No menu items!

ஒதுங்கிய குஷ்பு வேகம் எடுக்கும் அண்ணாமலை – மிஸ்.ரகசியா

ஒதுங்கிய குஷ்பு வேகம் எடுக்கும் அண்ணாமலை – மிஸ்.ரகசியா

“வீட்ல இருந்து ஆபீசுக்கு வர்றதுக்கு உள்ளயே வெயில் கொல்லுது. வேட்பாளர்களும், கட்சித் தொண்டர்களும் எப்படித்தான் இந்த வெயில்ல பிரச்சாரத்துக்கு போறாங்களோ?” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“இந்த வெயிலுக்கு பயந்துதான் குஷ்பு இன்னும் பிரச்சாரத்துக்கு போகாம இருக்காங்களா?”

“அதுக்கு வேற காரணம் சொல்றாங்க. இந்த தேர்தல்ல தன்னை தென் சென்னை தொகுதியிலயோ இல்லை மத்திய சென்னை தொகுதியிலயோ பாஜக தலைமை நிறுத்தும்னு குஷ்பு உறுதியா நம்பி இருந்தார். தனக்காக அண்ணாமலை பேசுவார்னும் அவர் எதிர்பார்த்தார். ஆனா அப்படி ஏதும் நடக்கலை. அவருக்கு பதிலா ராத்திரி 2 மணிக்கு முடிவெடுத்து பாஜகல சேர்ந்த ராதிகாவுக்கு பாஜகல சீட் கொடுத்திருக்காங்க. இதுல குஷ்பு ரொம்பவே அப்செட். தன்னை ஒதுக்கிறாங்கன்ற எண்ணம் அவருகு வந்துருக்கு. அதனாலதான் கட்சிக்காக பிரச்சாரத்துக்கு போகாம இதோ வரேன்… அதோ வரேன்னு அவர் இழுத்துட்டு இருக்கறதா சொல்றாங்க.”

”புதுசா பாஜகவுல சேர்ந்த விஜயதாரணி எப்படி இருக்காங்க?”

”அப்செட்லதான் இருக்காங்க. தேர்தல் முடிஞ்சதும் ராஜ்யசபா சீட் கொடுக்கிறேன் என்று சமாதானப்படுத்தி வைச்சிருக்காங்களாம். ஆனா ராஜ்ய சபா சீட் மேல் விஜயதாரணிக்கு ஆர்வம் இல்லை. ஆனாலும் இப்போதைக்கு வேறு வாய்ப்புகள் அவருக்கு கிடையாது என்பதால் அமைதி காக்கிறார்”

“பிரச்சாரத்துக்கு போவாரா?”

“வேறு வழியில்லைல போய்தானே ஆகணும். போற இடமெல்லாம் அவரை பரிதாபமா பார்க்கிறாங்க. அதுதான் அவருக்குப் பிரச்சினை” என்று சிரித்தாள் ரகசியா.

“பாஜக கூட்டணி பரபரப்பா பிரச்சாரத்துல இறங்கிட்டாங்களே? உற்சாகமா இருக்காங்க போல”

“இல்லை. பாஜக கூட்டணியில் பிரச்சார விஷயத்தில் சில வருத்தங்கள் இருக்கு. தருமபுரி தொகுதியில சௌமியா அன்புமணி போட்டி போடறதால அந்த கட்சியோட மற்ற மாவட்ட நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் தருமபுரிலதான் அதிகமா கவனம் செலுத்தறாங்க. இதனால பாமக போட்டி போடற மத்த 9 தொகுதிகள்ல பிரச்சாரம் மந்தமாத்தான் இருக்கு. பாஜக போட்டி போடற தொகுதிகள்ல பாமகவோட பிரச்சாரத்தைப் பத்தி கேட்கவே வேண்டாம். பாஜக நிர்வாகிகள் பாமக நிர்வாகிகளை பிரச்சாரத்துக்கு கூப்டா, அவங்க நாங்க தருமபுரிக்கு போகவேண்டி இருக்குன்னு சொல்லி தவிர்த்துடுறாங்களாம். அதனால நாம பாமகவோட கூட்டணி சேர்ந்ததே வேஸ்ட்னு பாஜக நிர்வாகிகள் புலம்பிட்டு இருக்காங்க.”

“ஓபிஎஸ், டிடிவிலாம் எப்படி பண்றாங்க?”

