தெருக்கூத்துகளும், நாடகங்களும்தான் மக்களின் ஒரே பொழுதுபோக்கு என்று இருந்தது. ஆனால் பின்னால் வந்த, நவீனத்துவமிக்க இளம் கலையான சினிமா நாடகங்களை ஓரங்கட்டியது. வானொலிகளை தொலைக்காட்சிகள் பின்னுக்குத் தள்ளின. பத்திரிகைகளை இணையதளங்கள் மறக்கடிக்க செய்தன. தொலைக்காட்சிகளின் இடத்தை ஸ்மார்ட் ஃபோன்கள் பிடித்து கொண்டன. இதனால் சினிமாவின் இடத்தை இப்போது ஒடிடி தளங்கள் கைப்பற்றி இருக்கின்றன.
இதை சினிமா நட்சத்திரங்களும் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பெரிய நட்சத்திரங்கள் தங்களது வியாபார மதிப்பு ஒடிடி-யால் உயர்ந்திருப்பது நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். இதனால் இவர்களது படங்கள் ஒடிடி-யில் வருவதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் பல நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்கும் போதே, ஒடிடி-தளங்களின் அசல் தயாரிப்புகளிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒடிடி தளங்களுக்கு இடையே யார் இந்த புதிய பொழுதுபோக்கு சந்தையைப் பிடிப்பது என கடும் போட்டி. இதனால் மக்களைக் கவர சினிமா நட்சத்திரங்களுக்கு பெரும் தொகையை சம்பளமாக கொடுத்து, தங்களது தொடர்களில் நடிக்க வைக்கின்றன.
சினிமா நட்சத்திரங்களும் கிடைக்கும் வரை லாபம். மார்க்கெட் இருக்கும் போதே இந்த மாதிரி கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கல்லா கட்ட நினைக்கிறார்கள்.
இந்த ஒடிடி தொடர்களால், ஒடிடி தளங்களுக்கும் மக்களிடையே ஒரு வரவேற்பு கிடைக்கிறது. சினிமா நட்சத்திரங்களுக்கு சம்பளம் கோடி கோடியாய் கொட்டுகிறது. இதனால் இந்த இரு பக்கமும் முடிந்தவரை லாபம் அடைய பார்க்கிறார்கள்.
ஒடிடி தொடர்களில், அசல் நிகழ்ச்சிகளில் நடிக்க சினிமா நட்சத்திரங்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பதால், அவர்களது சம்பளமும் எகிற ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் ஒடிடி- தொடர்களில் நடிப்பதன் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 நட்சத்திரங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
அஜய் தேவ்கன்
பாலிவுட் நட்சத்திரம். வசீகரமான கஜோலின் காதல் கணவர். இவருக்கு இங்கே சூர்யாவும், இயக்குநர் ஹரியும் இணைந்து கொடுத்த ‘சிங்கம்’ கைக்கொடுத்திருக்கிறது. சிங்கம் ஹிந்தி ரீமேக்கில் நடித்ததன் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக தன்னை தக்க வைத்து கொண்டிருக்கிறார் அஜய் தேவ்கன்.
இவர் இப்போது ஒடிடி தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ‘ருத்ரா’ என்ற ஒடிடி தொடரில் இவர் நடித்திருக்கிறார். இந்த தொடரின் ஒரு எபிசோடில் நடிக்க இவருக்கு 18 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது 30 நிமிடம் முதல் 50 நிமிடம் வரை ஓடும் ஒரு எபிசோடில் நடிக்க 18 கோடி. இதன் மூலம் இத்தொடரில் நடிக்க இவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் சுமார் 125 கோடி என்கிறார்கள்.
சைஃப் அலிகான்
இந்திய ஒடிடி துறையில் முதன் முதலாக ஒரு அதிர்வைக் கிளப்பிய ஒடிடி தொடர் ‘சாக்ரெட் கேம்ஸ்’. அட இப்படியும் ஒரு தொடரில் பரபரப்பை உருவாக்க முடியுமா என யோசிக்க வைத்த ஒடிடி தொடர்.
இத்தொடரின் முதல் சீசனில் சைஃப் அலிகான் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த தொடரில் நடிப்பதற்காக சைஃப் அலிகான் வாங்கிய சம்பளம் சுமார் 15 கோடியாம்.
ஷாகித் கபூர்
ஒடிடி தொடர்களும் சினிமாவை போல் இருக்கும் என்ற உணர்வை மக்களிடையே கடத்திய ஒன்றாக அமைந்த தொடர் ‘பர்ஸி’. இதில் ஷாகித் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த ஷாகித் கபூர் இத்தொடரில் நடிக்க 30 கோடி சம்பளம் என்றதும், கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.
நீண்ட நாட்களாக சொல்லிக்கொள்கிற மாதிரி ஹிட் படம் அமையாத வருத்தத்தில் இருந்த ஷாகித் கபூருக்கு இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
மனோஜ் பாஜ்பாய்
சின்னத்திரை தொடர்களில் நடித்து, பிறகு பெரியதிரை நட்சத்திரமாக ச்பெயரெடுத்தவர் மனோஜ் பாஜ்பாய். சினிமாவுக்குள் வந்தவருக்கு ஒடிடி-யும் நல்ல வாய்ப்பாகவே தெரிந்தது. இதனால் இவர் ஒடிடி தொடர்களில் நடிக்க தயாராகவே இருக்கிறார். இருந்தாலும் இவரது சம்பளம் கோடிகளில்தான் இருக்கிறது.
