No menu items!

வெயிட் அதிகம் போட்டுட்டிங்களா? என்ன செய்யணும்?

வெயிட் அதிகம் போட்டுட்டிங்களா? என்ன செய்யணும்?

இன்று உலக உடல் பருமன் விழிப்புணர்வு நாள்…

உடல் பருமன் என்பது என்ன? ஏன் ஏற்படுகிறது? தடுக்க அல்லது குறைக்க என்ன வழி? பொது நல மருத்துவர் அ.ப. பரூக் அப்துல்லா அட்வைஸ்….

‘உடல் பருமன்’ என்பது உடலில் சாதாரணமாக இருக்க வேண்டிய அளவை விட கொழுப்பு அதிகமாக சேர்வதால் உண்டாகும் ஒரு நோய் நிலை.

உடல் பருமன் ஏன் ஏற்படுகிறது?

நமது உடல், நாம் உண்ணும் உணவில் நமது தேவைக்கும் எஞ்சியதை கொழுப்பாக மாற்றி சேமிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் உணவு கிடைக்காத சூழ்நிலை பஞ்சங்களின் மூலம் உருவானால் அப்போது உடலில் இப்படி சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பை எரித்து உயிர் வாழத் தேவையான சக்தியைப் பெறும். ஆக, கொழுப்பை உடலில் சேமித்து வைத்தல் என்பது நமது உடல் இயங்குவியலில் நார்மலான நிகழ்வே. ஆயினும், அது எல்லை மீறும் போது நோய் நிலையாக உருவெடுக்கிறது.

தற்காலத்தில் பஞ்சங்கள் ஏற்படுவதில்லை… பட்டினி எனும் நிலை இல்லை; அதற்கு நேர் எதிராக காணும் திசையெங்கும் மலிவான விலையில் இனிப்புகள் / பண்டங்கள் / ஃபாஸ்ட் ஃபுட் / குளிர் பானங்கள் என விற்கிறது.

நம் உணவு முறையும் தானியங்கள் சார்ந்த அதிக மாவுச்சத்து உணவு முறையாக இருக்கிறது.

உடல் உழைப்பும் இப்போது குறைவு; தேவையும் இல்லை. உடல் உழைப்பு செய்ய நேரமும் இல்லை எனும் அளவில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை – இதன் விளைவாக உடலில் சேரும் கொழுப்பைக் கரைக்கவும் வழியில்லாமல் மேலும் மேலும் உடல் எடை கூடுகிறது. உடலில் கொழுப்பு சேருகிறது.

உடல் எடை கூடுகிறது என்று கூறியவுடன், நமது பார்வை அனைத்தும், இதற்கு காரணம் நம் உணவில் சேர்க்கும் கொழுப்பு – கொலஸ்ட்ரால் என்றுதான் செல்லும்…

அது தவறான பார்வை…

நாம் அளவுடன் உண்ணும் பால், பால் பொருட்கள், மாமிசம், முட்டை, மீன் ஆகியவற்றால் உடலில் கொழுப்பு சேருவதில்லை.

சீனி / நாட்டு சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி / தேன் என பல வடிவங்களில் நாம் உண்ணும் இனிப்பு; அரிசி / கோதுமை / சிறுதானியம் என தானியங்கள்; பேக்கரி தீனிகள், குளிர் பானங்கள், பழச்சாறுகள், அதிகமாக உண்ணும் இனிப்பான பழங்கள் – ஆகியவை தான் உடலால் கொழுப்பாக உருமாற்றம் பெற்று சேமித்து வைக்கப்படுகின்றன.

உடல் பருமனில் ஆபத்தான நிலை எது?

உடல் பருமனைப் பொருத்தவரை மைய உடல் பருமன் (CENTRAL OBESITY), சுற்றுப்புற உடல் பருமன் (PERIPERAL OBESITY) என்று இருவகை உண்டு. சுற்றுப்புற உடல் பருமன் என்பது உடல் முழுவதும் கொழுப்பு பரவலாக தோலுக்குக் கீழ் சேமித்து வைக்கப்படும். பொதுவாக பெண்களுக்கு இந்த வகை உடல் பருமன் இருக்கும். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.

மைய உடல் பருமன் என்பது வயிற்றுப் பகுதியில், இடுப்புப் பகுதியில், பின் பக்கத்தில் கொழுப்பு அதிகமாக சேருவதாகும். இதுதான் ஆபத்தானதாகும். காரணம் இத்தகைய கொழுப்பானது தொப்பையைத் தாண்டி உடலின் முக்கிய உள்ளுறுப்புகளான கல்லீரல் – கணையம் போன்றவற்றில் படியத் துவங்கும். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு உள்ளாகி டைப் டூ டயாபடிஸ் ( நீரிழிவு), ரத்தக் கொதிப்பு, இதய நோய், பிசிஓடி போன்ற நோய்களும் உருவாகின்றன.

உடல் பருமனை தடுக்க என்ன வழி?

மேலே நாம் பார்த்த நோய்களுக்கெல்லாம் ஆதி ஊற்றாக இருப்பது, இன்சுலின் எனும் ஹார்மோனை தேவைக்கும் மீறி அடிக்கடி தூண்டிக் கொண்டே இருப்பதாக உள்ள நமது உணவு பழக்கம்தான்.

எனவே, இன்சுலினை அதன் அளவில் கட்டுக்குள் வைக்க மாவுச்சத்து குறைவான உணவுகளை சாப்பிட்டு, புரதச்சத்து மற்றும் நல்ல கொழுப்புச் சத்து உணவுகளை அச்சமின்றி சாப்பிட்டு வரவேண்டும். அத்துடன் தினசரி ஒரு மணிநேரம் உடல் பயிற்சி, நீண்ட மற்றும் தரமான உறக்கமும் அவசியம். உறக்கம் சரியாக அமையாதோருக்கு கார்டிசால் எனும் ஹார்மோன் சுரந்து கொண்டு இருக்கும். இதன் விளைவாக உடல் எடை குறையாமல் கூடும் முகமாகவே இருக்கும்.

ஆம், உடல் பருமனை சரிசெய்ய முதலில் உணவு முறையை சரி செய்ய வேண்டும். இரண்டாவது ‘உடல் பயிற்சி’; மூன்றாவது ‘உறக்கம்’.

இந்த மூன்றும் தவிர நான்காவது ‘உளநலன்’ – மன அழுத்தத்தை போக்கும் வழிகளை அடைய வேண்டும். இவை அனைத்தையும் கூட்டாக முயற்சி செய்தால் கட்டாயம் உடல் எடை நன்றாகக் குறையும்.

இதுவரை கூறிய காரணங்களன்றி உடல் பருமனுக்கு அரிதான மரபணுக் காரணிகளும் உண்டு. அவற்றைக் கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.” என்கிறார் மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...