“டிடிவி ஃபுல் ஃபோர்ஸ்ல இறங்கிட்டார். அவரோட வேகத்தைப் பார்த்து திமுக தலைமையே யோசிக்கிறதுனு ஒரு பேச்சு இருக்கிறது”

“என்ன யோசிக்குது?”

“தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு பதில் வேறு காண்டிடே போட்டிருக்கலாம்னு. தினகரன் வேகத்துக்கு தங்கம் வேகம் கொடுக்கலனு இப்பவே மேலிடத்துக்கு புகார்கள் போயிருக்கு”

“திமுக கூட்டணியில மீதி எல்லாம் ஓகேவா இருக்கா?”

“அங்கயும் சில முட்டல் மோதல்கள் இருக்கு. துரை வைகோவோட தனிச் சின்னம் பேச்சால அவர் மேல திமுககாரங்க கோபமா இருக்காங்க. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் போட்டி போடற தொகுதிகள்ல திமுகவினர் தீவிரமா பிரச்சாரம் பண்றதை பார்க்க முடியல. இதுபத்தி கேட்டா, உதயசூரியன் சின்னத்தில் நின்னிருந்தா ஈசியா பிரச்சாரம் செஞ்சிருக்கலாம். இப்ப தனிச் சின்னத்துல போட்டி போடறாங்க. இதை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கிறதே கஷ்டமா இருக்குன்னு புலம்பறாங்க. இது ஒரு பக்கம் நடந்தா, இன்னொரு பக்கம் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரத்துக்கு வரலைன்னு உதயநிதிகிட்ட திமுக வேட்பாளர் பஞ்சாயத்துக்கு போயிருக்கார்.”

“அது என்ன பஞ்சாயத்து?”

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக திமுக வரிஞ்சு கட்டிட்டு தேர்தல் பிரச்சாரம் செஞ்சது. ஆனா இப்ப திமுக நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரத்துக்கு கூப்பிட்டப்ப இளங்கோவன் வரலணு சொல்லிட்டாராம். வயசாயிடுச்சு ஊர் ஊரா சுத்த முடியாதுன்னு தவிர்த்த்திருக்கிறார். ஈரோட்டுல போட்டி போடற திமுக வேட்பாளர் பிரகாஷ் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிபாரிசுல சீட் வாங்கினவர். இந்த பிரச்சினையை அவர் உதயநிதி காதுக்கு கொண்டுபோக, அவர் முதல்வர்கிட்ட இதைச் சொன்னதாவும், அவர் காங்கிரஸ் தலைமையை அழைத்து அதிருப்தி தெரிவிச்சதாவும் அறிவாலயத்துல பேசிக்கறாங்க. இளங்கோவன் மட்டுமில்லை, கே.எஸ்.அழகிரி, டாக்டர் செல்லகுமார், சுதர்சன நாச்சியப்பன் திருநாவுக்கரசர்னு பல பேர் இந்த தேர்தல்ல இன்னும் பிரச்சாரத்துக்கு போகாம இருக்காங்க”

”வெயில் காட்டமா இருக்குல…பிரச்சாரத்துக்கு போனா வேர்க்குமே?”

”வெயில் மட்டும் காரணமில்லை. இவங்க எல்லோருக்கும் காங்கிரஸ் மேலிடம் மேல அதிருப்தி இருக்கு. திருநாவுக்கரசர் கடைசி வரைக்கும் பிரச்சாரத்துக்கு போக மாட்டார்னு சொல்றாங்க. தேர்தல் முடிஞ்சதும் பாஜகவுக்கு போய்டுவார்னும் சொல்றாங்க”

“ஈரோடு கணேசமூர்த்தி தற்கொலை விவகாரம் திமுக கூட்டணிக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கா?”

“மதிமுக தேவையில்லாமல் குழப்பம் செய்து தற்கொலை வரைக்கும் கொண்டு போயிடுச்சு. தேவையில்லாமல் நம்ம தலையை உருட்டப் போறாங்கன்னு முதல்வர் கவலைப்பட்டாராம். தன் சார்பா அவர் கனிமொழியை அஞ்சலி செலுத்த ஆனுப்பி வச்சிருக்கார்.”

“வேட்பு மனு பரிசீலனை பத்தி ஏதும் தெரியுமா?”

