சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அஜித்துக்கு மூளைப் பகுதியில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு சில நாட்கள் பிரேக் விடப்பட்டதால் அஜித் இப்போது சென்னையில் இருக்கிறார். அவர் தனது மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை கொண்டாடிய படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகின
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்குக்காக இம்மாத இறுதியில் அஜர்பைஜான் நாட்டுக்கு செல்ல அஜித் திட்டமிட்டு இருந்தார். வெளிநாட்டில் படப்பிடிப்புக்காக செல்லும்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது, அங்கு மருத்துவ காப்பீடு பெற உதவும் என்பதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அஜித்துக்கு அங்கு நடந்த முழு உடல் பரிசோதனையில், அவரது மூளையில் இருந்து உடலுக்கு செல்லும் நரம்பில் ஒரு கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இப்போது கண்டுகொள்ளாமல் விட்டால் எதிர்காலத்தில் உடல்நிலையில் பிரச்சினை வர வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மூளையில் இருந்து உடலுக்கு செல்லும் நரம்பு பாதையில் ஒரு நுண்துளை அறுவை சிகிச்சை செய்யலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
டாக்டர்களின் அறிவுரையைத் தொடர்ந்து உடனடியாக இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் சம்மதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு இப்போது அஜித் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும் அஜித்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் படப்பிடிப்புக்காக அஜித் வெளிநாடு செல்வார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.