First impression is the best impression என்று சொல்வார்கள். அந்த வகையில் தன் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட். அவர் கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது சிஎஸ்கே.
வெற்றி பெற்றதெல்லாம் சரி… ருதுராஜின் செயல்பாடு இந்த போட்டியில் எப்படி இருந்தது?
டாஸ் போடும்போது வர்ணனையாளர் கேட்கும் கேள்விகளுக்கு சாதுர்யமாக பதில் சொல்வது தோனியின் ஸ்டைல். அதே ஸ்டைலை ருதுராஜிடமும் காண முடிந்தது. ““தோனியின் ஷூவுக்குள் உங்களை எப்படி பொருத்திக் கொள்ள போகிறீர்கள்?’ என்று வர்ணனையாளர் கேட்க, “நான் யாருடைய ஷூவுக்குள்ளும் என்னை பொருத்திக் கொள்வதில்லை. என் ஷூவுடனேயே இருக்கிறேன்” என்று பதில் கூறினார் ருதுராஜ்.
கூடவே இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு தான்தான் கேப்டன் என்பது ஒரு வாரத்துக்கு முன்பே தெரியும் என்றும், தோனி தன்னிடம் அந்த விஷயத்தை முன்பே கூறிவிட்டதாகவும் கூறினார். மேலும் கடந்த ஐபிஎல் தொடரின்போதே இந்த ஆண்டு கேப்டன் பதவியை ஏற்க தயாராக இருக்குமாறு தோனி தன்னிடம் கூறியதாகவும் சொன்னார்.
பேச்சு சரி… நடவடிக்கை எப்படி?
ரஜினிகாந்த் நடித்த ஒரு படத்தில் ‘மாப்பிள்ளை அவருதான். ஆனா சட்டை என்னுது’ என்ற ஒரு வசனம் வரும். சிஎஸ்கே – ஆர்சிபி அணியின் முதல் போட்டியைப் பார்த்தபோது அந்த டயலாக்தான் நினைவுக்கு வந்தது. அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருந்தாலும், பீல்டிங்கின்போது பல முக்கியமான முடிவுகளை தோனிதான் எடுத்தார்.
உதாரணமாக ஒரு கட்டத்தில் தான் எங்கே நிற்கவேண்டும் என்ற குழப்பத்தில் தீக்ஷணா ருதுராஜைப் பார்க்க, இதைக் கவனித்த தோனி அவரை பவுண்டரி லைனுக்கு அருகில் போகச் சொல்கிறார். அவர் சொல்வதைக் கேட்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ருதுராஜை தீக்சணா பார்க்க, தோனி சொன்ன இடத்துக்கே செல்லுமாறு ருதுராஜ் அவருக்கு சைகை செய்கிறார். இதுபோல் பீல்டிங்கின்போது பல இடங்களில் தோனி அவருக்கு கைகொடுப்பதைப் பார்க்க முடிந்தது.
சென்னை அணிக்கு நேற்று பந்துவீசும் ஆற்றல் வாய்ந்த 7 வீரர்கள் இருந்தார்கள். இருந்தாலும் 5 வீரர்களை மட்டுமே ருதுராஜ் பயன்படுத்தினார். மிதவேகப் பந்துவீச்சாளரான மிட்செல்லையும், சுழற்பந்து வீச்சாளரான ரச்சின் ரவீந்திராவையும் அவர் பயன்படுத்தவில்லை. இதனால் பரீட்சார்த்தமான முடிவுகளை எடுப்பதில் ஆர்வம் இல்லாதவராக ருதுராஜ் இருப்பாரோ என்ற கவலை ஏற்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கேப்டன் என்பதைவிட ஒரு பேட்ஸ்மேனாகத்தான் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருந்து சிஎஸ்கே அணி நிறைய எதிர்பார்க்கிறது. ஆனால் நேற்றைய போட்டியின் கேப்டன் ஆனதால் ஏற்பட்ட பதற்றத்தை ருதுராஜிடம் பார்க்க முடிந்தது. இதே பதற்றத்தால் பேட்டிங் ஃபார்மை இழந்ததால்தான் கடந்த 2022-ம் ஆண்டு ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது என்பதை ருதுராஜ் உணரவேண்டும்.