“செல்வகணபதி வேட்புமனுவை நிறுத்தி வச்சதா தகவல் வந்ததும் முதல்வர் டென்ஷன் ஆகியிருக்கார். .உடனே திமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் விடுதலையை தொடர்பு கொண்டு இதுபத்தி விசாரிக்க சொல்லி இருக்கார். அப்ப செல்வகணபதியே முதல்வருக்கு போன் போட்டு, ‘இதெல்லாம் அதிமுகவோட வேலை. நீங்க பதற்றப்படாம இருங்க. இது அதிமுக்காரங்க பண்ற வேலை. மனுவை எப்படி ஏத்துக்க வைக்கறதுன்னு எனக்குத் தெரியும்’ன்னு சொன்னாராம். பிறகு அவரே வாதாடி இருக்கார். ‘இரண்டு இடங்களில் என் பெயரை நான் சேர்க்கவில்லை யாரோ திட்டமிட்டு சதி செய்து என் பெயரை இன்னொரு இடத்தில் சேர்த்து இருக்கிறார்கள் இந்த விஷயம் கேள்விப்பட்டதும் என் பெயரை நீக்க சொல்லி நான் கடிதம் ஏற்கனவே தந்து விட்டேன்’ன்னு கடித நகலை காண்பித்திருக்கிறார். அதன் பிறகு அவரது வேட்பு மனு ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.”

”இப்ப களத்துல யாரு லீடிங்? யாரு பின்னாடி?”

“இதே கேள்வியை உளவுத் துறை கிட்ட தினமும் முதல்வர் கேட்கிறாராம். உளவுத் துறை மட்டுமில்லாம ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்கள்கிட்டயும் பேசுறாராம். இந்தத் தேர்தலை முதல்வர் சீரியசா எடுத்திருக்கிறார். அதற்கு காரணம் களத்துலருந்து அவருக்கு வரும் தகவல்கள்”

“அப்படி என்ன வருது?”

“பல தொகுதிகள்ல பாஜக இரண்டாமிடம் வந்திடும்னு உளவுத் துறை அறிக்கைகள் சொல்லுது. 2019 தேர்தல் மாதிரி திமுகவால் அத்தனை எளிதாக ஜெயிக்க முடியாது, போராடிதான் வெல்ல வேண்டியிருக்கு என்று சொல்றாங்களாம்”

“என்ன காரணம்?”

“2019ல தீவிர மோடி எதிர்ப்பு இருந்தது. அதிமுகவும் அப்போ பாஜகவுடன் இருந்தது. அதனால எல்லா ஓட்டுக்களும் திமுகவுக்கே வந்தது. இப்போ அந்த அளவு பாஜக எதிர்ப்பு மக்கள்கிட்ட இல்லைனு சொல்றாங்க. திமுக ஜெயிக்கும். ஆனால் ஓட்டு வித்தியாசம் 2019 அளவு இருக்காது. பாஜக இரண்டாவது இடத்தில் வரும் என்பதுதான் இப்போதைய நிலைமை”

“முதல்வர் என்ன சொன்னாராம்?”

“பாஜக நேரடியாக போட்டியிடும் தொகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும், தினசரி ரிப்போர்ட் எனக்கு வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறாராம். குறிப்பாய் அண்ணாமலை வெற்றி பெற்றுவிடக் கூடாது, இரண்டாம் இடத்தில் கூட வந்துவிடக் கூடாது என்று சொல்லியியிருக்கிறார். தீவிர பிரச்சாரத்துக்கு போக வேண்டாம் என்றுதான் முதல்வர் நினைத்தாராம். ஆனால் இப்போது எல்லா இடங்களுக்கும் போக வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறாராம்”

”கடுமையான போட்டியாக இருக்கும்போல. அண்ணாமலை ஜெயிச்சிடுவாரா?”

”கோவைல அண்ணாமலை ஆட்கள் கடுமையா வேலை செய்யறாங்க. அண்ணாமலையும் படு வேகமா பிரச்சாரம் பண்றார். ஆனா லோக்கல் பாஜகவினர் கோ ஆப்பரேஷன் அவ்வளவு இல்லைனு சொல்றாங்க. கட்சியினரிடன் அண்ணாமலை அத்தனை சுமூகமா நடந்துக்கிறது இல்லைன்ற வருத்தம் லோக்கல் பாஜகவினரிடம் இருக்கு. அது மட்டுமில்லாம அவர் பிரஸ்மீட்ல பேசுறது எல்லாம் ட்ரோல் கண்டெண்ட்டா மாறுது அதனால அவர் அதிகம் பேசாம இருந்தா நல்லதுன்ற கருத்தும் இருக்கு”

“அவரால பேசாம இருக்க முடியுமா?”

”பாஜக ஜெயிக்கறதைவிட பெரிய கஷ்டம் இதுதானே” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...