No menu items!

எஸ்.பி.வேலுமணி பாஜக போகிறாரா? – மிஸ்.ரகசியா

எஸ்.பி.வேலுமணி பாஜக போகிறாரா? – மிஸ்.ரகசியா

ரகசியாவுக்காக ஆபீசில் காத்திருந்தால், அவருக்கு பதிலாக போன் கால்தான் வந்தது.

“பிரதமர் நிகழ்ச்சியில கலந்துக்க பல்லடம் வந்திருக்கேன். அதனால இன்னைக்கு போன்லதான் நியூஸ்” என்றாள்.

“ஒருவேளை பாஜகல சேர்றதா இருந்த அதிமுக பிரமுகர்கள் மாதிரி வராமலேயே எஸ் ஆயிடுவியோன்னு நினைச்சேன்.”

“சொல்லிட்டு வராம இருக்க நான் என்ன அரசியல்வாதியா?”

“ஆமாம் யார் அந்த அரசியல்வாதி? பாஜகல சேர்றேன்னு சொல்லிட்டு பாதியில நழுவினவர்?”

“எஸ்.பி.வேலுமணிதான் அந்த நபர்னு ஒரு பேச்சு இருக்கு. கடந்த ஆட்சிக் காலத்துல இருந்தே அவருக்கும் பாஜக தலைவர்களுக்கும் நல்ல நட்பு இருந்திருக்கு. அந்த நட்பை வச்சு அவரை வளைக்க அண்ணாமலை முயற்சி செஞ்சதாவும், இந்த விஷயம் எடப்பாடி காதுக்கு போய் இணைப்புக்கு முன்ன அவரை சமாதானப்படுத்தினதாவும் சொல்றாங்க.”

“ஆனா அதிமுக தலைவர்கள் சிலர் அது எஸ்.பி.வேலுமணி இல்லைன்னு மறுக்கறாங்களே…”

“அப்படி சொல்றவங்க எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள். ஒரு சம்பவத்தை சொல்றேன் கேளுங்க. ரெண்டு மூணு மாசம் முன்னாடி ஒரு உயரதிகாரி வீட்டு கல்யாண ரிசப்ஷன் கோவைல நடந்தது. அதுக்கு எடப்பாடியும் எஸ்.பி.வேலுமணியும் வந்திருந்தாங்க. அப்போ டைனிங் ரூம் சாப்பிடும்போது ‘பாஜகவுக்கு நீங்க போகப் போறிங்கனு தகவல் வருதே’னு வேலுமணிக்கிட்ட ஒப்பனாகவே எடப்பாடி கேட்டிருக்கார். இது அங்கருந்த சிலர் காதுல விழுந்துருக்கு”

“எஸ்.பி.வேலுமணி என்ன சொன்னாராம்”

“அப்படிலாம் எதுவும் இல்லனு சொல்லியிருக்கிறார். ஆனா எடப்பாடி அதை நம்பலனு கோயம்புத்தூர் அதிமுகவினர் சொல்றாங்க”

”அப்போ அவர் பாஜக போயிடுவார்னு சொல்ற?”

“வாய்ப்பிருக்குனு சொல்றேன். அவர் மீது வழக்குகள் நிறைய இருக்கு. அதையெல்லாம் சமாளிக்க பாஜக வேணும்னு நினைக்கிறார். அது மட்டுமில்லாம. நானும் கட்சில சீனியர்தான் ஆனா தனக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதில்லன்ற வருத்தமும் அவர்கிட்ட இருக்கு”

“திமுக கூட்டணி எப்படியிருக்கு?”

“திமுக கூட்டணியிலயும் புகைய ஆரம்பிச்சிருக்கு.”

“அங்க என்ன புகைச்சல்?”

