போராடும் ஜெயவர்த்தன்:

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில், ஏற்கெனவே எம்பியாக இருந்த அனுபவம் பெற்றுள்ள ஒரே நபர் ஜெயவர்த்தன்தான். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான இவருக்கு தொகுதியில் பெருவாரியாக இருக்கும் மீனவ சமூக மக்களிடையே நல்ல ஆதரவு இருக்கிறது. அத்துடன் காலம் காலமாக இருக்கும் அதிமுகவின் வாக்குகளும் தனக்கு கைகொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.

மழை வெள்ளக் காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக தென் சென்னை இருந்த்து. அந்த நேரத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் பல இடங்களுக்கு நேரில் சென்று நிவாரண பணிகளை முடுக்கி விடவில்லை என்ற குறை தொகுதி மக்களிடையே இருக்கிறது. அதே நேரத்தில் தென் சென்னை தொகுதியின் எம்பியாக இல்லாத சூழலிலும் பல இடங்களில் ஜெயவர்த்தன் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது தொகுதி மக்களிடையே அவரது இமேஜை சற்று உயர்த்தியுள்ளது. ஆனால் அது வாக்குகளாக மாறுமா என்று தெரியவில்லை.

துரத்தும் தமிழிசை:

தென் சென்னையைப் பொறுத்தவரை பிராமண சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகம் என்பதால் தாங்கள் கொஞ்சம் முயன்றால் வெற்றி பெற்று விடலாம் என்று பாஜக நம்புகிறது. அதனாலேயே மக்களுக்கு நன்கு பரிச்சயமான தலைவரான தமிழிசை சவுந்தரராஜனை அங்கு களத்தில் நிறுத்தியுள்ளது. அவரும் தெலங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து இங்கு வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தமிழிசை ஜெயித்தால் நிச்சயம் மத்திய அமைச்சராவார். தொகுதிக்கு தேவையானவற்றை செய்வார் என்றுகூறி பாஜகவினர் அவருக்காக வாக்கு சேகரித்து வருகிறார்கள். தமிழிசையும் விடா முயற்சியுடன் போராடி வருகிறார். ஆனால் அதிமுக கூட்டணி இல்லாதது பாஜகவை சற்று பலவீனப்படுத்தி உள்ளது.
களத்தில் பல வேட்பாளர்கள் இருந்தாலும் தமிழிசைக்கும், தமிழச்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதில் வெற்றிபெறப் போவது யார் என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...