No menu items!

எடப்பாடிக்கு கெடு விதித்த அமித் ஷா! – மிஸ் ரசியா

எடப்பாடிக்கு கெடு விதித்த அமித் ஷா! – மிஸ் ரசியா

“அதிமுகவுக்கு 6-ம் தேதி வரைக்கும் கெடு விதிச்சிருக்காராம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“யார் கெடு விதிச்சது?”

“அமித் ஷாதான். பாஜகவோட கூட்டணி கிடையாதுன்னு எடப்பாடி சொன்னாலும், அமித் ஷாவைப் பொறுத்தவரைக்கும் இன்னும் அதிமுக மேல சாஃப்ட் கார்னரோடத்தான் இருக்காரு. அதனாலதான் ஓபிஎஸ் வலிய வந்து ஆதரவு கொடுத்தாலும் இன்னும் அவரை சட்டை பண்ணாம இருக்கார். அவரைப் பொறுத்தவரை முதல் சாய்ஸ் எடப்பாடிதான். கடைசியா பாஜக கூட்டணியில இணைய அதிமுகவுக்கு அவர் 6-ம் தேதி வரைக்கும் கெடு விதிச்சிருக்காராம். ‘பாரதிய ஜனதா இந்த நிமிஷம் வரைக்கும் அதிமுகவை நண்பனாத்தான் பார்க்குது. பாராளுமன்றத்தில் அதிமுக செஞ்ச உதவிகளை நாங்க மறக்கலை. எல்லா பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக்கலாம். எல்லாத்தையும் மறந்து கூட்டணியில சேருங்க’ன்னு தூது விட்டிருக்கார். அதோட கூட்டணியில சேரலைன்னா விளைவுகள் கடுமையா இருக்கும்னும் எச்சரிச்சு தூது அனுப்பி இருக்கார். இந்த தூதுக்கு அதிமுக கிட்ட இருந்து வர்ற பதிலைப் பொறுத்துதான் பாஜகவோட அடுத்தகட்ட கூட்டணி முயற்சிகள் இருக்குமாம்.”

“யார் மூலமா இந்த தூதை அவர் அனுப்பி இருக்கார்?”

“எடப்பாடிக்கும், பாஜகவுக்கும் வேண்டப்பட்ட ஒரு முன்னாள் நீதிபதி மூலமும், தம்பித்துரை மூலமும் இந்த தூதை அமித் ஷா அனுப்பினதா சொல்றாங்க.”

“பாஜகவோட அதிமுக கூட்டணி அமைச்சா ஓபிஎஸ்ஸோட நிலை.”

“அப்படி நடக்காதுன்னு ஓபிஎஸ் நம்பறார். மீறி நடந்தா ஓபிஎஸ் நிலை பரிதாபம்தான். ஏற்கெனவே அவரை கட்சிக்காரங்களே ஒத்தை ரோசான்னுதான் கூப்பிடறாங்க.”

“அது என்ன ஒத்தை ரோசா?”

“பிரதமர் தமிழகத்துக்கு வரும்போதும், போகும்போதும் ஒத்தை ரோசாவோட அவர் விமான நிலையத்துக்கு போறதைத்தான் இப்படி கிண்டலடிக்கறாங்க. ‘நாம வலியப் போய் பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறோம். ஆனா அவங்க எடப்பாடியை விரும்பறாங்களே’ன்னு அவர் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கிடக்கிறார். ஒரு கட்டத்துல விரக்தியின் உச்சத்துக்கு போன ஓபிஎஸ், இனி பாஜகவா வர்ற வரைக்கும் அவங்களுக்கு ஆதரவா ஒரு விஷயத்தைக்கூட பேசக் கூடாதுன்னு முடிவு எடுத்திருக்கார். அவரை நம்பி வந்த டிடிவி தினகரனும் இப்ப என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காராம்.”

“பாமகவும் பாஜக கூட பேசறாதா சொல்றாங்களே?”