“கலைஞர் நினைவிட திறப்பு விழாவுக்கு வரச் சொல்லி எல்லாருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடர்லயே அழைப்பு விடுத்திருந்தார் முதல்வர். இதைத்தவிர போன்லயும் பல தலைவர்களை அவர் கூப்பிட்டிருந்தார். ஆனா தொகுதி பங்கீட்டு பிரச்சினைகளால காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம்னு காங்கிரஸ் தலைமை அறிவுரை சொல்லி இருந்ததாம். அதையும் மீறி தங்கபாலுவும், பீட்டர் அல்போன்ஸும் இந்த நிகழ்ச்சிக்கு போயிருக்காங்க. இந்த தகவல் திமுக தலைமைக்கு போயிருக்கு. அதனாலயோ என்னமோ அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில அவங்க ரெண்டு பேரோட பெயரையும் போடாம விட்டிருக்காங்க. முரசொலியிலகூட இந்த இருட்டடிப்பு நடந்திருக்கு. அதே நேரத்துல பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணியோட பேரைப் போட்டிருக்காங்க.”

“இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியோட எல்லாம் கூட்டணியை இறுதி செஞ்ச திமுக, மத்த கட்சிகள் விஷயத்துல இன்னும் ஏன் இழுத்துட்டு இருக்காங்க?”

“கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதிமுகவும் சீட் விஷயத்துல ரொம்பவே முரண்டு பிடிக்குதாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 3 சீட் கேட்கிறாங்க. ஆனா ரெண்டுக்கு மேல தர முடியாதுன்னு திமுக ஒத்தக் கால்ல நிக்குது. அதேபோல் மதிமுகவுக்கு ஒரு சீட்தான்னு பேச்சுவார்த்தை குழு சொன்னப்ப, அவங்க வெளிநடப்பு மோட்ல வெளிய போயிட்டாங்களாம். அவங்க கோபமா இருக்கிறதா முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க. அதனாலதான் மதிமுகவை சமாதானப்படுத்தற மாதிரி கலைஞர் நினைவகம் திறப்பு விழாக்கு வந்த வைகோவை இழுத்துப் பிடிச்சு தன் பக்கத்தில் நிறுத்தியிருக்கார் முதல்வர். அதோட கூட்டணி தொகுதி பங்கீடு விஷயங்களை இனி தன்னோட பிறந்த நாளுக்கு பிறகு வச்சுக்கலாம்னும் சொல்லி இருக்கார்.”

“மாவட்ட செயலாளர்கள்கிட்ட முதல்வர் வீடியோ கான்ஃப்ரென்ஸ்ல பேசினதா சொல்றாங்களே?”

“நாடாளுமன்ற தேர்தலைப் பத்திதான் பேசி இருக்கார். இந்த தேர்தல்ல நாம 40 இடங்கள்லயும் ஜெயிச்சாகணும். இது நமக்கு கௌரவ பிரச்சினை. அதனால வேட்பாளர் யாருன்னெல்லாம் பாக்காதீங்க. பாரதிய ஜனதாவை எப்படி தோற்கடிக்கணும்கிறதை மட்டும் யோசிங்க. ஏற்கனவே சொன்னபடி எந்தத் தொகுதியிலாவது நாமோ இல்லை நம்ம கூட்டணி வேட்பாளரோ தோத்துப் போனா கடுமையா நடவடிக்கை எடுப்பேன்’ன்னு முதல்வர் பேசி இருக்கார். முதல்வரை டென்ஷன்படுத்தற மாதிரி இன்னொரு விஷயமும் நடந்திருக்கு.”

“அது என்ன விஷயம்?”’

”பொதுக் கூட்டங்கள்ல பேசற அமைச்சர்கள், பிரதமர் மோடியை விமர்சிக்க யோசிக்கிறாங்கனு ஒரு தகவல் முதல்வர் காதுக்கு போயிருக்கு. இதைக் கேட்டு அவர் ரொம்ப டென்ஷன் ஆகிட்டாராம். உடனே அமைச்சர்களை தொடர்புகொண்டு பேசின அவர், ‘மோடி பத்தி உங்களுக்கு எந்த பயமும் வேண்டாம். நானே அவரை கடுமையாத்தான் விமர்சிச்சு வர்றேன். முரசொலியிலும் நாம் அவரை கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்கிறோம். அதேபோல் நீங்களும் மோடியை கடுமையா விமர்சனம் செய்து பேசணும். இனிமேல் நீங்கள் என்ன பேசுறீங்கன்னு நான் கவனிப்பேன்’ன்னு எச்சரிக்கை செஞ்சிருக்காராம்.”

“அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் எப்படி போயிட்டிருக்கு?”

“முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், ரெண்டாவது முறையா டாக்டர் ராமதாஸை சந்திச்சு பேசி இருக்கார். பாமக 8 நாடாளுமன்ற சீட்டும் ஒரு ராஜ்யசபா சீட்டும் எதிர்பார்க்குது. ஆனா அதிமுக 7 சீட்களுக்கு மேல தர முடியாதுன்னு பிடிவாதமா இருக்குது. இந்த பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்துட்டு இருக்க, அன்புமணி ராமதாஸ் கூட்டணி பற்றி வரும் செய்திகள் பொய்னு சொல்றார். எடப்பாடியைப் பொறுத்தவரை இந்த முறை அவங்க சொல்றதை நாம கேட்கக் கூடாது. நாம சொல்றதைத்தான் அவங்க கேட்கணும். கூட்டணி இல்லைன்னாலும் நமக்கு பெரிய நஷ்டம் இல்லைன்னு சொல்லி இருக்காராம்.”

”பிரதமர் வர்றதுக்குள்ள பாஜக கூட்டணி முடிவாகிடும்னு சொன்னாங்க. ஆனா தமாகாவைத் தவிர வேற எந்தக் கட்சியும் அதிகாரபூர்வமா பாஜக கூட்டணியை அறிவிக்கலையே?”

“கூட்டணி தொடர்பா பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன்தான் ஜி.கே.வாசனை சந்திச்சு பேசி இருக்கார். ஜி.கே.வாசனைப் பொறுத்தவரை கட்சிக்கு சில தொகுதிகளை ஒதுக்கறதோட தனக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும், மத்திய அமைச்ச்சர் பதவியும் வேணும்னு கேட்டிருக்கார். பாஜக தரப்புல அவருக்கு ஏதாவது ஒரு இணையமைச்சர் பதவி கொடுக்கறதா வாக்குறுதி கொடுத்திருக்காங்க. அதைத் தொடர்ந்துதான் அவர் கூட்டணியில சேர்ந்த்தா அறிவிச்சிருக்கார். ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அதிமுக கூட்டணியைத்தான் இப்பவும் விரும்புறாங்க. யுவராஜும் அதுல ஒருத்தர்.”

“ஓபிஎஸ்சை பாஜக கூப்பிடலயா?”

“அவர்கிட்ட வேற மாதிரி பேசிட்டு இருக்காங்க. தேனி தொகுதியை ஓபிஎஸ்ஸுக்கு கொடுக்க பாஜக தயாரா இருக்கு. ஆனா இந்த அந்த சீட்ல மகனை நிறுத்தாம ஓபிஎஸ்ஸே நிக்கணும்னு பாஜக விரும்புது. ஓபிஎஸ் நின்னா அங்க ஜெயிக்கலாம்கிறது பாஜகவோட கணக்கு.”

“ஓபிஎஸ் நிப்பாரா?”

“எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி போனதால திரும்பவும் சட்டமன்றத்துக்குள்ள போக அவர் தயங்கறார். இந்த சூழல்ல அவரோட ஆதரவாளர்கள் எம்பி தேர்தல்ல நிக்கச் சொல்லி வற்புறுத்தறாங்களாம்.”

“சசிகலாவோட புது வீட்டு ஃபங்ஷன்ல அவர் ஏன் கலந்துக்கல.?’’

“கூப்டாதானே கலந்துக்க முடியும்? இந்த நிகழ்ச்சிக்கு ஓபிஎஸ்சையும், தினகரனையும் சசிகலா கூப்பிடவே இல்லையாம். அதனாலதான் அவங்களும் திட்டம் போட்டு விழா நடந்த அன்னைக்கு தேனியில ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சு அங்க போயிருக்காங்க.”

“அவங்களை ஏன் கூப்பிடல?”

“தனக்கு யாரெல்லாம் துரோகம் செஞ்சாங்கனு அவங்களுக்கு தெரியும்ல” என்று சிரித்துக் கொண்டே போனை வைத்தாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...