சமந்தாவா இப்படி என்று எல்லோரையும் கேட்க வைத்த ‘த ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாவது சீசனில் மனோஜ் பாஜ்பாய் நடித்தார். இவரது கதாபாத்திரம் நன்றாக பேசப்பட்டது.
இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய்க்கு சம்பளமாக கொடுக்கப்பட்ட தொகை பத்து கோடி.
விஜய் சேதுபதி
தமிழ் ஹீரோக்களில் இருந்து ஒடிடி-க்கு ஒதுங்கிய மார்க்கெட்டில் இருக்கும் முதல் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி.
ஹீரோவாக நடித்தப் படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில், இவரை பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக்கி விட்டார்கள். இதனால் அப்படியே ஒடிடி பக்கம் போனார் விஜய் சேதுபதி. அவர் நினைத்ததைப் போலவே இப்போது ஹிந்தி மார்க்கெட்டில் விஜய் சேதுபதி முகம் பரீட்ச்சயம் ஆகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஒடிடி தொடரும், ஜவான் படமும்தான்.
‘பர்ஸீ’ தொடரில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் 7 கோடியாம்.
பங்கஜ் திரிபாதி
இவர் முன்னணி நட்சத்திரம் அல்ல. கதாநாயகனாக நடிக்கும் நட்சத்திரமும் அல்ல. ஆனாலும் இவருக்கு ஒரு வரவேற்பு இருக்கிறது. நடிப்புக்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் இவரை நடிக்க வைத்து அழகுப் பார்க்கிறது பாலிவுட்.
பங்கஜ் திரிபாதி, புகழ்பெற்ற ‘மிர்ஸாபூர்’ ஒடிடி தொடரின் இரண்டாவது சீசனில் நடித்திருக்கிறார். இதில் நடிக்க இவர் வாங்கிய சம்பளம் 10 கோடி.
நவாஸூதின் சித்திக்
பாலிவுட்டின் நடிப்பு நாயகன் இவர். நவாஸூதின் சித்திக் வில்லனாக நடித்தால் ஹீரோக்கள் தடுமாற வேண்டியிருக்கும்.
உணர்வுகளைக் காட்டி நடிப்பதில் கில்லாடி என்றாலும் இவர் வாய்ப்புகளைத் தேடி ஓடுகிற ஆள் இல்லை. இதனால் இவருக்கு என்று ஒரு மவுசு இருக்கிறது.
ஒடிடி-யில் இவர் ‘சாக்ரெட் கேம்ஸ்’ தொடரின் இரண்டாவது சீசனில் நடித்திருக்கிறார். 10 கோடி சம்பளம் வாங்கிய பின்புதான் நடித்திருக்கிறா நவாஸூதின் சித்திக்.
ராதிகா ஆப்தே
’கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தாரே அதே ராதிகா ஆப்தேதான். இவர் கதை வித்தியாசமானதாக இருந்தால், தன்னுடைய கதாப்பாத்திரம் நடிப்புக்கு வாய்ப்பளித்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயங்காத நடிகை.
மனதில் பட்ட த்தை வெளிப்படையாக கூறுவதால் இவருக்கு சினிமாவில் யாரும் வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பதில்லை. இவரும் பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கிறார்.
அப்படி இவர் நடித்த ஒடிடி தொடர் ‘சாக்ரெட் கேம்ஸ்’. இதன் முதல் சீசனில் நடித்து அதிர்வை ஏற்படுத்தியவர். இவர் ஒடிடி தொடரில் நடிக்க 4 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.
சமந்தா
சினிமாவில் முன்னணியில் இருக்கும் போதுதான் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார் சமந்தா.
விவாகரத்திற்குப் பிறகு தன்னிச்சையாக செயல்பட விரும்பியவர் மளமளவென கவர்ச்சியில் இறங்கினார். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. மையோசிடிஸ் பிரச்சினையால் சினிமாவில் நடிக்காமல் கட்டாய ஒய்வெடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
இந்த கட்டாய ஓய்வுக்கு முன்பு இவர் ’சிட்டாடல்’ என்னும் ஒடிடி தொடரில் நடித்து கொண்டிருந்தார். அதன் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை.
ஆனால் இவர் நடித்த ‘த ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க இவர் வாங்கிய சம்பளம் 4 கோடி.
’சிட்டாடலில்’ நடிக்க இவர் 5 கோடி வாங்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது
தமன்னா
சின்ன வயதிலேயே நடிக்க வந்து, சீனியர் ஹீரோக்களுக்கும் இவர் ஜோடியாக நடித்த காரணத்தினால் சீக்கிரமே சீனியர் ஹீரோயின் என்ற இமேஜூக்குள் தள்ளப்பட்டவர் தமன்னா.
சினிமாவில் வாய்ப்புகள் சரசரவென குறைய ஆரம்பிக்க, ஓடிடி தொடர்களில் கவனம் செலுத்தினார். உண்மையில் தமிழ் நடிகைகளில் ஒடிடி-யின் வரவேற்பை நன்றாக புரிந்து கொண்ட நடிகை தமன்னாதான்.
தனது நெருங்கிய தோழருக்காக வெப் சீரிஸில் நடித்த நெருக்கமான காட்சிகள் இவருக்கு ஒடிடியில் ஒரு இடத்தைப் பெற்று கொடுத்திருக்கிறது.