“அவங்க யார் கூடத்தான் பேசலை? ஒரு பக்கம் ராமதாஸ் அதிமுக கூட பேசினா, இன்னொரு பக்கம் அன்புமணி பாஜக கூட பேசறார். இது பாஜகவை டென்ஷன் ஆக்கி இருக்கு. ‘ஒரே நேரத்துல இங்கேயும் பேசுறீங்க, அங்கயும் பேசுறீங்க. இதெல்லாம் போதாதுன்னு ஒரு காலத்துல திமுக கூடயும் பேசி இருக்கீங்க. இதெல்லாம் எங்களுக்கு தெரியும். மத்திய அமைச்சர் பதவியோ, ராஜ்யசபா உறுப்பினர் பதவியோ தருவோம்னு எங்களால உத்தரவாதம் தர முடியாது. ஆனா எங்களை நம்பி வந்தா உங்க கட்சிக்கு நல்லது நடக்கும்’னு கடைசியா தெளிவா சொல்லி அனுப்பி இருக்காங்க.”

“அவங்களுக்கும் கடைசி கெடுவா?”

“கிட்டத்தட்ட அப்படித்தான். அவங்க என்ன முடிவு எடுக்கப் போறாங்கன்னு எடப்பாடியும் ஆவலா பார்த்துட்டு இருக்கார். அவருக்கு பாமகவை எப்படியாவது கூட்டணிக்குள்ள கொண்டு வரணும்னு ஆசை. பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்தா மட்டும்தான் அதிமுகவால 2 ராஜ்யசபா சீட்டை ஜெயிக்க முடியும். அதனால அவங்களோட சமாதனமா போயிடலாம்னு நினைக்கறார். பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க்கூட அவர் தயாரா இருக்கறதா சொல்றாங்க. ஆனா தேமுதிகவுக்குதான் அவர் இந்த உத்தரவாதத்தை சொல்லலை.”

“நடுவுல விசிகவுக்கும் அதிமுக தூது விட்டதா சொல்றாங்களே?”

“விசிகவுக்கு மட்டுமில்லை. மதிமுகவுக்கும் எடப்பாடி தூது விட்டிருக்கார். ஆனா கடைசி நேரத்துல கூட்டணி மாறினா மக்கள்கிட்ட கெட்ட பெயர் வருமேன்னு அவங்க பயப்படறாங்க”

“திமுக கூட்டணில விசிகவுக்கு என்ன பிரச்சினை?”

”விசிகவைப் பொறுத்தவரைக்கும் 3 சீட் வேணும்கிறதுல பிடிவாதமா இருக்காங்க. ரெண்டு சீட்தான் தர முடியும்னா அதுல ஒரு சீட் பொதுத் தொகுதில கொடுங்கனு கேக்குறாங்க. ஆனா திமுக ரெண்டுத்துக்கும் தயாரா இல்லை. ஒரு கட்டத்துல நாங்க தேர்தல்ல போட்டியிடல உங்களை ஆதரிச்சு பிரச்சாரம் மட்டும் பண்றோம்னு விசிக குழுவினர் கிளம்பிட்டாங்க”

“அப்புறம்?”

“இந்த நியூசை கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தானே திருமாவளவன்கிட்ட பேசியிருக்கிறார். எல்லா பிரச்சினையையும் சரி செஞ்சிடலாம். கொஞ்சம் பொறுங்கனு சொன்னாராம்”

“அவர் என்ன தீர்வு வச்சிருக்கிறார்?”

“விசிக பொதுத் தொகுதில போட்டி போட்டா ஜெயிக்க முடியாதுனு திமுக முன்னணித் தலைவர்கள் ஸ்டாலின் கிட்ட சொல்லியிருக்காங்க. முதல்வரை பொறுத்தவரைக்கும் கூட்டணிக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வந்திடக் கூடாதுனு பார்க்கிறார். அது மட்டுமில்லாம முன்னாடி பாஜக கூட அதிமுக இருந்தது. அதனால இந்தக் கட்சிகள் அந்தப் பக்கப் போக மாட்டாங்கனு உறுதியா சொல்ல முடியும். ஆனா இப்ப அப்படியில்லனு கட்சிக்காரங்ககிட்ட சொல்லியிருக்கிறார்”

“கடைசில என்னவாகும்?’

