பிரதமர் மோடி சென்னை வந்திருக்கிறார். ஐந்து நாட்களுக்கு முன்பும் தமிழ்நாடு வந்திருந்தார். அப்போதும் கூட்டணி முடிவாகவில்லை. இப்போதும் கூட்டணி முடிவாகவில்லை.
கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் பாஜக பல முறை தேர்தல்களை சந்தித்திருக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல்தான் மதிமுக, தேமுதிக, பாமக, தமாகா போன்ற கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தது. அதில் அதற்கு வெற்றிதான். இரண்டு இடங்கள் இந்த கூட்டணிக்கு கிடைத்தது. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெற்றார். தர்மபுரியில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் வென்றார். பாக்கியிருந்த 37 இடங்களையும் தனித்துப் போட்டியிட்ட அதிமுக வென்றது. மோடியா லேடியா என்று ஜெயலலிதா கேட்ட அந்தத் தேர்தலில் வென்றது லேடிதான். திமுகவுக்கு கிடைத்தது பூஜ்யம். இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு தனித்து 5.5 சதவீத வாக்குகள் கிடைத்தன.
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது கலைஞரும் இல்லை. ஜெயலலிதாவும் இல்லை. எடப்பாடி, ஓபிஎஸ் அதிமுகவுடன் கூட்டணி கண்டது பாஜக. கூடவே பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் போன்ற கட்சிகள். கூட்டணி பலமாக இருந்தும் பலத்த அடி. இந்தக் கூட்டணி போட்டியிட்ட 39 இடங்களில் ஒரே ஒரு தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் ஜெயித்தார். பாக்கியிருந்த 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 3.6 சதவீத வாக்குகள்.
இப்போது அடுத்த தேர்தல் வந்துவிட்டது. ஆனால் பாஜகவுக்கு இதுவரை கூட்டணி அமையவிலை. ஜி.கே.வாசன் மட்டும் நட்பு மாறாமல் பாஜகவுடன் இருக்கிறார். எடப்பாடி எட்டிப் போய்விட்டார். பாமகவும் தேமுதிகவும் உள்ளே வெளியே ஆடிக் கொண்டிருக்கின்றன.
இந்தத் தேர்தல் பாஜகவுக்கு முக்கியமான தேர்தல். தமிழ்நாடு குறித்து பாஜக கவலைப்படவில்லை, வட மாநிலங்களின் வெற்றியே போதுமானது என்று வெளியில் கூறினாலும் தமிழ்நாட்டில் பாஜக அழுத்தமான முயற்சிகளை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறது. அதன் பலன் தெரிய வேண்டிய தேர்தல்.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை, பிரதமர் மோடியின் பல பயணங்கள், மாற்றுக் கட்சியிலிருந்து வரும் முக்கியஸ்தர்கள் என பல தரப்பு விஷயங்கள் இருந்தும் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் வெல்ல மோடி தமிழ்நாட்டின் லேடியல்ல.
ஆங்கிலம், தமிழ் என இதுவரை வந்துள்ள பல கருத்துக் கணிப்புகள் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 15 முதல் 18 சதவீத வாக்குகளைக் கொடுத்து வாய் பிளக்க வைத்திருக்கினன.
இத்தனை பெரிய வாக்கு சதவீதம் உள்ளது என்று கருத்துக் கணிப்புகள் சொல்லியும் கூட்டணிக்கு கட்சிகள் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் இரண்டு விதமான எண்ணங்கள் இருக்கின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதைவிட மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையில் உள்ள பாஜகவுடன் கூட்டணி வைப்பது நல்லது என்ற குரல்கள் ஒலித்திருக்கின்றன. ஆனால் பாஜகவுடன் இணைந்து வாக்கு சதவீதம் குறைந்தால் ஏற்கனவே தேர்தல் அரசியலில் பலவீனப்பட்டு இருக்கும் பாமகவுக்கு மீண்டும் ஒரு சறுக்கலாக இருக்கும். அதனால் இப்போது இருப்பது போல் அதிமுக கூட்டணியிலேயே தொடரலாம் என்பது மற்றவர்களின் எண்ணமாய் இருக்கிறது.
தேமுதிகவுக்கும் இதே நிலைதான். விஜயகாந்த் இல்லை. அவர் மேல் உள்ள அனுதாபம்தான் இருக்கிறது. அது வாக்குகளாக மாறுமா என்ற நிச்சயம் இல்லை. இந்தத் தேர்தலில் வாக்குசதவீதத்தை உயர்த்தாவிட்டால் கட்சி நடத்துவதே சிரமம். தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வாக்குசதவீதம் குறைந்தால் என்ன ஆவது என்ற கவலை அதற்கு இருக்கிறது.