No menu items!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது – ஊழல் ஒழிப்பா? எதிரி ஒழிப்பா?

அரவிந்த் கெஜ்ரிவால் கைது – ஊழல் ஒழிப்பா? எதிரி ஒழிப்பா?

‘எழுபத்தைந்து ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இப்படி எல்லாம் கூட நடக்குமா?’ இப்படியொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் பலர். அந்த அளவுக்கு, பதவியில் இருக்கும் மாநில முதல்வர் ஒருவரைக் கைது செய்யும் புது டிரெண்ட் தற்போது தொடங்கியுள்ளது.

ஜனவரி 2024ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரன், சட்டத்துக்குப் புறம்பான பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்குப் பின், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதற்கு 2 மாதங்கள் கழித்து இப்போது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி இருக்கிறார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் டெல்லி முதல்வர் கைதாகி இருப்பது இந்திய அளவில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. தவிர, பதவியில் இருக்கும் மாநில முதல்வர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் சரி, ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் சரி, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள். ஆகவே, இந்த கைதுகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற கூக்குரல் மேலோங்கி உள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிப்படையில் மதுவுக்கு எதிரானவர். அவர், டெல்லியில், 2021-2022ஆம் ஆண்டுக்கான கலால் மதுபான கொள்கையை வகுத்தபோது பலரும் வியப்பில் புருவத்தைத் தூக்கினார்கள். இந்த கலால் மதுபான கொள்கையில் தனியார் மதுபான வணிகர்களுக்கு உரிமம் வழங்கியதில் 100 கோடி வரை முறைகேடு நடந்து, லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு குதித்தது.

கோவா சட்டமன்றத் தேர்தலின்போது ஆம்ஆத்மி கட்சி 45 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்ததாகவும், அந்தப் பணம் இந்த முறைகேடு மூலம் வந்த குற்றப்பணம் என்ற குற்றச்சாட்டும் ஒருபக்கம் இருக்கிறது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் பரிந்துரையின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்கீழ், மத்திய புலனாய்வுத்துறை விசாரணை தொடங்கியது.

தையடுத்து இந்த கலால் மதுபான கொள்கை கைவிடப்பட்டது. அதன்பின், அமலாக்கத்துறையின் முறை. இந்த பல கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை தனி வழக்குப் பதிவு செய்தது.

அந்த வழக்கில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம்தேதி கைது செய்யப்பட்டார். அவர் கைதாகி தற்போது ஓராண்டு நிறைவடைந்து விட்டது. அவரைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மேலவை உறுப்பினர் சஞ்சய்சிங், உள்பட சிலர் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ளனர்.

இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை தயாரித்த குற்றப்பத்திரிக்கையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் பல இடங்களில் இடம்பெற்று இருந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்வருக்கு அமலாக்கத்துறை 9 முறை அழைப்பாணை அனுப்பியது. ‘சட்டத்துக்குப் புறம்பானவை’ என்றுகூறி, இந்த 9 சம்மன்களையும் கெஜ்ரிவால் மதிக்கவே இல்லை.

தன்மீது கைது நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால், மனு நிராகரிக்கப்பட்டது. விளைவு? 21ஆம்தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி ஃபிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள கெஜ்ரிவாலின் இல்லத்துக்குச் சென்றார்கள். 2 மணிநேரம் நடந்த விசாரணைக்குப் பின் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட அவரை, மார்ச் 28ஆம் தேதி வரை 7 நாள்கள் அமலாக்கத்துறையின் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், இந்தியா கூட்டணியின் முதன்மை தலைவர்களில் ஒருவரான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி, திமுக போன்ற கட்சிகள் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன.

‘மார்ச் 25ல் ஹோலி பண்டிகையைப் புறக்கணிக்கப் போகிறோம். மார்ச் 26ஆம்தேதி பிரதமர் மோடியின் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம்’ என்று அறிவித்திருக்கிறார் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான கோபால் ராய்.

கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு இந்திய அளவில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. ‘மிரட்சியில் இருக்கும் சர்வாதிகாரி செத்துப்போன ஜனநாயகத்தை உருவாக்கப் பார்க்கிறார்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டிக்க, ‘தேர்தல் தோல்விப் பயத்தால் பிரதமர் மோடி இப்படி நடந்து கொள்கிறார், மக்கள் புரட்சி வெடிக்கும்’ என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கொதித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சரான அதிஷி சிங், ‘இந்த நாள் இந்திய வரலாற்றில் ஓர் இருண்ட நாள்’ என்று வர்ணித்திருக்கிறார்.

‘கெஜ்ரிவாலை கைது செய்யலாம். அவரது கொள்கையை கைது செய்ய முடியுமா?’ இது டெல்லி மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் எழுப்பியுள்ள கேள்வி.

‘தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேல்தல் ஆணையம் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி கோரிக்கை எழுப்பியுள்ளார்.

இதற்கு நேர் எதிராக, கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை ஆதரித்தும் குரல்களும் எழுந்துள்ளன. ‘கெஜ்ரிவால் உடனே பதவி விலக வேண்டும். அவர் இருக்க வேண்டிய சரியான இடம் திகார் சிறைதான்’ என்றிருக்கிறார் பாரதிய ஜனதாவின் ஜெய்வீர் ஷெர்கில்.

‘ஒன்பது முறை சம்மன் வந்தும் அதை உதாசீனம் செய்தவர் கெஜ்ரிவால். அவர் என்ன சட்டத்தை விட பெரியவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா?’ என்று சீறிப் பாய்ந்திருக்கிறார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

‘மதுபானத்துக்கு எதிரானவர் கெஜ்ரிவால். அவர் ஏன் மதுபான கொள்கையை வகுத்தார்? அவரது செயலே அவருக்கு வினையாகி விட்டது’ என்றிருக்கிறார் ஊழல்களுக்கு எதிராக ஒருகாலத்தில் அடிக்கடி போர்க்கொடி தூக்கிவந்த அன்னா ஹசாரே.

