வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா பெரியதம்பி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு என்ன ஆச்சு என்பது குறித்து அவரது பேரனும் வில்லேஜ் குக்கிங் சேனல் அட்மினுமான சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
தமிழின் டாப் 1 யூ டியூப் சேனல்
கிராமத்து ஸ்டைலில் பலவிதமான உணவுகளை தயாரித்து வீடியோக்களை வெளியிடும் ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ யூடியூபில் மிக பிரபலமானது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, மொத்தமே 40 வீடுகளும் பத்து பதினைந்து தலக்கட்டுகளும் இருக்கும் சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தாத்தா பெரியதம்பி, அவரது பேரன் சுப்பிரமணியன் வேலுச்சாமி மற்றும் 5 இளைஞர்கள் என 7 பேர்தான் ‘வில்லேஜ் குக்கிங் சேனலை’ நடத்தி வருகிறார்கள். இன்டெர்நெட்டே கிடைக்காத இந்த குக்கிராமத்திலிருந்து தங்கள் கடின உழைப்பு, விடா முயற்சியால் யூ-டியூப் சேனலை தொடங்கி, தமிழ்நாட்டின் மண் மணம் மாறாத கிராமத்து உணவுகளைச் சமைத்து பார்வையாளர்களுக்கு விருந்து படைத்து வருகின்றனர்.
‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ தொடங்கப்பட்ட 2 வருடங்களிலேயே, 150க்கும் மேற்பட்ட வீடியோக்கள், 70 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் என உலகத்தையே தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தனர். தொடர்ந்து, ஒரு கோடி சப்ஸ்கிரைப் பெற்ற தென்னிந்தியாவின் முதல் யூ-ட்யூப் சேனல் என்ற பெருமையையும் இந்த சேனல் பெற்றது.
இந்தக் குக்கிங் சேனலின் மூளை எம்.காம், எம்.பில் படித்திருக்கும் சுப்பிரமணியம் வேலுசாமிதான். இந்த சேனலின் கேமராமேனும் இவர்தான். லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்தாலும், எந்த வகையிலும் தங்களை மாற்றிக்கொள்ளாமல் எளிமையாக இருக்கின்றனர் இந்த இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
’வில்லேஜ் குக்கிங் சேனல்’ இளைஞர்களின் பிரபலம் காரணமாகவே, கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தில் இவர்களை நடிக்க வைத்திருப்பார்கள்.
2021 சட்டமன்ற தேர்தலின் போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ குழுவினரோடு கலந்துகொண்டு அவர்கள் சமைத்த காளான் பிரியாணியை சாப்பிட்டு பாராட்டினார். அந்த வீடியோ வைரலானது.
கொரோனா பரவலின்போது நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ குழுவினர் வழங்கினர்.
இப்போது 231 வீடியோக்கள், 2 கோடியே 42 லட்சம் சப்ஸ்கிரைபர்கள், 701 கோடியே 75 லட்சம் பார்வைகளுடன் தமிழின் டாப் 1 யூ டுயூப் சேனலாக இருக்கிறது, ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’.
தாத்தா பெரியதம்பிக்கு என்ன ஆச்சு?
வில்லேஜ் குக்கிங் சேனலில் இளைஞர்களுக்கு மத்தியில் தனியாக தெரிபவர் பெரியதம்பி தாத்தா. ‘இன்னைக்கு ஒருபுடி’ என்ற அவரின் வசனம் மிகவும் பிரபலமானது. இவர் தற்போது உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாத்தா பெரியதம்பிக்கு என்ன ஆச்சு என்பது குறித்து அவரது பேரன் சுப்பிரமணியன் வேலுச்சாமி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ‘தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியதம்பி விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.