நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வரும் கருத்துக் கணிப்புகளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்று கூடியிருக்கிறது. India TV-CNX நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் அடுத்து பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 378 இடங்களிலும், இந்தியா கூட்டணி 98 இடங்களிலும், இதர கட்சிகள் 67 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் 543 தொகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை இந்த கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த கருத்துக் கணிப்புக்காக 78,550 பெண்கள் உட்பட 1,62,900 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கருத்துக் கணிப்பின் சில முக்கிய முடிவுகள்…
பாஜகவுக்கு 335 இடங்கள்:
India TV-CNX நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ள இந்த கருத்துக் கணிப்பின்படி இன்றைய தேதியில் தேர்தல் நடந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 378 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளன. இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக 335 இடங்களை கைப்பற்றும். குஜராத் (26 தொகுதிகள்), மத்திய பிரதேசம் (29 தொகுதிகள்), ராஜஸ்தான் (25 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 74 தொகுதிகளை கைப்பற்றும்.
தமிழகத்தில் நிலவரம் எப்படி?
தமிழகத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இப்போதைய நிலையில் தேர்தல் நடந்தால் திமுக 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரியவந்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தலா 4 இடங்களை கைப்பற்றும் என்றும், பாமகவுக்கு ஒரு இடம் கிடைக்கும் என்றும் மற்ற கட்சிகளுக்கு 4 இடங்கள் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியை பாஜக கைப்பற்றும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தென்னிந்தியாவில் பலம்பெறும் காங்கிரஸ்:
தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பலம்பெற்று வருவதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 11 இடங்களையும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையிலான கூட்டணி 6 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களையும், பாஜக 5 இடங்களையும், பிஆர்எஸ் 2 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் 1 இடத்தையும் கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜக கூட்டணி 24 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 4 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.