‘கெஜ்ரிவாலின் கைது பற்றி டெல்லி மக்கள் யாரும் கவலைப்படவில்லை. அதுபற்றி யாரும் பேசக்கூட தயாராக இல்லை’ என்கிறார் பாரதிய ஜனதா எம்.பி.க்களில் ஒருவரான மனோஜ் திவாரி.

‘கெஜ்ரிவாலிக் கைதைத் தொடர்ந்து அவரது குடும்பம் கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது’
என்ற குற்றச்சாட்டும் ஒருபக்கம் எழுந்துள்ளது.

சரி. முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்பட முடியுமா? இந்திய மக்கள் பலரது மனங்களில் இப்போது எழுந்துள்ள புதிய கேள்வி இது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி குடியரசுத்தலைவர், ஆளுநர்களை அவர்களது பதவி காலம் முடியும் வரை சிவில் அல்லது கிரிமினல் வழக்கில் கைது செய்ய முடியாது. அதேவேளையில் பிரதமர், முதல்வர்கள் போன்றோர் சட்டத்தின் முன் சமமானவர்கள்தான்.

சரி. கெஜ்ரிவால் கைதாகி விட்ட நிலையில், அவர் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க முடியுமா?

கெஜ்ரிவாலின் கைதைத் தொடர்ந்து, “கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் அவர் முதல்வராக நீடிப்பார். ஆட்சியை அவரால் வழி நடத்த முடியும்’ என்று ஆம்ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி சிங் கூறியிருக்கிறார்.

இதுபற்றி கருத்து கூறியுள்ள அரசியல் நிபுணர்கள், ‘வெறும் கைது மட்டுமே முதல்வர் ஒருவரை அந்த பதவிக்குத் தகுதியற்றவர் ஆக்கிவிடாது. கைதுக்குப் பிறகும் முதல்வர் ஒருவர் ஆட்சி நடத்த வெளிப்படையான தடை எதுவும் இல்லை. குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் ஆட்சியைத் தொடரலாம். முதல்வர் ஒருவர் கைது செய்யப்படும் நிலையில் அவரது பதவியை தானாக ரத்து செய்யும் சட்டம் எதுவும் இல்லை’ என்கிறார்கள்.

ஆனால், முதல்வர் ஒருவர் கைதாகி சிறையில் இருக்கும்போது, சிறையில் அவர் அமைச்சரவை, அதிகாரிகள் கூட்டத்தை நடத்துவது சாத்தியம் இல்லை. சிறையில் இருந்தபடி அதிகாரிகளுடன் அவரால் பேசவும் முடியாது. ஆகவே, யதார்த்தத்தில் அவர் முதல்வராக நீடிப்பது முடியாத ஒன்று.

இதனால்தான் 1997ல் பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறைக்குப்போக நேர்ந்தபோது, முதல்வர் பதவியை மனைவி ராப்ரிதேவியிடம் ஒப்படைத்து விட்டுப் போனார்.

2014ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறைக்குப் போக நேர்ந்தபோது தனக்குப் பதிலாக இன்னொருவரை முதல்வராக்கிவிட்டுப் போனார். கடந்த ஜனவரி மாதம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் கூட இப்படித்தான் புதிய முதல்வரை நியமித்து விட்டு சிறைக்குப் போயிருக்கிறார்.

அதன்படி டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலின் காவல் தொடர்ந்து நீடித்தால், புதிய முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அந்த புதிய முதல்வர் ஒருவளை, டெல்லி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் அல்லது அமைச்சர் அதிஷி சிங் அல்லது கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலாகக் கூட இருக்கலாம்.

சரி. அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்குப்பிறகு டெல்லியில் அடுத்து என்னென்ன நடக்கலாம்? டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது.

எழுபது தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில், 2015ஆம் ஆண்டு 67 தொகுதிகளையும், 2020ஆம் ஆண்டு 62 தொகுதிகளையும் வென்று கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாரதிய ஜனதா வென்று தனதாக்கியது. கெஜ்ரிவாலின் கைது, இந்தியா கூட்டணியின் நடப்பு மக்களவைத் தேர்தல் வெற்றியில் சற்று பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவில், அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை போன்றவற்றை எதிர்க்கட்சிகளின் மீது ஏவி விடுவது ஒன்றும் புதிது அல்ல. ஆனால், 2014ல், நரேந்திர மோடி பிரதமரான பிறகு, சி.பி.ஐ. அமைப்பு எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடப்படும் சம்பவங்கள் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளன., எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை ஏவிவிட்ட சம்பவங்கள் 54 சதவிகிதமாக உயர்ந்துள்ளன.

ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான கெஜ்ரிவால் மீது தற்போது எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள், இருபக்கமும் கூரான கத்தியைப் போன்றவை. அது ஆம் ஆத்மி கட்சியின் மீது வெறுப்பை ஏற்படுத்தி, நடப்பு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாகலாம். அல்லது ஆம்ஆத்மிக்கு டெல்லி மக்களிடம் அனுதாப அலையையும் அது ஏற்படுத்தலாம். இரண்டில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது.

அதேவேளையில், பாரதிய ஜனதா கட்சி, ஆம் ஆத்மி ஆகிய 2 கட்சிகள் மீதும் டெல்லி மக்கள் வெறுப்படைந்து, ‘கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் வேண்டாம், பிரதமர் மோடியின் பாரதிய ஜனதாவும் வேண்டாம்’ என்று, மீண்டும் காங்கிரஸ் கட்சியின் பக்கம் சாயவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இல்லையா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...