“விசிகவுக்கு ரெண்டு தொகுதி கிடைக்கும் அதுல ஒண்ணு பொதுத் தொகுதியாக இருக்கலாம்”

“விசிக இத்தனை பிடிவாதம் பிடிக்க என்ன காரணம்?”

”அந்த கட்சியின் புதுவரவான ஆதவ் அர்ஜுனா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்கிற பேச்சு திமுகவில் வரத் தொடங்கி இருக்கு. லாட்டரி மார்டின் வாரிசான இவருக்காக்தான் விடுதலை சிறுத்தைகள் இவ்வளவு பிடிவாதமா இருக்காங்கனு பேச்சு இருக்கு. அவர்கிட்ட வைட்டமின் ப இருக்கு. அந்த வைட்டமின் தேர்தல் நேரத்துல தேவைதானே”

”காங்கிரஸ் கூட பிரச்சினை முடிஞ்சிருச்சா?”

“அங்க கமலுக்காக பிரச்சினை நீண்டுக்கிட்டு இருக்கு. கமல் 2 சீட் கேக்குறார். காங்கிரஸ்கிட்டருந்து ரெண்டு தொகுதியை வாங்கிக் கொடுத்திரலாம்னு நினைச்சாங்க. ஆனா அவங்க ஒத்துக்கல. பஞ்சாயத்து ராகுல் காந்திக்கிட்ட போயிருக்கு. அதிமுககூட கூட்டணி வச்சுக்கலாமானுகூட கேட்டிருக்காங்க. அவர் டென்ஷனாகியிருக்கிறார். திமுக நமக்கு ரொம்ப முக்கியமான நட்பு கட்சி. அதனால அவங்க சொல்ற மாதிரி நடந்துக்குங்கனு சொல்லிட்டாராம்”

“அப்போ பந்து மீண்டும் திமுககிட்டயே வந்துருச்சா?”

“ஆமாம். முதல்வரும் நானே எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்டுகள் கோபித்துக் கொண்ட போதுகூட முதல்வர்தான் தலையிட்டு சமாதானம் பண்ணியிருக்கிறார். இப்போ காங்கிரஸ், விசிக. இந்த முறை தொகுதிப் பங்கீடு எல்லாம் நேரடியா முதல்வர் பார்வையிலேயே நடக்குது”

”நிர்மலா சீதாராமன் பாண்டிச்சேரில நிக்கப் போறதா செய்தி வந்திருக்கே”

“ஆமாம். இப்ப அவங்க ராஜ்ய சபா உறுப்பினரா இருக்காங்க. பாண்டிச்சேரி சேஃபான தொகுதினு அங்க நிக்க வைக்க முடிவு செஞ்சிருக்காங்க. தமிழிசை அங்க நிக்கிறதுக்காக மேலிடத்தில கேட்டாங்களாம். கவர்னரா இருந்த இடத்துல நீங்க போட்டியிட்டா நல்லாருக்காதுனு மேலிடத்துலருந்து பதில் வந்திருக்கு. கன்னியாகுமரில விஜயதரணி போட்டிப் போடுறாங்க. திருநெல்வேலில தமிழிசைக்கு சீட் கிடைக்கலாம். இல்லனா அவங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்து மத்திய அமைச்சராக்கிடுவாங்க”

”அப்போ பொன்.ராதாகிருஷ்ணன்?”

“கவர்னர் பதவிக்கு சொல்லியிருக்காங்க. ஆனா அவர் அது வேண்டாம்னு சொல்லியிருக்கிறார்னு ஒரு நியூஸ் இருக்கு பார்ப்போம்”

”பாஜகவுல ரிட்டயர்ட் ஆனா கவர்னர் பதவி போல”

“ரெகுலர் அரசியல்வாதிகளைவிட கவர்னர்கள்தாம் இப்ப நிறைய அரசியல் பண்றாங்க. அதனால ரிட்டயர்மெண்ட் பதவி இல்லை அது இப்போ” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...