பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவிற்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும், டிசம்பர் 25ஆம் தேதி மியூசிக் அகாடமியில் நடத்த இருந்த கச்சேரியில் இருந்து விலகிக்கொள்வதாகவும் இசை சகோதரிகளான ரஞ்சனி – காயத்ரி தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில், “பிராமணர்கள் இனப்படுகொலையை வெளிப்படையாக ஆதரித்த, பிராமண சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் பலமுறை கேவலமான தகாத வார்த்தைகளால் அழைத்து துஷ்பிரயோகம் செய்த, சொற்பொழிவுகளில் இழிமொழியை இடைவிடாமல் பாடுபட்ட ஈவெரா போன்ற ஒரு நபரை டி.எம். கிருஷ்ணா புகழ்வதை கவனிக்காமல் இருப்பது ஆபத்தானது. அற விழுமியங்களைப் புதைத்துவிட்டு மியூசிக் அகாடமியின் கச்சேரியில் கலந்து கொண்டால் நமது ஒழுக்க மீறலுக்கு ஆளாக நேரிடும்” என தெரிவித்திருந்தனர்.
ரஞ்சனி – காயத்ரி கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் கடந்த இரு தினங்களாக இந்த சர்ச்சை பேசுபொருளாகவுள்ளது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி, ரஞ்சனி – காயத்ரியின் பெரியார் குறித்த கருத்துக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். ரஞ்சனி – காயத்ரி தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாகவும், பெண்ணிய கருத்துக்களை தான் பெரியாரிய சிந்தனைகள் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாகவும் இது தொடர்பான ஃபேஸ்புக் பதிவுகள் தொடர்பாகவும் எழுதியுள்ள எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன், “அடிப்படைகளையே அறிந்து கொள்ளாமல் கருத்துக்கள் உதிர்ப்பதில் நம் பேஸ்புக்கர்கள் வல்லுநர்கள். ஆண்டுதோறும் மியூசிக் அகாதெமி நடத்துவது பட்டமளிப்பு விழா அல்ல, அது ஓர் மாநாடு. அதில் கச்சேரிகள் மட்டுமல்ல இசை குறித்த நுணுக்கங்கள், விளக்கங்கள், ஐயங்கள் விளக்கவும் விவாதிக்கவும்படுவதுண்டு. Lecture demo என்றொரு நிகழ்வு அதில் உண்டு. அது மாநாடு என்பதால் அதற்குத் தலைமை வகிக்க ஒருவர் அழைக்கப்படுவார். தலைமை ஏற்பவருக்கு அகாதெமி சங்கீத கலாநிதி பட்டமளிக்கும்.
ஒருவரின் தலைமையை ஏற்க மாட்டேன் என நிராகரிப்பதற்கு மற்றவருக்கு உரிமை உண்டு. அரசியலில் நாம் நாத்திகரின் தலைமையை ஏற்கமாட்டோம், பிரிவினை பேசுவோரை ஏற்க மாட்டோம் என்பதில்லையா, அது போல்தான் இது. Present conflict is between the value systems.
கிருஷ்ணாவின் தலைமையை ஏற்க மறுக்கும் கலைஞர்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் அகாதெமியின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். அவர் கச்சேரிகளை இணையத்தில் கேட்டு மகிழ்ந்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே டி.எம். கிருஷ்ணாவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாசந்தி, ‘டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியுஸிக் அகதமி சங்கீத கலாநிதி விருது அளிக்கும் செய்தி அறிந்து பொங்கி எழுந்து முகநூலில் ஆட்சேபம் தெரிவித்திருக்கும் ரஞ்சனி காயத்திரியின் ரசனையற்ற, காழ்ப்புணர்ச்சி மிக்க, பகிரங்கப்படுத்தப்பட்ட பிரத்யேக கடிதமும்; அதை தொடர்ந்து சங்கிலித் தொடர்போல் கிளம்பியிருக்கும் வாதப் பிரதிவாதங்களும் சங்கீதத்தை உண்மையாக நேசிக்கும் அனைவரையும் அவமானப்படுத்துவதாக எனக்குப்படுகிறது. டி.எம். கிருஷ்ணாவின் கச்சேரிகளை இவர்கள் முழுமையாகக் கேட்டிருப்பார்களா என்றே எனக்கு சந்தேகம் வருகிறது.
