இந்தியா முழுவதும் பிரபலமான திரைப்பட நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார்; தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்காக மட்டுமல்லாமல் 72 வயதிலும் தன்னை இளமையுடன் பராமரிப்பதற்காகவும் மம்முட்டி வியப்புடன் பார்க்கப்படுகிறார். மெகாஸ்டாரின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன?
மம்முட்டி வாலிபால் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இப்போதும் விளையாடுவாராம். மேலும், தினமும் அரை மணிநேரம் ஒர்க் அவுட் மற்றும் ரன்னிங் தவறாமல் செய்வாராம். இந்த உடற்பயிற்சிகளுடன் உணவு கட்டுப்பாடும் மம்முட்டியின் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம்.
மம்முட்டி, உணவில் எண்ணை குறைவாக சேர்த்து, மிக அளவுடன் தான் அசைவம் எடுத்துக்கொள்கிறாராம். தனியாக சமையல்காரர் உண்டு. “மெகாஸ்டாரின் உணவுப் பழக்கவழக்கங்களே அவரது கவர்ச்சியின் பின்னணியில் உள்ள ரகசியம்” என்கிறார், மம்முட்டியின் தனிப்பட்ட சமையல்காரர் லனேஷ். இது தொடர்பாக ஒரு பேட்டியில் லனேஷ் கூறும்போது, “மம்முக்கா பொதுவாக உணவுகளை குறைவாக தான் சாப்பிடுவார்” என்கிறார். மேலும்,
“காலையில் ஓட்ஸ் கூழ், பப்பாளித் துண்டுகள், முட்டையின் வெள்ளைக்கரு, முந்தைய நாள் ஊறவைத்த பத்து பாதாம்கள் தான் மம்முக்காவின் காலை உணவு.
மதிய உணவிற்கு சாதம் சாப்பிடுவதில்லை. அதுபோல் வறுத்த பொருட்களையும் எடுப்பதில்லை. ஓட்ஸ் பொடியால் செய்யப்பட்ட அரை புட்டு முக்கிய உணவு. தேங்காய் துருவல் கொண்ட மீன் குழம்பு. மீன் வகைகளில் பச்சை குரோமைடு (கரிமீன்), கிரே முல்லட் (கனாம்பு), தட்டையான சாம்பல் முல்லட் (திருத்தா) போன்றவை அவருக்கு மிகவும் பிடிக்கும். சிறிய மீன்கள் மற்றும் தேங்காய் துருவலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கொழுவா போன்றவையும் அவருக்கு பிடிக்கும். இதனுடன் பீன்ஸ் வறுவல், மிளகுப் பொடியுடன் கூடிய வெஜிடபிள் சாலட் எடுத்துக்கொள்வார்.
மாலையில் அதிகம் சாப்பிட மாட்டார். ஆனால், அடிக்கடி பிளாக் டீ குடிப்பார்.
இரவு உணவை 7 மணிக்கு முன் முடித்துவிடுவார். கோதுமை அல்லது ஓட்ஸ் தோசை சாப்பிடுவார். ஆனால், மூன்று தோசைகள் தான், அதற்கு மேல் சாப்பிட மாட்டார். தோசையுடன், நாட்டு (நாடன்) கோழிக் கறி. மசாலா இல்லாமல் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொள்வார். அது கிடைக்கவில்லை என்றால், சட்னி அவருக்கு போதுமானது. அதன் பிறகு காளான் சூப் எடுத்துக்கொள்வார்” என்கிறார் லனேஷ்.
தினசரி இந்த உணவு ஒழுக்கத்துடன் பரந்த வாசிப்பு, அதிகமாக இசையை கேட்பது, சரியான உறக்கமும் மம்முட்டி இளமைக்கு காரணம் என்கிறார் லனேஷ்.
எதற்கு டென்ஷன் ஆகாமல் அமைதியாக இருப்பதே மம்முட்டிக்கு பிடிக்குமாம். முக்கியமாக தன் வயதை பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்வதையே அவர் அதிகம் விரும்புகிறாராம்.
மம்முட்டி டென்ஷன் ஆன ஒரு நிகழ்ச்சி பற்றி ஆர்.கே. செல்வமணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ‘மக்களாட்சி’ படப்பிடிப்பில் இரவெல்லாம் காக்க வைத்து, சீன் எடுக்கவில்லை என்ற கோபத்தில் கிளம்பிவிட்டாராம். அதிகாலை நான்கு மணி. ஆனாலும், மம்முட்டியை அழைப்பதற்கு பதில் மம்முட்டியின் மனைவியை அழைத்து நிலையை விளக்கியிருக்கிறார் செல்வமணி. “நீங்க ஷாட் ரெடி பண்ணுங்க சார்” என சொல்லி போனை வைத்திருக்கிறார் மம்முட்டியின் மனைவி சுல்பாத் குட்டி.
பத்தே நிமிடத்தில், மம்முட்டியின் கார் பாதி வழியில் திரும்பி சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறது. கோபமாக சென்றவர் சிரித்தபடியே இறங்கி காட்சிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார்.
ஆம்… மனைவியின் சொல்லை மதிப்பதும் மம்முட்டியின் இளமைக்கு காரணம் என்கிறார் லனேஷ்.