No menu items!

மயங்கிய அம்மா… உதவிய ரோஹித்… நெகிழ்ச்சியில் அஸ்வின்

மயங்கிய அம்மா… உதவிய ரோஹித்… நெகிழ்ச்சியில் அஸ்வின்

இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்காட் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500-வது விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் அந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியவில்லை. அன்று மாலையில் அவரது அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட, அவர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தார். அம்மா குணமானதும் அடுத்த நாளே கிளம்பி மீண்டும் ராஜ்காட் சென்று போட்டியில் ஆடினார். அன்று நடந்தது என்ன என்று தனது யூடியூப் பக்கத்தில் விலாவரியாக சொல்லியிருக்கிரார் அஸ்வின்.

அதிலிருந்து சில பகுதிகள்:

ராஜ்காட் டெஸ்ட் போட்டியில் 500-வது விக்கெட்டை வீழ்த்திய பிறகு, மாலையில் வீட்டில் இருந்து போன் வரும் என்று காத்திருந்தேன். ஆனால் போன் வரவில்லை. வீட்டுக்கு ஏதாவது செய்தியாளர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் பேட்டி எடுப்பதால் யாரும் போன் செய்யவில்லை என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் மாலை 7 மணி ஆகியும் வீட்டில் இருந்து யாருடைய போனும் வரவில்லை.

ஒரு கட்டத்தில் நானே என் பெற்றோருக்கு போன் செய்தேன். ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. அதனால் மனைவிக்கு போன் செய்தேன். அவர் போனை எடுத்தார். முதலில் சரியாக பேசவில்லை. அவரது குரல் உடைந்திருந்தது. ‘உங்கள் அருகில் மற்ற வீரர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டார். நான் ஆமாம் என்றதும், அவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளி வரச் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் மற்றவர்களிடம் இருந்து தள்ளி வந்துவிட்டதாக சொன்னதும், அம்மாவுக்கு தலைவலி வந்து அவர் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாகச் சொன்னார். அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை என்றும் கூறினார். எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அழுகையாக வந்தது. நான் அழுவதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

மெல்ல நகர்ந்து என் அறைக்குச் சென்றேன். என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன். உடனடியாகப் போய் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ராஜ்காட் டெஸ்ட் போட்டியில் அன்றைய சூழலில் இங்கிலாந்து அணி வலுவாக இருந்தது. இந்த சூழலில் நான் கிளம்பிப் போனால் இந்தியா 10 வீரர்களை மட்டுமே வைத்து ஆட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுமே என்று கவலைப்பட்டேன்.

அம்மாவுடன் கடைசியாக பேசிய தருணம் என் நினைவுக்கு வந்தது. மீண்டும் சென்னைக்கு போன் போட்டேன். அம்மாவுக்கு நினைவு திரும்பிவிட்டதா என்று கேட்டேன். இன்னும் நினைவு திரும்பவில்லை என்று பதில் வந்தது. ஐசியுவில் இருக்கும் அம்மாவைப் பார்க்க, டாக்டர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். ஒரு பக்கம் அம்மாவின் நினைவும், மறுபக்கம் போட்டியின் சூழலும் என் மனதை அலைக்கழித்தது. அந்த நேரத்தில் ராஜ்காட்டில் இருந்து சென்னைக்கு விமானங்கள் ஏதும் இல்லாததால் எப்படி சென்னைக்கு செல்வது என்றும் புரியவில்லை

நான் சிந்தனையில் இருந்த நேரத்தில் என் மனைவி கேப்டன் ரோஹித் சர்மாவையும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டையும் தொடர்புகொண்டு விவரத்தை சொல்லியிருக்கிறார். அவர்கள் இருவரும் என் அறைக்குள் ஓடிவந்தனர்.

நான் யோசனையுடன் இருப்பதைப் பார்த்த ரோஹித் சர்மா, “இன்னும் என்ன யோசனை செய்துகொண்டு இருக்கிறீர்கள்? உடனடியாக கிளம்பிப் போய் அம்மாவைப் பார்க்கும் வழியை பாருங்கள். நான் உங்களுக்கு தனி விமானம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
இந்த நேரத்தில் ராஜ்காட்டில் வசிக்கும் புஜாரா எனக்கு தனி விமானம் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாகவே அவரிடம் என் மனைவி பேசியிருந்த்தால் அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

விமானம் தயாராக இருப்பதாக தகவல் வந்தாலும், அணியை விட்டு எப்படி கிளம்புவது என்பது எனக்கு யோசனையாக இருந்தது. என் யோசனையைப் புரிந்துகொண்ட ரோஹித் சர்மா, ”இங்கு எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் அம்மாவை பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார். அத்துடன் அணியின் பிசியோவும் எனது நண்பருமான கமலேஷயும் என்னுடன் சென்னைக்கு செல்லுமாறு கூறினார்.

இந்திய அணிக்கு மொத்தமே 2 பிசியோக்கள்தான் உள்ளனர். அதில் ஒருவரை என்னுடன் அழைத்துச் சென்றால், அணிக்கு கஷ்டமாக இருக்குமே என்று கேட்டேன். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார் ரோஹித் சர்மா. அத்துடன் நிற்காமல் நான் சென்னைக்கு வந்து அம்மாவை பார்க்கும் வரை ரோஹித் சர்மா அந்த பிசியோவை தொடர்புகொண்டு என்னைப்பற்றி விசாரித்துக்கொண்டே இருந்தார்.

ரோஹித் சர்மா இந்த அளவுக்கு எனக்கு பக்கபலமாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவரது இந்த நல்ல மனம்தான், அவருக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுக்கிறது. ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வெல்வதற்கு அவரது இந்த குணமும் தலைமைப் பண்பும்தான் காரணம்.

இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...