தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே நம்பர் ஒன் பணக்காரராக பெயர் எடுத்திருக்கிறார் ஆற்றல் அசோக்குமார். ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் இவரது சொத்து மதிப்பு ரூ.583 கோடி.
ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது தனது சொத்துக் கணக்கை தாக்கல் செய்துள்ளார் ஆற்றல் அசோக்குமார். அதில் தனது கையிருப்பாக ரூ.10 லட்சமும், மனைவி கருணாம்பிகாவின் கையிருப்பாக ரூ.5 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதைத்தவிர அசோக்குமாரின் வங்கிக் கணக்குகளில் 6,99,59,500 ரூபாயும், மனைவி கருணாம்பிகாவின் வங்கிக் கணக்குகளில் 3,83,78,000 ரூபாயும் இருப்பு உள்ளதாக சொத்துக் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றல் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவின்படி, அவருக்கு ரூ.526,53,09,500 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.56,95,00,000 மதிப்பிலான அசையா சொத்தும் என, மொத்தமாக ரூ.583,48,09,500 மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி கருணாம்பிகா பெயரில் ரூ.47,38,78,000 மதிப்பிலான அசையா சொத்தும், ரூ.22,60,00,000 மதிப்பிலான அசையா சொத்தும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அசோக்குமாரின் சொத்துக் கணக்கு வெளியான நிலையில் அவர் யார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவல் வாக்காளர்களிடையே அதிகரித்துள்ளது.
தமிழ் ஆசிரியரின் மகன்:
ஆற்றல் அசோக்குமாரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமம் ஆகும். அசோக்குமாரின் தந்தை கணித பேராசிரியர் ஆவார். அவரது தாய் தமிழ் பேராசிரியர். ஆற்றல் அசோக்குமார் சொந்த ஊரிலேயே அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.
1992 முதல் 2005 வரை மைக்ரோசாப்ட், இன்டெல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். பின்னர் சொந்த ஊரில் பல நிறுவன்ங்களை இவர் நடத்தி வருகிறார்.
10 ரூபாய்க்கு உணவு
மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகனான இவர், உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பல கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். ஆற்றல் அறக்கட்டளை மூலம் 10 ரூபாய்க்கு உணவு, 10 ரூபாய் மருத்துவம் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.
4 மாதங்களுக்கு முன் கட்சி மாறியவர்:
2021-ம் ஆண்டு முதல் ஆற்றல் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்திவரும் அசோக்குமார், பாஜகவில் இருந்துள்ளார். பின் அக்கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்புகளால் அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தலில் அதிக அளவில் செலவு செய்யும் வேட்பாளர்களை கலத்தில் நிறுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுக்க, தனது பணபலத்தைக் காட்டி ஆற்றல் அசோக்குமார் சீட் பெற்றதாக கூறப்படுகிறது.
பணபலத்தால் சீட் பெற்றபோதும் 4 மாதங்களுக்கு முன் கட்சியில் இணைந்த அசோக்குமாருக்கு சீட் வழங்கப்பட்டதால் உள்ளூர் அதிமுக பிரபலங்கள் பலரும் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.