தங்களது சமூகம் வலுவாகப் பேணி வந்திருக்கும் கோட்டைக்குள் இருக்கும் பொத்தல்களை, பலவீனங்களை, ஜாதி உணர்வை சுட்டிக்காட்டும் துணிச்சல் உள்ள ஒரு சிந்தனாவாதி, அவர் ஒப்பற்ற கலைஞன் என்றாலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று போர் கொடி உயர்த்தும் இவர்கள் (ரஞ்சனி – காயத்ரி) மிக மிக சாமான்யமானவர்களாக, அற்பத்தனம் உள்ளவர்களாகத் தங்களை வெளிக்காட்டிக் கொண்டிருப்பது சோகத்திலும் சோகம். அவர்கள் [ஓரளவுக்கு] இளைய தலைமுறையினர். இத்தனைக் கட்டுப்பெட்டித் தனமா? அதற்குள் தங்களைக் கட்டமைத்துக்கொண்டு இருப்பது இனறைய சூழலில் பாதுகாப்பானது என்று நினைக்கிறார்களா? அல்லது தங்களால் தான் கர்நாடக சங்கீதம் காப்பாற்றப்படும் என்று நினைக்கிறார்களா?
இந்தக் கட்டுப்பெட்டித் தனத்தைதானே கிருஷ்ணா பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறார்? பரந்துபட்ட பார்வை அதற்கு தேவை என்பதை சுட்டிக்காட்டி வருகிறார்? அவரது கருத்துகளை நீங்கள் ஏற்கவேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், அவரது சங்கீதத்தில் என்ன குறை கண்டீர்கள்? மும்மூர்த்திகளை என்று அவமானப்படுத்தினார்? அவர்களது கிருதிகளைப் பாடும்போது நெக்குருகி, தொண்டை அடைத்து, சில வினாடிகள் பாட முடியாமல் அவர் இருக்கும் தருணம் அநேகம். அவருக்கு பக்க வாத்தியம் வாசிப்பவர்களிடம் கேளுங்கள் சொல்வார்கள்.
அவர் (டி.எம். கிருஷ்ணா) ஒப்பற்ற கலைஞர் என்று நான் நம்புகிறேன். ஆன்மீக எல்லையைத் தொடும் சங்கீதம். ஒரு முறை அவர் கேதார கௌளம் ராக சஞ்சாரம் செய்தபோது பிரபஞ்சமே கட்டுண்டு நின்றது போல எனக்கு பிரமை ஏற்பட்டது. கனகதாஸரின் பாரோ கிருஷ்ணையாவை பாடும்போது நான் கண்ணில் நீர் மல்க உருகிப் போகிறேன். அவரது இசையின் மகத்துவம் அது. இசையை ஆராதிப்பவர் அவர். அறிவாற்றலும் இசையில் ஆன்மீக தேடலையும் உடையவர். அந்தத் தேடலுக்கு எல்லைகள் இல்லை. சுவர்கள் இல்லை. கண்மூடித்தனம் இல்லை. புறக்கணிப்பு இல்லை” என்று வாசந்தி பதிவிட்டுள்ளார்.
‘பெரியார்’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்துவிட்டு பல இளைஞர்கள் திராவிடர் கழகத்தில் இணைந்ததாகச் சொன்னார்கள். எனக்குத் தெரிந்த பிராமணப் பெண்மணி ஒருவர் படத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் சொன்னார்: “சின்ன வயசிலேயிருந்து பெரியாரைப் பத்தி தப்பாதான் கேட்டு நாங்க வளர்ந்திருக்கோம். ஆனால், உங்க படத்தில் பெரியாரைப் பார்த்த பிறகுதான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பது புரிந்தது. அப்படியே அவர் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணனும்ணு தோணித்து” என்றார்கள். இப்படிப் பெரியார் அதுவரை செல்லாத இடங்களில் எல்லாம் ‘பெரியார்’ படம் சென்றடைந்தது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது.