2017-ம் ஆண்டில் ஆரம்பித்தது ‘இந்தியன் 2’ படம். இதன் ப்ரீப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்த பிறகு 2019-ல் ஷூட்டிங்கை தொடங்கினார் ஷங்கர். கமலும் உற்சாகமாக நடித்தார்.
அடுத்தடுத்து பிரச்சினைகள். இதனால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் கொடுத்த தெம்பினால், ஷங்கரும், கமலும் மீண்டும் ’இந்தியன் 2’ பற்றி பேச ஆரம்பித்தார்கள்.
இப்பொழுது படம் அடுத்த மாதம் முடிவடையும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இதுவரை எடுத்ததைப் போட்டு பார்த்திருக்கிறார்கள். ஒரு வெப் சீரிஸ்ஸின் ஒவ்வொரு எபிசோடும் 30 நிமிடங்கள் ஓடுமளவிற்கு பத்து எபிசோட் அளவுக்கு படத்தின் நீளம் இருந்திருக்கிறது.
அதிர்ச்சியான ஷங்கர் வழக்கம் போல தனது ‘மாத்தி யோசி’ ஃபார்மூலாவில் படத்தை இரண்டுப் பாகங்களாக பிரித்துவிடலாம் என ஐடியா கொடுக்க, கமலும் அதை ஒப்புக்கொள்ள, தயாரிப்பு நிறுவனமும் ஷங்கருக்கும் கமலுக்கும் பேசிய தொகையை விட கொஞ்சம் கூடுதல் சம்பளம் கொடுத்து ஷூட்டிங்கை நடத்த ஆரம்பித்தது.
’இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ -க்கான ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. மேலும் இப்படத்தில் நடித்த விவேக் மறைந்ததால் அவரது காட்சியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்தும் வேலைகள் நடக்கிறதாம்.
பொதுவாக ஷங்கர் படங்களுக்கு ப்ரீ-ப்ரொடக்ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு அதிக காலம் பிடிக்கும். இதனால் அந்த வேலைகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் ஷூட்டிங் தொடர இருக்கிறது.
இந்தமுறை ஷங்கர் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு. இந்தியன் சேனாதிபதியை மக்கள் கொண்டாடும் ஒரு பாடல் காட்சியாக இருக்குமாம்.
இதற்காக ஹவுசிங் போர்ட்டில் ஷூட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர். சென்டிமெண்ட்டாக கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பில்தான் ஷங்கர் ஷூட் செய்வது வழக்கம். ஆனால் அங்கு இப்போது சூழல் இல்லை என்பதால், வடசென்னையில் ஷூட் செய்ய இருக்கிறாராம்.
வழக்கமாக தெருக்கள், ரயில் என ஒட்டுமொத்தமாக பெயிண்ட் அடித்து கலக்கும் ஷங்கர் இந்த முறை ’மெட்ராஸ்’ பட பாணியில் சுவர் சித்திரம் வரைய சொல்லியிருக்கிறாராம்.
இதற்காக சேனாதிபதி படம் வரையும் வேலைகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ஒரு வாரம் வடசென்னையில் ஷூட்டிங் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
’இந்தியன் 2’ படத்தின் வெளியீடும் ஏப்ரல் மாதத்திலிருந்து தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக ஷங்கர் தரப்பில் கூறப்படுகிறது. ஒரே காரணம் தேர்தல்தானாம்.
4 தாறுமாறு ஹிட். கலக்கும் மல்லுவுட்
2024 பிறந்து 50 நாட்களை கடந்தாகிவிட்டது. சினிமாவில் இப்பொழுதான் வெற்றிக் கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த ஹிட் ரேஸில் முந்திக்கொண்டிருக்கும் மலையாள திரையுலகம் வரிசையாக 4 தாறுமாறு ஹிட்களைக் கொடுத்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
எந்தவித விழாக்களும் இல்லாமல் போனதால் ஏற்கனவே மார்க்கெட் டல்லடிக்க, இப்போது மற்றொரு பக்கம் பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்புகளுக்கு பரீட்சை
இதனால் புதியப் படங்களை வெளியிட பல தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தயக்கம் காட்டிவரும் சூழலில், மலையாள சினிமா உத்வேகமளிக்கும் வகையில் படங்களைக் கொடுக்க, இப்போது ரசிகர்கள் அதைப் பார்க்க திரையரங்குகளுக்குப் படையெடுத்து இருக்கிறார்கள்.
மூன்று படங்கள் ஏற்கனவே கொண்டாடப்பட்டு வரும் சூழலில், இப்போது மற்றுமொரு படமும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது.
முதல் படம் ‘அன்வெஷிப்பின் கண்டெத்தும்’ [Anweshippin Kandethum]. டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப்படம் வெளியான போதே அருமையான விமர்சனத்தைப் பெற்றது. காவல்துறையின் சட்டம், க்ரைம் என மறுபக்கத்தை காட்டியிருக்கும் படம். பொழுதுபோக்கிற்கு உத்திரவாதமான படம்.
அடுத்து ’ப்ரேமலு’ நஸ்லீன் மற்றும் மமிதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் கேரளாவைத் தாண்டி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. காதலில் விழச்செய்யும் மற்றுமொரு படம். பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. அநேகமாக இந்தப் படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. எப்படியும் ஒடிடி தளங்களில் இந்தப்படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டுவிடும் என்பது உறுதி.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்திருக்கும் ‘பிரம்மயுகம்’. கருப்பு வெள்ளையில் வந்து டிஜிட்டல் தலைமுறைக்கு ஆச்சர்யமூட்டியிருக்கும் படம். மம்முட்டியின் இந்த முயற்சிக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நான்காவதாக, ‘மஞ்சுமல் பாய்ஸ்’ [Manjummel Boys]. இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் அடிப்பொலி என்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பாராட்டி ஒரு ட்வீட்டையும் போட்டிருக்கிறார். கோடைக்கானலுக்குப் போகும் ஒரு நண்பர்கள் குழு. அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சினைகள். இதுதான் படம். ஆனால் சுவாரஸ்யமாக இருக்கிறது என விமர்சனங்கள். இது சர்வைவல் த்ரில்லர் வகையறா படம்.